Paayum Oli Nee Yenakku Review in Tamil: கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். 


கதையின் கரு 


நண்பர் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து நெட்வொர்க் தொடர்பான சிறிய நிறுவனம் நடத்தி வரும் விக்ரம் பிரபுவுக்கு பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளது. இப்படியான நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யும் ரவுடிகளிடமிருந்து பெண்ணை காக்கிறார். இதன் விளைவாக ரவுடிகள் கூட்டம் அவரை பழிவாங்க முற்படுகிறது. மறுபுறம் விக்ரம் பிரபு சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய கண் பார்வை பிரச்சினைக்கு மத்தியில் எதிரிகளை கண்டுபிடித்தாரா? என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் சொல்கிறது. 


நடிப்பு எப்படி? 


படத்தின் ஒரே பிளஸ் விக்ரம் பிரபு மட்டும் தான்.பார்வை குறைபாடால் அவதிப்படும் விக்ரம் பிரபு, சத்தத்தை வைத்து தன்னை தாக்க வருபவர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். வேல ராமமூர்த்தி, வாணி போஜன் மற்ற கேரக்டர்கள் கதைக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. 


படம் எப்படி? 


பார்வை குறைபாடு கொண்ட ஹீரோ, அதனை தங்களுக்கு பலமாக கொள்ளும் வில்லன் கூட்டம், இதற்கு ஹீரோவின் பதிலடி என்ற சுவாரஸ்யமான அடிப்படை ஒன்லைனை திரைக்கதையில் பெரிய அளவில் மேஜிக் இல்லாமல் சாதாரண படமாகவே இயக்குநர் கார்த்திக் அத்வைத் கொடுத்துள்ளார். எந்த காட்சியும் பெரிய அளவில் கவராத வகையில் செயற்கைத்தனமாக வைக்கப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. ஹீரோயினும், பாடல்களும் தேவையே இல்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. 


ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிளைமேக்ஸ் உட்பட பல காட்சியில் பளிச்சிடுகிறது. அதேபோல் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிக்கு பெரிதும் உதவுகிறது. மொத்தத்தில் கதையின் போக்கில் காட்சி செல்லாமல், காட்சிக்கு ஏற்ப கதை செல்வதால் பாயும் ஒளி நீ எனக்கு பெரிய அளவில் வெளிச்சத்தை பாய்ச்சவில்லை.