Romeo Movie Review: அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி என பலரும் நடித்துள்ள படம் “ரோமியோ”. பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் ஃபரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்திருந்தார். அதன் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் கதை
35 வயதாகியும் லவ் ஃபீல் வந்தால் தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கும் விஜய் ஆண்டனிக்கும், மிருளாணி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் இந்த திருமணம் மிருளாளினி விருப்பம் இல்லாமல் நடந்ததை உணர்ந்து கொள்ளும் விஜய் ஆண்டனிக்கு, அவர் வாழும் நகரத்து வாழ்க்கை மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தான், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது தவறு என்றும், விவாகரத்து செய்து கொள்ளலாம் எனவும் மிருளாளினி கூறுகிறார்.
மனைவியின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ரொமான்டிக் காமெடி கலந்து ரோமியோ-வாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன்.
நடிப்பு எப்படி?
நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தனது நடிப்பு கேரியரில் "இந்தியா பாகிஸ்தான்" என்ற படத்தில் மட்டும் தான் கலகலப்பான கேரக்டரில் நடித்திருப்பார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோமியோ படத்தில் மாறுபட்ட விஜய் ஆண்டனி நடிப்பை காணலாம். அமைதியான கிராமத்து பையனாக, ரோமியோவாக படம் பார்ப்பவர்களை முக மலர்ச்சியுடன் வைத்திருக்கிறார்.
மிருளாளினி ரவியும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களை தவிர யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரின் கேரக்டர்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
படத்தின் பிளஸ், மைனஸ் என்ன?
படமாக பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என சில இடங்களிலும், இதுதான் நடக்கப் போகிறது என சில இடங்களிலும் யோசிக்க கூடிய வகையில் திரைக்கதை உள்ளது. முதல் பாதியில் திருமணம் தொடர்பான காட்சிகளும் சரி, கிளைமேக்ஸ் காட்சியும் சரி சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசை பல இடங்களில் நன்றாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ஃபருக் ஜே பாட்ஷாவின் கேமரா ஒவ்வொடு காட்சிகளையும் தனித்து தெரிய வைக்கிறது.
மைனஸ் என பார்க்கும்போது ரோமியோ என பெயர் வைத்து விட்டு ஃபீல் பண்ணும் அளவுக்கு காதல் காட்சிகள் இல்லாதது குறையாக உள்ளது. அதேபோல் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகிறது. அதனை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மேலும் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை சேர்த்திருப்பது கொஞ்சம் ஒட்டாமல் சொதப்பலாகவே அமைந்துள்ளது. ட்ரெய்லர் பார்த்து விட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் எந்தவித முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் இந்த விடுமுறை தினத்தில் ரோமியோ படத்தை தாராளமாக காணலாம்.