வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் ' வருஷங்களுக்கு சேஷம்' . பிரணவ் மோகன்லால் , தியான் ஸ்ரீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் , வினீத் ஸ்ரீனிவாசன் , நிவின் பாலு ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திம் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


வருஷங்களுக்கு சேஷம் ( வருடங்களுக்குப் பிறகு)




வருஷங்களுக்கு சேஷம் படத்தின் விமர்சனத்திற்குள் செல்வதற்கு முன் சில தகவல்களை தெரிந்துகொள்வது முக்கியம். இப்படத்தின் நாயகர்களில் ஒருவரான பிரணவ் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன். மற்றொரு நடிகர்  தியான் ஸ்ரீனிவாசன் பிரபல மலையாள இயக்குநர் மற்றும் நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் ஆவார். 70 முதல் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்த இந்த இருவரின் வாழ்க்கையை பல இடங்களில் இப்படம் நினைவுபடுத்துகிறது.


கதை


நல்ல கதையாசிரியர் ஆக வேண்டும் என்கிற கனவில் வேணுவும் ( தியான் ஸ்ரீனிவாசனும்) இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவோடு முரளியும் ( பிரணவ் மோகன்லால்) சென்னை கோடம்பாக்கத்திற்கு வருகிறார்கள். நெருங்கிய நண்பர்களான இவ்விருவரும் ஒரே மேன்சனில் தங்கி தங்களுக்கு கிடைத்த சின்ன சின்ன சின்ன வேலைகளை செய்து வருகிறார்கள். எப்போதும் தன்னைவிட தனது நண்பன் வேணுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாக இருக்கிறான் முரளி.


அப்படி தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை வேணுவுக்கு விட்டுக் கொடுக்கிறான். வேணு ஒரு பெரிய இயக்குநராகிறான். தனக்கு வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்த போது முரளிக்கு இருந்த பெருமை லேசாக பொறாமையாக மாறுகிறது. இந்த பொறாமை இருவருக்கும் இடையிலான பிரிவுக்கும் காரணமாகிறது. வேணுவும் முரளியும் தங்கள் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா. அப்படி சந்தித்துக் கொண்டால் அது எந்த மாதிரியான தருணத்தில் ? தங்கள் நட்பை இவர்கள் மீண்டும் எப்படி சினிமாவின் வழியாக புதுபித்துக் கொள்கிறார்கள் என்பதே வருஷங்களுக்கு சேஷம் படத்தின் கதையாகும். 


வருஷங்களுக்கு சேஷம் முதல் பாதியில் ஒரு ஜானர் பாடமாகவும் இரண்டாம் பாதியில் வேறு ஒரு ஜானராக உருவாகி இருப்பதே இப்பசத்தின் வழக்கமான கதையை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. நட்பு, சினிமா மீதான கனவு, காதல் என 70 களின் பின்னணியில் ரொமாண்டிசைஸ் ( உணர்ச்சிகளை காவியத் தன்மையின் மிகைப்படுத்துவது) செய்கிறது. ஒட்டுமொத்த படமும் இதே போல் இருந்திருந்தால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்பட்டிருக்கும்.


ஆனால் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்த மிகைப்படுத்தப் பட்ட உணர்ச்சிகளோடு சமகாலத்திற்கு ஏற்ற நகைச்சுவையை இணைத்திருப்பது படத்தை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது உண்மையில் இரண்டாம் பாதியின் நாயகன் நிவின் பாலி தான். நெப்போட்டிஸம் , எடை அதிகரித்ததற்காக உருவ கேலி செய்யப்பட்டது என சமகாலத்தில் திரைப்பட சூழலில் நிலவும் பல்வேறு விஷயங்களை நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்கள். மோகன்லாலில் இருந்து மம்மூட்டி வரை யாரையும் அதில் விட்டுவைக்கவில்லை. வினீத் ஸ்ரீனிவாசன் படங்களில் எப்போது இருப்பது போல் க்ளைமேக்ஸ் காட்சியில் நாம் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.


விமர்சனம்




வருஷங்களுக்கு சேஷம் படத்தில் வெளிப்படையாக தெரியும் சில குறைகள் என்றால் படத்தின் இசையைச் சொல்லலாம். முரளியின் கதாபாத்திரம் இசையை முதன்மையாக கொண்டது. ஆனால் அம்ரித் ராம்நாதின் இசை கதை வலியுறுத்தக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 70 முதல் 90 களிள் தமிழ் சினிமாத் துறையை மையப்படுத்தி நகரும் கதையில் ஒரு சில இடங்களைத் தவிர தமிழ் சினிமாவுக்கான எந்த ரெஃபரன்ஸும் படத்தில் இல்லை. கதை நடக்கும் பின்னணி மட்டும்தான் கோடம்பாக்கம். ஆனால் கோடம்பாக்கத்தின் 'கோ' வை கூட நாம் பார்ப்பதில்லை.


இன்று மலையாள சினிமாவில் இருக்கும் பல திரைத்துறையினரை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அவை எல்லாம் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே அதிகம் தொடர்புபடுத்திக் கொள்ளும் தன்மையில் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் கதை முழுக்க முழுக்க யூகிக்க கூடியதாக மாறிவிடுவதும் விஜயின் நண்பன் பாணியிலான கதை சொல்லலும் நகைச்சுவையைர் தாண்டி  கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன.


நடிப்பு


தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகிய ஒருவரும் தங்கள் வயதிற்கு மீறிய கதாபாத்திரங்களை மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் இருவருக்கும் இடையிலான நட்பு மட்டுமே முக்கிய அம்சமாக இருக்கிறது. அதை எல்லா இடங்களிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஆனால் பாராட்டுக்களை எல்லாம் அள்ளிச் செல்வது இரண்டாம் பாதியில் வரும் நிவின் பாலிதான். ஹாலிவுட் நடிகர் ஆடம் சாண்ட்லரை பல இடங்களில் நினைவுபடுத்தக் கூடிய வகையில் அவரது நகைச்சுவை காட்சிகள் அமைந்திருந்தன.


பெரியளவில் கதாநாயகிக்கு வாய்ப்பில்லாத படம் இது என்பதால் கல்யாணி பிரியதர்ஷனுக்கு வெகு சில காட்சிகளே கொடுக்கப்பட்டுள்ளன.விஸ்வஜித் ஒடுக்கதிலின் ஒளிப்பதிவு படத்தின் முதல் பாதியில் அதிக கவனம் பெறுகிறது. வினீத்  ஸ்ரீனிவாசனிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதே ஃபீல் குட் டிராமாவாக அமைந்திருக்கிறது வருஷங்களுக்கு சேஷம். கண்டிப்பாக இப்படத்தை தியேட்டரில் காணலாம்.