உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எத்தனையோ வகையான உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன. ஆனால் இப்படி ஒரு கரடுமுரடான உடற்பயிற்சியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இதைச் செய்தது வேறு யாரும் இல்லை, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான்!
பாலிவுட்டில் முன்னா பாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் சஞ்சய் தத். நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த இவர், அண்மைக்காலங்களில் முக்கியமான திரைப்படங்களில் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார். கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்பதத்தில் இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஆதீராவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். உடம்பெல்லாம் பட்டை குத்திக்கொண்டு வாள் ஏந்தி ஒரு சாமுராய் போல் அவர் தோற்றமளித்து ரசிகர்களை மிரள வைத்தது.
லியோ
அந்த வரிசையில் தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார் சஞ்சய் தத். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்பது பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. முதலில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. பின் நடிகர் விஜய்க்கு தந்தையாக அவர் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
உடற்பயிற்சி செய்யும் வீடியோ
இந்நிலையில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சஞ்சய் தத் லைக்ஸ் அள்ளி வருகிறார். இந்த வீடியோவில் கோடாரி ஒன்றை வைத்துக்கொண்டு மரக்கட்டைகளை உடைத்து பிளந்து கொண்டிருக்கிறார் சஞ்சய தத்.
அத்துடன், “ மீண்டும் அடிப்படை பயிற்சிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளேன். மரம் வெட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி முறை. இந்த வகை பயிற்சி உடலின் மேற்பாகங்களை உறுதியாக்க உதவும் . நீங்களும் இதை செய்துபாருங்கள் “ என தனது ரசிகர்களுக்கும் அறிவுரையும் வழங்கியுள்ளார் சஞ்சய் தத். இப்படி முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சஞ்சய் தத்துக்கு தற்போது 63 வயதாகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!
லியோ
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, பிரியா ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.