துப்பாக்கி, ரத்தம், மேலோகம், பூலோகம், இல்லாத லோகம், இருக்கும் லோகம் என தாவிக் கொண்டே இருக்கும் ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்த்து பழகிய நமக்கு, மவுனமான ஒரு காதல் கதையை பார்க்க என்றாவது வரும் டைட்டானிக்கிற்கு காத்திருக்க வேண்டும். 


அதற்காக, என்றாவது தான் ரொமான்டிக் படங்கள் வருகிறதோ என்றில்லை; அவை நம் கண்ணுக்கு வருவதில்லை. ஓடிடி வந்த பின், அந்த குறை தீர்க்கப்பட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஹாலிவுட் ரொமான்ஸ் படங்கள் பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு படம் தான், பர்ஃபிள் ஹார்ட்’.






அமெரிக்க கடற்படையில் பயிற்சி முடிந்து பணிக்கு தயாராகும் பட்டாலியனின் ஒன்று, புறப்பாட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அருகில் வரும் கிளப்பில் பாப் பாடகியாக இருக்கும் இளம் பெண் ஒருவருடன் அந்த பட்டாலியன் அணி நட்புடன் பழகுகிறது. இளம் பெண்ணிற்கு நீரழிவு நோய். இன்சுலீன் செலுத்த கூட பணமின்றி சிரமப்படுகிறார். அதே நேரத்தில் பட்டாலியனில் இருக்கும் இளம் வீரர் ஒருவர், முன்பு போதைக்கு அடிமையாக இருந்த போது நண்பர் ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.


கடற்படை வீரரை மணந்தால் நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி கிடைக்கும் என்பதால், இளம்பெண்ணும், அந்த வீரரரும் போலி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அரசுக்கு எதிரான அந்த செயலை திட்டமிட்டு செய்கிறார்கள். அதன் பின் போருக்குச் செல்லும் அந்த இளைஞருக்கு குண்டடிப்பட்டு நாடு திரும்புகிறார். அதன் பின் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள், சந்தர்ப்பங்கள் தான் கதை.






போலி காதல், நிஜக்காதலாக மாறும் போதும், காதல் பல நேரங்களில் ஊடலாக மாறும் போதும் இருவரும் அடித்துக் கொள்ளும் போதும், அணைத்துக் கொள்ளும் போதும், பார்க்க அவ்வளவு ரம்யம். வழக்கம் போல, ஹாலிவுட் கசமுசாக்கள் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து, அழகான காதல் கதை பர்ஃபிள் ஹார்ட். படத்தின் தலைப்பை வைத்து, காதல் படம் அதனால் தான் ஹார்ட் என நினைத்துவிட வேண்டாம்; கடற்படையில் போரின் போது வீர சாகசம் செய்பவர்களுக்கு வழங்கப்படுவது தான், பர்ஃபிள் ஹார்ட். தன் அப்பா வாங்கிய அந்த விருதை தானும் வாங்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருக்கும் அந்த இளைஞர், அதை பெருவதும், இறுதியில் அவரது தில்லுமுல்லு தெரிந்து கைதாவதும், பிரிந்த ஜோடி மீண்டும் சேர்வதுமாய் கலிஃபோர்னியாவின் காதல், சென்னையில் இருந்தும் ரசிக்க முடிகிறது. 






நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம், தமிழில் கிடைப்பது இன்னும் வசதி. இயக்குனர், ஒளிப்பதிவாளர், பின்னணி கோர்வையாளர் என அனைவருமே அசாத்தியமாக உழைப்பை தந்திருக்கிறார்கள். சத்தமில்லாத, யுத்தமில்லாத சனி, ஞாயிறை ரசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல ரொமான்ஸ் திரைப்படம் பர்ஃபிள் ஹார்ட்.