ஆர்.ஜே.பாலாஜியின் வேறுபட்ட நடிப்பில், வெளியான ரன் பேபி ரன் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
இஷா தல்வாருடன் கல்யாணம் ஆக போகும் நிலையில் சத்யாவிடம் (ஆர்.ஜே.பாலாஜி), ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னை காப்பற்றி கொள்ள தஞ்சம் புகுகிறார். இரக்கப்பட்டு காப்பாத்தும் கதாநாயகனின் வாழ்க்கையில் பல ட்விஸ்டுகள் நடக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் பின்னணி என்ன என்பதும், இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் ஆர்.ஜே.பாலாஜி தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதி கதை.
பேங்கில் வேலை செய்யும் ஊழியரான ஆர்.ஜே.பாலாஜி, போலீஸ் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஆளாக கையாள்கிறார். படக்கதையின் தொடக்கத்தில் உண்டான மர்மமுடிச்சுகளை, இரண்டாம் பாகம் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. ஹீரோ மற்றும் வில்லனின் கதாபாத்திரங்களை இன்னும் கூட சற்று நன்றாக எழுதி இருக்கலாம். அந்த அளவுக்கு திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல்கள். படத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் இருப்பது மட்டுமே படத்தின் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஆனால் இயக்குநர் சொல்ல வந்த மெடிக்கல் காலேஜ் மாஃபியா கதை, அனைவரையும் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜி
இதுவரை காமெடி படங்களில் நடித்து அசத்திய ஆர்.ஜே.பாலாஜி, ரன் பேபி ரன்னில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆனால், இந்த நடிப்பு சற்று செயற்கையாகவுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷின் முதிர்ச்சியான நடிப்பு, இப்படத்தை ஒருமுறை பார்க்கவைக்கிறது.
மற்ற கதாபாத்திரங்கள்
கதாநாயகனின் அம்மாவாக ராதிகாவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் இஷா தல்வாரும், நண்பனுக்கு துணையாக இருக்கும் விவேக் பிரசன்னாவும், படத்தின் முதல் சீனில் வந்து போகும் ஸ்மிருதி வெங்கட்டும், பாதிரியராக ஹரீஷ் பேரடி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களுக்கான நியாயமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இசை
இப்படத்தில் தீம் பாடல் தவிர பெரிதாக பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் கலக்கும் சாம்.சி.எஸ் ரன் பேபி ரன்னில் சொதப்பியுள்ளார்.
மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார், முழு திரில்லர் திரைக்கதையை கையாண்ட விதத்தில் வெற்றி பெற தவறியுள்ளார். பல இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள் ஆடியன்ஸூக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?
இடைவேளை எப்படா வரும் என்னும் அளவுக்கு முதல் பாதி மெதுவாக செல்கிறது. இடைவேளைக்கு பின்னர், படத்தின் கதை ஓரளவுக்கு சூடுபிடிக்கிறது என எதிர்பார்த்தால், லாஜிக் மிஸ்டேக்குகளால் சுவாரஸ்யம் குறைகிறது. ஆக மொத்தம் “ஆளவிடுங்க டா சாமி.. நான் ஓடிவிடுகிறேன்.” என்பதே ரன் பேபி ரன் படத்தை பார்த்த மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது. இந்த படம் தியேட்டரில் பார்ப்பதை விட, நேரடியாக ஓடிடியில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்பதே படம் பார்த்த ரசிகர்களின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது.