என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தான் அரசியல் புரிதலை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 


 


இயக்குநர் ராமிடம் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து வாழை படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், துருவ் விக்ரமை வைத்து படமெடுக்கவுள்ளார். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், அங்கு பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதனைப் பற்றி காணலாம். 


கேள்வி: உங்களுடைய படைப்புகள் கம்யூனிசம் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதில் சாதியம் என்ற ஒன்று இருக்கிறதே.. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? (உதாரணமாக மாமன்னன் படத்தை குறிப்பிட்டப்பட்டது)


பதில்: நீங்கள் நான் இப்படித்தான் என்ற முன் தீர்மானத்தோடு அணுகினால் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக நான் மாமன்னன் படம் எடுப்பதற்கு முன்னால் என்னைப் பார்த்திருந்தால் கூட இதே கேள்வியை கேட்டிருப்பீர்கள். இப்படி ஒரு கதையை எடுத்திருந்தால் இவனுக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கு என நினைப்பீர்கள் அல்லவா! - இவனோட வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என யோசித்திருந்தால் அதை பற்றிய புரிதல் இருந்திருக்கும். 


கேள்வி: உங்களுடைய படங்களில் சின்ன பிரச்சினையை சுற்றி தான் கதை இருக்கும். அது எப்படி தோன்றுகிறது? 


பதில்: சின்ன பிரச்சினை தானே இது என நினைப்பார்கள். அந்த சின்ன பிரச்சினை எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பது இருக்கும்ல. இதை சொல்வதற்காக மிகப்பெரிய படைப்பை எடுக்க வேண்டியதாக இருக்கிறது. 


கேள்வி: தனித்தொகுதி இருப்பதால் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவை உள்ளே செல்கிறார் என நான் நம்புகிறேன். தமிழகத்தை ஆண்ட இருபெரும் கட்சிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கியிருக்கிறதா என கேட்டால் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளது. ஆனால் அரசியல் அதிகாரம் கொடுக்கவில்லை. இதுபற்றி உங்கள் பார்வை என்ன? 


பதில்: எனக்கு தெரியவில்லை. என் வாழ்வை படைப்பாக முன்வைப்பேன். அது சக மனிதர்களுக்கு என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தப்போகிறது என்று தான் பார்ப்பேன். என்னோட அரசியல் புரிதலை என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியாக கருத்தாக்கங்கள் வழியாக நான் பயணிக்கவில்லை.  என்னோட வாழ்க்கை கொடுத்த வலியை படைப்பாக முன்வைக்கும்போது அதிர்வை ஏற்படுத்துகிறது என நம்புகிறேன்.


கட்சிகள், அரசியல் என்ன செய்யும், மாற்றம் எப்போது நடக்கும் என்பதை சொல்லக்கூடிய பக்குவத்தை அடையவில்லை. நானே பதற்றத்தில் தான் இருக்கிறேன். என்னோட வாழ்க்கை நடுக்கமான வாழ்க்கை தான். அதை சும்மா சொன்னால் பைத்தியக்காரன் என சொல்வார்கள். படைப்பாக சொல்லும்போது வருங்கால சந்ததியினர் பார்க்கும்போது என்னவாக சக மனிதர்களை பார்க்க வேண்டும் என சொல்லி கொடுக்கும். அந்த மாதிரியான விஷயங்களை நான் நம்புகிறேன்.