வாழ்க்கை நிலையானது அல்ல. வாழ்க்கையை நாம் திட்டமிட முடியாது. எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாழ்க்கையைக் கணிக்க முடியாது. நாம் பெரிய திட்டங்களை நம் முன் வைக்கும் நேரம், நமது உயிர் நம்மைப் பிரிந்தால் என்னாகும்? நமது திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள குறுகிய காலம் ஆகினும் நமக்கு சிறிய வாய்ப்பு கிடைத்தால் நாம் என்ன செய்வோம்? என்ற கேள்வியை ஒன்லைனாக்கி, சுவாரஸ்யமான கதையாக உருவாகியிருக்கிறது `விநோதய சித்தம்’. சமுத்திரகனி இயக்கத்தில் தம்பி ராமையா, முனிஷ்காந்த், சஞ்சிதா ஷெட்டி முதலானோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.
சென்னையின் முன்னணி நிறுவனம் ஒன்றில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றும் பரசுராமன் (தம்பி ராமையா) தனது குடும்பத்தின் தலைவர். தனது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மீது முழு அதிகாரம் செலுத்தும் பரசுராமனுக்குப் பொது மேலாளராகப் பதவியேற்க வேண்டும் என்பது 26 ஆண்டுக் கனவு. இந்தக் கனவு கைகூடும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தால் இறந்து போகிறார் பரசுராமன். தனது இறப்பிற்குப் பிறகு, `காலம்’ என்பதை மனித உருவில் சமுத்திரகனியாக சந்திக்கிறார் பரசுராமன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அவர் வாழ்வதற்காக 90 நாள்கள் அளிக்கப்படுகின்றன. அடுத்த 90 நாள்களில் தான் நினைத்தவை அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என நினைக்கும் பரசுராமனுக்கு அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நேர்கின்றன. அவற்றை பரசுராமன் எப்படி சமாளித்தார், 90 நாள்களுக்குப் பிறகு மகிழ்வோடு இறந்தாரா, என்ன நேர்ந்தது ஆகிய கேள்விகளுக்குப் பதில் தருகிறது மீதிக்கதை.
சமுத்திரகனி இயக்கத்தில் குறைந்த செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியில் இருந்தே படம் தொடங்குகிறது. எந்த பில்டப் காட்சிகளும் இல்லாமல், கதையைத் தொடங்கி, கதைக்கு வெளியே எங்கும் செல்லாமல் உருவாக்கியிருப்பது ப்ளஸ். ஒரு மெகா சீரியலைத் திரைப்படமாகப் பார்த்த அதே உணர்வை அளித்தாலும், வெறும் ஒன்றரை மணி நேரத்தில் வாழ்க்கை குறித்த தத்துவத்தை சமுத்திரகனி அளித்திருக்கிறார். அவரது முந்தைய படங்களிலும் இதே தத்துவ விளக்கம் தான் என்றாலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டன. அதனால் `விநோதய சித்தம்’ தனித்து நிற்கிறது. தம்பி ராமையா தனது ஆயுள் வேண்டும் என்று கேட்கும் போது, சிறிதும் மறுக்காமல், எந்த நிபந்தனையும் இல்லாமல் அளித்தது, சமுத்திரகனி பாத்திரம் கடவுளா, காலமா, எமனா என்ற எந்தத் தெளிவும் இல்லாமல் இருப்பது, மெகா சீரியல் பாணியிலான இயக்கம் முதலானவை இந்தப் படத்தின் மைனஸ்.
இறப்பைக் கண்முன் காட்டிவிட்டு, வாழ்வதற்கு மீண்டும் வாய்ப்பு பெறுவோர் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் கதைகளை நாம் இதற்கு முன் பல முறை பார்த்திருக்கிறோம். அப்படியொரு கதையாக உருவாகியிருக்கிறது `விநோதய சித்தம்’. தனியார் நிறுவன அதிகாரியான பரசுராமன் தனக்குக் கீழாக இருப்போர் அனைவரின் மீதும் அதிகாரம் செலுத்துகிறார். அவரால் தான் அவரைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கருதுகிறார். அந்த எண்ணத்தை மாற்றுவதாக இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. `சாட்டை’, `அப்பா’ வரிசையில் இந்தப் படத்திலும் சமுத்திரகனி - தம்பி ராமையா காம்போ சிறப்பாக வந்துள்ளது. பரசுராமனின் வாழ்க்கையில் அவர் செய்த மிகப் பெரிய தவறுகளாக, ஒருவரின் பணியைத் தட்டிப் பறிப்பதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. அவரை உயர்சாதி அடையாளம் கொண்டவராகக் காட்டியிருப்பது அரசியல் பிழை.
97 நிமிடங்களில் குடும்பத்துடன் சமுத்திரகனி வாழ்க்கை குறித்த தத்துவங்களைப் பாடம் நடத்துவதைக் கொஞ்சம் சுவாரஸ்யமான ஃபேண்டஸி கதையாகப் பார்க்க விரும்புவோர் `விநோதய சித்தம்’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.
`விநோதய சித்தம்’ Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது.