தூய்மைப் பணியாளர் ரோகிணியின் மகன் தமிழரசன், கட்டாயத்தின் பேரில் கழிவுநீர் குழாய் அடைப்பை சரி செய்யும் பணிக்கு தள்ளப்படுகிறார். அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கிறார். இதைதொடர்ந்து, தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் ஒரு தாயின் கதை தான் "விட்னஸ்"


நவீன கால தொழில்நுட்பங்கள் மூலம் எத்தனையோ கருவிகள் வடிவமைக்கப்பட்டாலும், மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் அவலம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.


விட்னஸ் படத்தில், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதும், சாதிய அடக்குமுறைகள் இன்றளவும் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் கமர்சியல் பாணியில் இல்லாமல் நிகழ்கால சூழலை மையப்படுத்தி வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.


அதே போல அதிகார வர்க்கம் பணம் இருக்கும் தரப்புக்காக எப்படி கண்மூடித்தனமாக உழைக்கிறது, அடித்தட்டு மக்கள் மீது எப்படி தனது வன்மத்தை கொட்டுகிறது என்பதை கண்முன் காட்டியுள்ளார் இயக்குனர். தாய் கதாபாத்திரத்தில் வரும் ரோகிணி, மகனை இழந்து தவிப்பது, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடுவது என்று நடிப்பில் பல இடங்களில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை அழகு சேர்த்துள்ளார்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் ஜி. செல்வா ஏற்று நடித்துள்ள பெத்துராஜ் கதாபாத்திரம், இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க ஒருசிலர் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை உணர செய்கிறது.


அதோடு வக்கீலாக வரும் சண்முகராஜன் நீதிமன்றத்தில் பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. ஒருநாளும் நாம் சுத்தம் செய்யப்போவதில்லை என்ற நம்பிக்கையுடன் தான்,நாம் தினந்தோறும் கழிவறைகளை பயன்படுத்துகிறோம் என்பது போன்ற வசனங்கள், மக்களின் மனநிலையை விளக்கும் விதமாக உள்ளது.


விபத்து நடைபெறும் குடியிருப்பில் வசிக்கும் கட்டிட நிபுணரான நாயகி ஷரத்தா, மகனை பறிகொடுத்து நிராயுதபாணியாக நிற்கும் ரோகிணிக்கு உதவ முன்வருகிறார். நாயகி ஷர்த்தா ஸ்ரீநாத் மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். நீச்சல் பயிற்சியாளராக வரும் தமிழரசன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். 


பெத்துராஜ் கதாபாத்திரத்தின்  மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட், அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள், மாமாவாக வரும் வினோத் சாகர், குடியிருப்பு சங்க தலைவராக வரும் ஸ்ரீநாத் என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ரமேஷ் தமிழ் மணி பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றி இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு வேகம் எடுக்கிறது. ஒரு சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதை, கதாபாத்திரங்களோடு மனதை தொடும்படி படமாக்கியுள்ளார் இயக்குனர் தீபக்.


சட்டங்கள் இயற்றப்பட்டால் மட்டும் போதாது, அதனை முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்தி குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே, எந்தவொரு குற்றத்தையும் தடுக்க முடியும் என்பதை ஆழமாக வலியுறுத்தியுள்ளது “விட்னஸ்” திரைப்படம்.