பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய துணிவு படம் வெளியாகியுள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது?,  இது ஹெச்.வினோத்தின்தரமான செய்கைதானா என்பதை விமர்சனம் வாயிலாக பார்க்கலாம். 


வங்கி கொள்ளையை அடிப்படை கதையாக கொண்டு உருவான இந்த கதையில், மாஸ் ஹீரோ (அஜித்) வில்லத்தனமாக செயல்படுகிறார். சர்வதேச 
அளவில் ஏஜெண்டாக செயல்படும் கதாநாயகனும் அவரின் கும்பலும், இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் ஏன் குறிவைக்கிறார்கள்  
என்பதையும், அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்களே படத்தின் கதை.


என்ன செய்து இருக்கிறார் ஹெச்.வினோத்?


2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வையிலும், கடந்தாண்டு வலிமை படத்திலும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்த ஹெச்.வினோத், இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். குட்டி அனிமேஷன் சீன் முதல், சமூக கருத்து வரை அவரின் ப்ளஸ் பாயிண்டுகளை அழகாக கையாண்டுள்ளார்.




படத்தின் முதல் பாதி, அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கியும் கையுமாக சுற்றும் அஜித், குழந்தை கையில் தீபாவளி துப்பாக்கியை கொடுத்தது போல், பார்க்கும் அனைத்தையும் சுட்டு தள்ளுகிறார். முதல் பாதியின் முதல் 10 நிமிடங்கள், சற்று செயற்கையாக இருக்கிறது.  இதை மட்டும் குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். பின், பொறுமையாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது துணிவு. 


இரண்டாம் பாதி தனியார் வங்கியில் நடக்கும் ஊழலையும், நிதி சார்ந்த குற்றங்களை பற்றியும் பேசியுள்ளது. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில், பல நுணுக்கமான விஷயங்கள் அமைந்திருக்கும், அதுபோலவே லோன், பங்குசந்தை என்ற பெயரில்
நடக்கும் பெரிய அளவிலான கொள்ளையை பற்றி ஆராய்ச்சி செய்ததுடன், ஏதார்த்தமான சம்பவங்களை சேர்த்துள்ளார் ஹெச்.வினோத்.  துணிவு படம், வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றிய படம் அல்ல என்பதையும், அது வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளை என்பதையும் இயக்குநர் ஹெச்.வினோத் விவரித்திருக்கிறார்.


அங்காங்கே வந்த பைக் சீன்கள், வலிமை படத்தை நினைவு படுத்துகிறது. இந்த பாதியில்தான், ஏன் அஜித் பகிரங்கமாக வில்லத்தனம் செய்கிறார் என்பதற்கான ப்ளாஷ்பேக் இடம்பெறுகிறது. இதில், இடம்பெற்ற சென்டிமென்ட் வலிமை படத்தில் ஓவர் டோஸாக அமைந்த அம்மா சென்டிமென்ட் போல் இல்லாமல், டீயில் பன்னை தொட்டு தின்பது போல்பட்டும் படாமல் இருந்தது.


அஜித் குமாரின் நடிப்பு 


வேறுபட்ட நடிப்பும், வில்லத்தனமான சிரிப்பும், ஸ்டைலிஷ் நடனமும், சிலிர்க்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயமாக நடித்துள்ளார்.


மஞ்சு வாரியர்


அஜித்தின் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் இவர், அவருக்கு பக்க பலமாக இருக்கும் லேடி பாஸாக அசத்தியுள்ளார். ஆர்.டி.எக்ஸ், துப்பாக்கி எனஅனைத்து ஆயுதங்களை ஆளும் சிங்கப்பெண்ணாக வந்து பாராட்டை பெறுகிறார்.


ஜான் கொக்கைன் 


முக்கிய வில்லனாக வரும் இவர், ஹீரோவுக்கு கடைசி வரை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்துள்ளார்.


மற்ற கதாபாத்திரங்கள்


கமிஷனராக சமுத்திரகனியும், கான்ஸ்டெபிளாக மகாநிதி ஷங்கரும் மக்களுக்காக செயல்படும் காவல்துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர். சென்டிமென்டுகாக அமீர், பாவணி மற்றும் தர்ஷனும், நகைச்சுவைக்காக பட்டிமன்ற பேச்சாளார் மோகன சுந்தரமும், பழைய ஜோக் தங்கதுரையும், வேவு பார்க்கும் பக்ஸ் ராஜேஷும், வில்லனுக்கு உறுதுணையாக இருக்கும் ஜி.எம் சுந்தர், அஜய்,வீரா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரங்களுங்கு நியாயம் சேர்த்துள்ளனர்.


மாஸ் காட்டிய பாடல்கள்


படத்தில் மூன்று பாடல்கள் மட்டும் இருந்தாலும், அந்த மூன்று பாடல்களின் காட்சிகள் வேற லெவலில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் இந்த பாடல்களை கேட்டால், பொதுமக்களே அஜித் ரசிகர்களாக மாறிவிடுவர் என்றே சொல்லாம்.


ஆக்‌ஷன் 




இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது. துப்பாக்கியை வைத்து பெரும்பாலான சண்டை காட்சிகள் 
எடுக்கப்பட்டுள்ளது, ஒரு சில காட்சிகளிலே வேறுபட்ட ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


ஏன் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும்?


இந்த படத்தில் உள்ள காட்சிகளில், சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், தாய்லாந்தின் அழகிய இடங்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் படத்தின் நீளமும் ஷார்ப்பாக உள்ளது.அஜித்தின் செய்கைகாக அவரின் ரசிகர்கள் துணிவு படத்தை பார்க்க வந்தால், ஹெச்.வினோத்தின் கம்பேக்கிற்காக அனைத்து தரப்பினரும் இந்த படத்தை பார்க்க வரலாம். ஆக மொத்தம் இந்த பொங்கல் நோ கட்ஸ் நோ க்ளோரி நிறைந்த துணிவு பொங்கல்!