போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சாயா தேவி , சிராஜ் , சரவணன் , ரமா , ஜெயா பாலன், விஜய் முருகன் , ப்ரானா , எலிஸெபெத் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சார் படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


சார் பட விமர்சனம்


முன்பைக் காட்டிலும் சாதிய ஒடுக்குறைகளைப் பற்றி வெளிப்படையாக பேசும் படங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. சாதிய அரசியல் என்று இல்லாமல் பொதுவாக அரசியல் பேசும் படங்களில் ஒரு சில  படங்களைத் தவிர பெரும்பாலான படங்களில் ஒரே பிரச்சனை தொடர்கிறது. படத்தின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் அதை நல்ல திரைக்கதையுடன் சொல்வதே அடிப்படையான நிபந்தனை. காட்சி , வசனம் , பின்னணி இசை போன்ற அம்சங்களைக் கொண்டு ஒரு கதையை இயக்குநர் எப்படி மெருகேற்றப் போகிறார் என்பது தான் இந்த படங்களின் சவால். இந்த எந்த அம்சமும் கைகூடாத படம் சார்.


சார் படத்தின் கதை


மாங்கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன். தனது தந்தை போராடி கட்டிய இந்த பள்ளியை தான் நடுநிலை பள்ளியாக மாற்றியது போல் தனது மகன் ( விமல்) இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருக்கிறது. அவரது மகன் சிவஞானம் ( விமல்) . வெளியூரில் படித்துவிட்டு விருப்பமே இல்லாம சொந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். விமலின் தாத்தாவை சாமி அடித்து அவர் புத்தி பேதலித்துவிட்டதாக ஊருக்குள் ஒரு கதை வலம் வருகிறது. சின்ன வயதில் இருந்தே கிறுக்கு வாத்தியார் பேரன் என்று அவரை கூட படிக்கும் சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். அதேபோல் ஒரு கட்டத்திற்கு மேல் விமலின் அப்பாவும் மனம் பிறழ்ந்தவராக மாறுகிறார். இது விமலை உளவியல் ரீதியாக பாதிக்கிறது.மறுபக்கம் இந்த பள்ளியை எப்படியாவது இடிக்க வேண்டும் என்பது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆடுகளம் ஜெயபாலனின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு அவர் பயண்படுத்து ஆயுதம் தான் கடவுள். சாமி போகிற பள்ளிக்கூடம் இருப்பதால் தெய்வ குத்தம் ஏற்படும் என்று சொல்லி அதற்கேற்றபடி  சதிதிட்டங்களை தீட்டுகிறார். 


தலைமுறை தலைமுறையாக தனது குடும்பத்தின் மேல் இருக்கும் அடையாளம். மறுபக்கம் தனது தந்தையின் லட்சியம் என இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் விக்ரம். விமல் தனது அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றினாரா என்பது மீதி கதை.


விமர்சனம்


முன்பே சொன்னது போல் ஒரு நல்ல கதைக்கு தேவையான எல்லாம் அம்சங்களும் சார் படத்தில் இருக்கின்றன. ஒரு சின்ன கிராமத்தில் ஒரு பள்ளி உருவான வரலாறு. அதை அழிக்க நினைக்கும் ஆதிக்க சாதியினர். இவர்களுடன் போராடி கல்வியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க நினைக்கும் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். தந்தை மகன் இடையிலான கருத்து வேறுபாடு , கடவுளின் பெயரால் நடக்கும் மோசடி இப்படி பல விஷயங்கள் கதையில் பேசப்பட்டு இருக்கின்றன. ஓடும் நீலில் கைவைத்தது போல் இயக்குநர் எல்லாவற்றையும் மேலோட்டமாக தொட்டுச் சென்று தான் பேச வந்த அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். 


யார் என்ன கதாபாத்திரம் என்று தெரிவதற்கு முன்பே அவர்கள் ரொம்ப ரீசியஸாக வசனம் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். கதைக்கு எந்த விதத்திலும் பயண்படாத ரொமான்ஸ் காட்சிகள் முதல் பாதியை நிரப்புகின்றன. இந்த காட்சிகளை நீக்கி. விமலின் மனநிலை என்னவென்பதையும் அவருக்கும் அவர் தந்தைக்குமான உறவை இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருக்கலாம்.


படத்தில் விமலின் நண்பராக சிராஜ் நடித்துள்ளார். வில்லன் என்பதற்கான எல்லாம் அடையாளங்களையும் வைத்துக்கொண்டு கடைசிவரை அவர் நல்லவர் என்று நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெயபாலன் ஒரு சில காட்சிகளில் மிரட்டலான வில்லனாக வந்து செல்கிறார்.


விமலின் தந்தையாக வரும் சரவணம் நடிப்பில் தனது முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்றாலும் அவர் சொல்ல வரும் எமோஷன் நமக்கு கடத்தப்படுவதே இல்லை. முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் படம் தான் பேசவந்த பிரச்சனைக்குள் போகிறது. ஆனால் நேரம் இல்லாமல் எல்லாவற்றையும் அவசர அவசரமாக சொல்லிவிட்டு க்ளைமேக்ஸ் நோக்கி நகர்கிறது.


மிகைப்படுத்தப்பட்ட பின்னணி இசை கரும்பு மிஷினில் மாட்டியது போல் சோகத்தை பிழிந்து எடுக்க முயற்சிக்கிறது. ஒரு சில காட்சிகளில் டப்பிங் பிரச்சனை என்றால் பரவாயில்லை.தொடக்கத்தில் இருந்து கடைசிவரை நான் சிங் தான். இனியன் ஜே ஹரிஷின் ஒளிப்பதிவு படத்தின் ஒரு பிளஸ். சாமி வரும் காட்சிகளையும் , பீரியட் காட்சிகளையும் அவர் உருவாக்கி இருக்கும் விதம் கதைக்கு ஒரு ஸ்ட்ராங்கான பிம்பத்தை தருகின்றன.


கல்வியின் முக்கியத்துவத்தையும் அந்த கல்வியை கடவுளின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யும் சதியைப் பற்றி பேச நினைத்திருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட் . ஆனால் கதையை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்கிற நோக்கத்தை தாண்டி உறுதியான கதாபாத்திரங்களை படைத்திருக்க வேண்டும்