கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதை கரு :
தமிழ்நாட்டின் அரசியலை மறைமுகமாக ஆட்டிப்படிக்கும் ஏ.ஜி.ஆர் ராவணனின் (சிம்பு) மாப்பிள்ளை அருண்மொழி (சந்தோஷ் பிரதாப்), ஏ.ஜி.ஆரின் தங்கையை மணந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார். இதனால் பல நாட்களாக பதவி ஆசையில் இருக்கும் நாஞ்சிலார் குணசேகரனின் (கௌதம் மேனன்) முதல்வர் கனவு பாழாய் போகிறது. ஒரு இரவில் முதலமைச்சரான அருண்மொழி கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இவரை கொன்றது யார்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? என்ற காரணத்திற்காக ரகசிய போலீசான குணா எனப்படும் சக்தி (கௌதம் கார்த்திக்) ஏ.ஜி.ஆர் கோட்டைக்குள் கூட்டாளியாக நுழைகிறார். கொலைக்கான காரணம் தெரிந்ததா?, சிம்பு - கௌதம் கார்த்திக் நிலை என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் ஓபேலி கிருஷ்ணா :
ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இவர், சிம்புவை மாஸான கேங்க்ஸ்டராக காண்பித்துள்ளார். சிம்புவிற்கு கொடுக்கப்படும் ஹைப்பை, எஸ்.டி.ஆரின் ரசிகர்கள், விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். இப்படத்தில், ப்ரியா பவானி - கெளதம் கார்த்திக்குமான காதல் கதை திருப்தி செய்யவில்லை. சிம்பு மற்றும் தங்கையாக வரும் அனு சித்தாராவிற்கு இடையே உள்ள அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் இன்னும் கொஞ்சம் தூக்களாக இருந்து இருக்கலாம்.
நடிகர்கள் பத்து தல படத்தில் என்ன செய்துள்ளனர் ?
பத்து தலையின் அழிக்கமுடியாத ஏ.ஜி.ஆர் ராவணனான சிம்பு, “கெட்டவனுக்கு கெட்டவன் நல்லவனுக்கு நல்லவன்” என்ற அவரின் டயலாகிற்கு ஏற்ப நடித்துள்ளார். ராபின் ஹுட் போன்ற கதாநாயகன்களை சமீபத்தில் வரும் படங்களிலும் பார்க்க முடிந்தாலும், இதுபோன்ற கதாபாத்திரத்தை சிம்பு முதன்முறையாக கையாண்டுள்ளார். தன் அப்பா போல, தங்கை செண்டிமெண்டை முயற்சி செய்த சிம்பு, அதில் சோபிக்க தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
சிம்புவிற்கு அடுத்து பயங்கரமாக ஸ்கோர் செய்தது கெளதம் கார்த்திக்தான். அவருக்கு, திருப்புமுனை படமாக பத்து தல அமையும். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செம்மையாக செய்துள்ளார். நடிப்பில் ரவுண்டு கட்டி வரும் கெளதம் வாசுதேவ் மேனன், வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவுக்கு எதிராக மல்லுக்கட்டும் இவரின் கேரக்டர் கதையின் ஒரு தூணாக அமைந்துள்ளது.
ப்ரியா பவானி ஷங்கர் ஒரு டான்ஸ், ஒரு காட்சி என்று சென்றுவிடாமல், நேர்மையான தாசில்தாராக வருவதன் மூலம் நடிப்பில் முன்னேறியுள்ளார். சிம்புவின் தங்கையாக நடித்த அனு சித்தாரா, செல்வினாக நடித்த டிஜே அருணாச்சலம், அமீராக நடித்த கலையரசன், அருண்மொழியாக நடித்த சந்தோஷ் பிரதாப், சிங்காவாக நடித்த மது குருசாமி, பூங்குன்றனாக நடித்த சென்ராயன் ஆகிய அனைவரும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குட்டப்பாரேவாக நடித்த ரெட்டின் கிங்ஸ்லியின் க்யூட் காமெடிக்கு சிரிப்பு மழை பொழிந்தது. அத்துடன், ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் சாயிஷாவின் நடனம் சற்று செயற்கையாக உள்ளது. ஓ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுக்க நினைத்து டம்மி ஆகியுள்ளார் சாயிஷா. மனுஷ்யபுத்திரன், அவரின் முதல் படத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
பெரிய பாய் சம்பவம் செய்துள்ளாரா?
இப்படத்தில் வரும் ஒசரட்டும் பத்து தல பாடலிற்கு பின், நம்ம சத்தம் பாடல் நன்றாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் ஆங்கில பிஜிஎம் படத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. மீதம் உள்ள பாடல்கள் , பிஜிஎம் ஓகே ரகம்தான்.
படத்தை தியேட்டரில் காணலாமா?
கன்னியாகுமரியின் அழகையும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் ஆங்கங்கே கண்முன் காட்டும் இப்படம், கருத்துக்களை சொல்லி கழுத்தறுக்கவில்லை. கொடுக்கும் பணத்துக்கு என்ஜாய் செய்யலாம் என்ற வகையில் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். நிச்சயமாக வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் முத்துவீரனுக்கும், பத்து தல படத்தில் வரும் ஏ.ஜி.ஆருக்கும் நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. ஆகமொத்தம் இது சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.