Viruman Movie Review: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘விருமன்’(Viruman). 


கணவனின் தவறான நடத்தையால் வேதனையின் விளிம்புக்கு செல்லும் விருமனின் தாயார் தன் மீதே தீ வைத்து தற்கொலை செய்து கொள்கிறார். இதனைக்கண்முன்னே காணும் விருமன் தந்தை மீது வன்மம்கொள்ள, அவன் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்று தன்னோடு வைத்து வளர்த்து விருமனின் மாமா. 


விருமனின் சகோதரர்கள் தந்தையிடம் வளர, சொத்துக்கு ஆசைப்படும் அவர்கள் தந்தைக்கு பயந்து விருமனை எதிர்க்கிறார்கள். அவர்களை விருமன் தன் பக்கம் எப்படிக்கொண்டு வந்தான், தன் குடும்பத்தின் மீதான அன்பையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தந்தைக்கு எப்படி உணரவைத்தான் என்பதே மீதிக்கதை. 



விருமனாக வரும் கார்த்தி நியாயமான நடிப்பை கொடுத்திருந்தாலும், அவரது அடர்த்தியான நடிப்பிற்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் பிரகாஷ்ராஜ். வன்மம் நிறைந்த கணவனாக, எரிச்சலடையும் அப்பாவாக, அதிகாரமிக்க தாசில்தாராக என எல்லா இடங்களிலும் நடிப்பில் பின்னி பிடல் எடுக்கிறார். அடுத்தபலம் சூரி. அவர் அடிக்கும் பல  கவுன்டர் `பஞ்ச்'களுக்கு தியேட்டரில் வெற லெவல் ரெஸ்பான்ஸ். 


ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகும் படம். டான்ஸ், வசனங்களிலும் அசத்தும் அவர் நடிப்பில் இன்னும் நிறைய தேற வேண்டியிருக்கிறது. கொடூர வில்லனாக பல படங்களில் மிரட்டிய ஆர்.கே சுரேஷின் வில்லத்தனம் இதில் சிரிப்பை வரவழைக்கிறது. சரண்யா பொன்வண்ணனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். 


கொம்பனுக்கு பிறகு முத்தையா கார்த்தி இணையும் இராண்டாவது படம் என்பதால் அனைவரது எக்ஸ்பெக்டேஷனும் அதுபோலவே இருக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை விருமன் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சன உண்மை. அதற்கு காரணம் இயக்குநர் முத்தையா. குறுகிய வட்டத்திற்குள் கதை சொன்னாலும், படத்தின் சில காட்சிகளிலேயே படத்திற்குள் இழுத்துச் செல்லும் அவரின்  எமோஷன் விருமனின் ஃபர்ஸ்ட் ஆஃப் முன்பு வரை மக்களுடன் கனெக்ட் ஆகவில்லை. அதுவே பெரும் பலவீனமாக அமைந்து விட்டது. 




இன்னொன்று அதரபழைய டெம்ப்ளேட்டில் கதை சொல்லி இருப்பது. சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும், அதற்கான காரணங்கள் பலவீனமாக இருப்பது.. எப்படா முடிப்பீங்க என்ற ஃபீலை ரசிகர்களுக்கு கொடுத்து விடுகிறது. படத்தில் பெண் கதாபாத்திரங்களை கனமாக கையாண்ட முத்தையா, அதிதியின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கனமாக வடிவமைத்து இருக்கலாம். துள்ளலாக பாடல்களை கொடுத்த யுவன் பின்னணியில் கோட்டை விட்டு இருக்கிறார்.