இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராகக் கலக்கி கோலிவுட்டில் காமெடி நாயகனாக உருவெடுத்துள்ளவர் ரெடின் கிங்ஸ்லி (Redin Kingsley).


ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம்


தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை (Sangeetha) ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ளார்.


சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திடீர் திருமணம் செய்துள்ளது சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


ரெடின் கிங்ஸ்லியின் சினிமா நண்பரும் பிரபல நடிகர், டான்சருமான சதீஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் “இது எந்த பட செட்டும் இல்லை. இது உண்மை” தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 






மைசூரில் தன் நெருங்கிய நண்பர்கள், நட்பு வட்டாரத்தினர் சூழ இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா இடையே பல ஆண்டுகளாகக் காதல் இருந்ததாகவும்,  இது காதல் திருமணம் என்றும் நடிகர் சதீஷ் தனியார் ஊடகத்திடம் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.


அஜித் உடன் தொடங்கி ரெடின் கிங்ஸ்லியின் திரைப்பயணம்


1998ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் அவள் வருவாளா படத்தில் டான்சராக அறிமுகமாகி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்த ரெடின் கிங்ஸ்லி,  நயன்தாரா - நெல்சன் கூட்டணியில் உருவான கோலமாவு கோகிலா படத்தில் நடிகராக அறிமுகமானார்.


தொடர்ந்து நெற்றிக்கண், எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி, சதீஷின் கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலும் அடுத்ததாக ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகிறார்.