கதையின் கரு:
அமெரிக்காவின் ஃபிலிடெல்ஃபியா பகுதியில் குழந்தைகளின் மனநல மருத்துவராக வேலை பார்க்கிறார் மால்கம் க்ரோ. குழந்தைகளுக்காக இவர் செய்யும் சேவையை பாராட்டும் வகையில், இவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. விருது கிடைத்த மகிழ்ச்சியில், வீட்டில் தனது மனைவியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், யாரோ ஒருவன் இவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து நுழைகின்றான். மால்கம்மிடம் பல வருடங்களுக்கு முன்பு பிரமை நோய்க்காக சிகிச்சைக்கு வந்த வின்சன்ட் என்வர்தான் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் என்று தெரிய வருகிறது. “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்” எனக்கூறும் அவன் பேசிக்கொண்டே இருக்கும்போது, திடீரென துப்பாக்கியை எடுத்து மால்கம்மை சுட்டுவிட்டு அவனும் தற்கொலை செய்து கொள்கிறான்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, கோல் சியர் என்னும் இன்னொரு குழந்தைக்கு மனநல ஆலோசனை கொடுப்பதற்காக செல்கிறார் மால்கம். அப்போது கோல்சியர், தனக்கு இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிவதாக குண்டை தூக்கி போடுகிறான். இந்த குழந்தையிடத்திலும், வின்சன்டிடம் இருந்த அறிகுறிகள் இருப்பதால், இவனுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என முடிவு செய்கிறார் மால்கம். அதன் பிறகு நடந்தது என்ன? உண்மையிலேயே அந்த குழந்தையின் கண்ணுக்கு பேய்கள் தெரிகிறதா? இல்லை அந்த குழந்தைக்கு இருப்பது மனநோயா? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை.
பேய் கதையா? சைக்கலாஜிக்கல் த்ரில்லரா?
ஹாலிவுட் திரையுலகில் த்ரில்லர் படங்கள் நிறைய இருப்பினும், சைக்கலாஜிக்கல் த்ரில்லர்கள் லிஸ்டை எடுத்து பார்த்தால் சொர்ப்ப அளவிலேயே இருக்கும். அதிலும், நல்ல சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்கள் மிக மிக குறைவு. அப்படி இருக்கும் குறைவான நல்ல படங்களின் பட்டியலில் The Sixth Sense படமும் ஒன்று. இந்த படத்தின் கதையில் ஹீரோ கிடையாது, கதைதான் ஹீரோவே. இதனால்தான், கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், நல்ல வசூலைப் பெற்ற படங்களின் லிஸ்டில் உள்ளது தி சிக்ஸ்த் சென்ஸ். Old is Gold என்பது போல், சுமார் 23 வருடங்களுக்கு முன்பு இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் நேற்று வெளியான படம் போன்ற ஒரு உணர்வைத்தான் தி சிக்ஸ்த் சென்ஸ் கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில், சைக்காலஜிக்கல் த்ரில்லராக நகரும் கதை, பின்னர் மெல்ல மெல்ல திகில் பாணிக்கு நகரத் தொடங்குகிறது. எல்லா பேய் படங்களிலும் வருவது போல் திரும்பியவுடன் முகத்திற்கு நேராக பேய் வந்து நிற்கும் கான்செப்ட் இப்படத்திலும் இருந்தாலும், அதைக்கூறிய விதத்தில் அசத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனர் எம் நைட் ஷியாமலன்.
இவர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர் என்பது கூடுதல் சிறப்பு. பெரிதாக மெனக்கெடல் இல்லாமல் சிம்பிள் கதையை வைத்து மாஸ்டர் பீஸ் ஒன்றை கொடுத்துள்ளார் இயக்குனர். இன்றளவும், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இப்படத்தை ரீ-வாட்ச் செய்ய ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. படத்தில் இன்னும் கொஞ்சம் கூட திகில் காட்சிகளை கூட்டியிருக்கலாம். க்ளைமேக்ஸ் டவிஸ்ட், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்பது போல் இருந்தது. படத்தில், ஆங்காங்கே ஸ்லோவான காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் படத்தின் நீளம் குறைவாக இருந்ததால் தொய்வு என்பது பெரிதாக தெரியவில்லை.
கதாப்பாத்திரங்களின் பங்கு:
படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் ப்ரூஸ் வில்லியம்ஸ் மனநல மருத்துவராக மால்கம் எனும் கேரக்டரில் கலக்கியிருக்கிறார். கோல் கதாப்பாத்திரத்தில் வரும் சிறுவனின் நடிப்பும், அவன் அவ்வப்போது ஹஸ்கி வாய்ஸில் பேசும் வசனங்களும் மயிர்கூச்சரிய செய்கின்றன. பேக் ரவுண்ட் மியூசிக்கில் இன்னும் கொஞ்சம் சவுண்டை இன்க்ரீஸ் செய்திருக்கலாம். கோலின் அம்மாவாக வரும் கதாப்பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். சிறிது நேரமே வந்தாலும், அனைவரது அனுதாபத்தையும் அள்ளிவிடுகிறது வின்சென்ட் க்ரேவின் கதாப்பாத்திரம். மொத்ததில்,கதைக்கான தேவையான உழைப்பை அனைத்து கேரக்டர்களும் ஒழுங்காக செய்துள்ளனர். இதுவே, படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.