75 ஆண்டுகள் பழைமையான அமெரிக்க காமிக்ஸ் ஆர்ச்சீஸ். இந்த காமிக்ஸை அடைப்படையாக வைத்து பல தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பாலிவுட்டில் இந்த காமிக்ஸ் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது ஆர்ச்சீஸ் திரைப்படம்.


இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கத்தில் அகஸ்தியா நந்தா, சுஹானா கான், குஷி கபூர், அதிதி டாட், வேதாந்த் ரெய்னா, மிஹிர் அஹுஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள ஆர்ச்சீஸ். உலகம் முழுவதும் புகழ் பெற்ற அமெரிக்க காமிக்ஸான ஆர்ச்சீஸூக்கு மனித உருவம் கொடுத்து திரைப்படமாக வழங்கி இருக்கிறார் ஜோயா அக்தர்.


கதைக்கரு :


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது ஜான் ரிவர்டேல் என்ற பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு ரிவர்டேல் என்ற நகரத்தை உருவாக்குகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேயர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு திரும்ப, ரிவர்டேலில் இருந்த ஆங்கிலோ இந்திய மக்கள் தங்கள் நாட்டின் மேல் உள்ள அன்பின் காரணமாக ரிவர்டேடிலிலே வாழ்கின்றனர்.


ரிவர்டேலின் இதயமாக விளங்குவது அந்நகரத்தில் மையத்தில் அமைந்திருக்கும் ’க்ரீன் பார்க்’. 1960களில் அந்த க்ரீன் பார்க்கிற்கு ஆபத்து வருகிறது. அதனை அழித்து ஹோட்டல் கட்டுவதற்கான முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க ஆர்ச்சீ மற்றும் அவரது நண்பர்கள் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியின் போது நண்பர்கள் மத்தியில் சில சில மோதல்களும் தவறான புரிதல்களும் ஏற்படுகிறது. அத்தனை தடைகளையும் தகர்த்து க்ரீன் பார்க்கை மீட்டார்களா..? ரிவர்டேல் என்ன ஆனது என்பதே கதை.


மீண்டும் ஓர் முக்கோண காதல் கதை : 


பாலிவுட்டில் முக்கோணக் காதல்களுக்கு பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்திலும் ஆர்ச்சீ, பெட்டி, ரோனி மூவருக்கும் இடையிலான முக்கோணக் காதல் பேசப்படுகிறது. மேலும் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தை நினைவூட்டுகிறது. (கரண் ஜோகரும் இந்த நாவலின் ரசிகர். இந்த நாவலைத் தழுவி காட்சிகள் வைத்துள்ளார்) முக்கோணக் காதல், ஃபேன்சி உடைகள், ஸ்டார் கிட்ஸ் போன்றவை இடையிடையே பல பாலிவுட் படங்களை நினைவூட்டுகின்றன.


பெட்டி - ரோனி இடையிலான நட்பு : 


பொதுவாக ஜோயா அக்தரின் திரைப்படங்களில் அழகான நட்பைக் காட்டியிருப்பார். அந்த வகையில் ஆர்ச்சீஸ் திரைப்படத்தில் பெட்டி கூப்பர் (குஷி கபூர்), வெரோனிகா லாட்ஜ் (சுஹானா கான்) இடையிலான நட்பு ரசிக்க வைக்கிறது. உங்கள் வாழ்வில் அப்படி ஒரு நட்பு கிடைக்காமல் இருந்தால் சற்றே ஏக்கத்தை உண்டாக்கலாம்.


இசை மற்றும் காட்சி வடிவமைப்பு : 


ரெட்ரோ திரைப்படமாக உருவாகியுள்ள ஆர்ச்சீஸூக்கு அதன் இசை வலு சேர்த்துள்ளது என்றே சொல்லலாம். பின்னணி இசையிலும் பாடல்களிலும் ஒலிக்கும் கிட்டார் இசை, படத்தோடு சிறப்பாகப் பொருந்தியுள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள பேஸ்டல் தோற்றம் கண்களுக்கு இதமாக இருக்க, நடிகர்களின் உடையும் அவர்களது பாவனைகளும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது.


நடிகர்களின் நடிப்பு : 




இப்படத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா கான், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் யாரும் சிறப்பாக நடித்ததாகத் தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் கூட நடித்திருக்கலாம் என்றே தோன்றியது. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சிகளைத் தேட வேண்டியதாக இருந்தது.


படம் பார்க்கலாமா வேண்டாமா..?


காட்சிகள் பெரும்பாலான இடங்களில் யூகிக்க முடிந்ததாக இருந்தது. ஜோயா அக்தரின் மற்ற படங்களோடு ஒப்பிடாமல் ஆர்ச்சீஸை ஒரு காமிக் படமாக பார்த்தால் சற்றே மன நிறைவைத் தரலாம். காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் திரைப்படப் பிரியர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்கலாம். மழைக்கால டிசம்பர் வீக் எண்டில் சற்று ரெட்ரோ உலகுக்குள் சென்று பார்த்து வர ஆர்ச்சீஸை நிச்சயமாகப் பார்க்கலாம்!