’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச்.29) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.


எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்’. இந்த திரைப்படத்தில் கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.


ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  சுமார் 500 கோடி வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிபெற்றது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரையரங்குகளுக்கு சென்ற ஆண்டு இந்தப் படத்தைக் காண படையெடுத்தனர்.


தொடர்ந்து இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை குஷ்பு, “அனைவருக்கும் வணக்கம். மணிரத்னம் பற்றி நான் பேசணும்ன்னா சுஹாசினி காதை மூடிக்கிடனும். நான் மணி சார் பத்தி பேசுனா எனக்குள்ள ஹார்ட்டின் பறக்கும். அவரோட படத்துல எனக்கு பிடித்தமான படம் மௌன ராகம். பெஸ்ட் பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி( தளபதி). இன்னும் சொல்லிக்கொண்டே போலாம். பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமா வரலாற்றை மாற்றியுள்ளது” என தெரிவித்தார்.  


மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரேவதி, “ நான் நடிக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய 40வது வருடத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் பிடித்த படம் இருவர், அந்த படத்தில் தான் ஐஸ்வர்யா ராய் கதாநாய்கியாக அறிமுகமானார்” என பேசினார்.


தொடர்ந்து பேசிய நடிகை ஷோபனா, “ நான் நிறைய பேச நினைத்தேன். தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு என்னை தெரியாது. ஆனால் தளபதி படம் பேரை சொன்னால் தெரியும்.  பொன்னியின் செல்வன் படத்தை புகழும் தகுதி எனக்கு இல்லை. ஆனால் இந்த படத்தை கொடுத்த மணிரத்திற்கு நன்றி” என கூறிப்பிட்டார்.


நடிகை மற்றும் வசனகர்த்தா சுஹாசினி பேசுகையில், “ மணி ரொம்ப ரொமாண்டிக். அவர் படத்தில் நடித்த கதாநாயகிகள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நான் அவரோட ரியல் லைஃப் கதாநாயகி. நான் எப்படி இருப்பேன் என நீங்களே நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பிரம்மாண்டமான படம் எப்படி எடுத்தீர்கள் என கேட்டால் இதெல்லாம் தூசு என கூறினார். எனக்கு மிகவும் பிடித்தமான படம் நாயகன் தான், அதில் என் சித்தப்பா கமல் நடித்துள்ளார் அதனால் தான். அதனை தொடர்ந்து எனக்கு பிடித்த படம் பொன்னியின் செல்வன் தான்” என தெரிவித்தார்.