நடிகர் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன்,  ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விமானம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவ ப்ரசாத் யானலா இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.  தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் - கிரண் கொரப்பட்டி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் எப்படி இருக்கு எனப் பார்க்கலாம்!


கதை


சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளி அப்பா சமுத்திரக்கனி. அம்மாவை இழந்த அவரது நான்காவது படிக்கும் மகனாக நடித்துள்ள துருவனுக்கு விமானம் என்றால் கொள்ளைப் பிரியம்.




சாப்பிடாமல், தூங்காமல் விமான நிலைய காம்பவுண்டில் நின்றபடி விமானங்கள் பறப்பதை பார்த்து ரசிக்கும் துருவன், விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என எக்கச்சக்க கனவுகளுடன் வலம் வர, தன் மகனின் ஆசையை நிறைவேற்ற சமுத்திரக்கனி எந்த எல்லை வரை செல்கிறார்,  அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கதை!


நடிப்பு


பாசக்கார ஏழை அப்பாவாக சமுத்திரக்கனி நடிப்பி மிளிர்கிறார். கட்டணக் கழிப்பிடத் தொழிலை நேர்மையாக செய்வது, மாற்றுத் திறனாளிகள் வாகனத்தில் மகனை வாஞ்சையாக அழைத்துச் செல்வது, மகனுக்காக துடிதுடிப்பது என குடும்பத்துக்காக நாள்தோறும் கஷ்டப்படும் ஏழை தந்தைகளை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.


அப்பாவின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு படிப்பில் சுட்டியாக விமானக் காதலாராக மாஸ்டர் துருவன். கொஞ்சம் செண்டெமெண்ட் மேலோங்கி நடித்தாலும் கதைக்கு வேண்டியதை செய்திருக்கிறார். விமானத்தை பார்த்து ரசிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.


நிறை, குறை




அப்பா - மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படத்தில் அனுசுயா கதாபாத்திரமும் கவர்ச்சியும் தேவையற்ற திணிப்பு. மொட்டை ராஜேந்திரன் - ராகுல் ராமகிருஷ்ணா இணைந்து செய்யும் காமெடி சிரிப்புக்கு பதிலாக கடுப்பையும், கோபத்தையே வரவழைக்கிறது. சரண் அர்ஜூனின் இசை சலிப்பு தட்டுகிறது.


குறிப்பாக பின்னணி இசை சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்து வேதனைப்படுத்துகிறது. கௌரவக் கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் படத்தில் வந்து செல்கிறார்.


அளவுக்கு மிஞ்சிய சோகம்


சாதிய, வர்க்கரீதியாக, உடல்ரீதியாக என பலவிதங்களில் ஒடுக்கப்படும் மாற்றுத் திறனாளி சமுத்திரக்கனி அனுபவிக்கும் கஷ்டங்களை திரையில் காண்பித்தது பாராட்டுக்குரியது. ஆனால் உலகின் அத்தனை பிரச்னைகளையும் சமுத்திரக்கனியின் தலையில் கட்டி சோகத்தில் நம்மை முக்கி எடுக்கிறார்கள். படம் பார்க்கும் பார்வையாளர்களை அழவைக்காமல் விடுவதில்லை என இயக்குநர் சபதம் எடுத்துவிட்டு வந்திருப்பார் போலும்... கிளாசிக் சோக தமிழ் சினிமாவான துலாபாரத்தை விட சோகம் ததும்ப படம் செல்கிறது!


படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை தொடக்கம் முதல் இறுதி வரை யூகிக்க முடிகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் ஏற்கெனவே பார்த்து சலித்த கதையுடன் படம் ஊசலாடுவதால் விமானம் மேல் எழும்பாமல் தரையிலேயே தங்கிவிடுகிறது.