திரை நட்சத்திரங்கள் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, சன்னி லியோன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ஓ மை கோஷ்ட். இப்படத்தை, ஆர் யுவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம், சன்னி லியோன் முதல் முறையாக தமிழில் பேயாக நடித்த படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாக உள்ளது. ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க. 


கதையின் கரு:


அனகொண்டபுரம் என்ற ஊரில், ஆண்கள் யாரும் இருட்டினால் வெளியே வருவதில்லை, அப்படி வருபவர்களையும் ஏதோ ஒரு ஆவி பலிவாங்குகிறது என்பது போல கதை ஆரம்பிக்கின்றது. பலான படங்கள் எடுப்பதற்கு கதைகளை வைத்துக்கொண்டு, அதை தயாரிப்பதற்கு ஆள் கிடைக்காமல் திணறி வரும் நாயகன் ஏ’பாரதி(சதீஷ்). இவருடன் தங்குபவராகவும், நண்பவராகவும் வருகிறார் ரமேஷ் திலக்.


பாரதியின் காதலி செளமியாவிற்கு (தர்ஷா குப்தா) அடிக்கடி பேய் கனவுகளும், அந்த பேய்களினால் யாரோ கொலை செய்யப்படுவது போன்ற கனவுகளும் வந்து போகின்றது. ஒரு நாள் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் கொல்லப்படுவது போன்று கனவு காண்கிறார். காதலனையும் அவரது நண்பனையும் காப்பாற்ற அவர்களது வீட்டுற்கு விரையும் தர்ஷாவிற்குள் பேய் புகுந்து கொண்டு அனகொண்டபுரம் போக வேண்டும் என்கிறது.


என்ன சம்பந்தம்..?


இதனால், சதீஷ் மற்றும் அவரின் நண்பர்கள் தர்ஷாவை அனகொண்டபுரத்தில் உள்ள அரண்மனைக்கு செல்கின்றனர். அங்கு, ஏதோ ஒரு ஆவியை தனது ரத்தத்தை வைத்து வெளியேற்றி விடுகிறார் தர்ஷா. உக்கிரமாக வெளியேறியுள்ள அந்த ஆவியின் ப்ளேஷ்பேக்கை, அனகொண்டபுரத்தில் உள்ள சாமியார்(நான் கடவுள் ராஜேந்திரன்) சொல்கிறார். அந்த ஆவியை அடக்க சதீஷ் ஒருவரால் மட்டும்தான் முடியும் என்றும் குண்டைத் தூக்கிப்போடுகிறார். சதீஷிற்கும், அந்த ஆவிக்கும் என்ன சம்பந்தம்? அந்த ஆவி ஆண்களை மட்டும் பழிவாங்குவது ஏன்? போன்ற கேள்விகளுடன் பயணிக்கிறது திரைக்கதை. 




மெதுவான திரைக்கதை-சொதப்பல் காமெடி:


கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு கூடவே வரும் நண்பராக தோன்றி காமெடி செய்து கொண்டிருந்த சதீஷ், இப்படத்தில் ஹீரோவாக வருகிறார். காமெடியனாக இருந்தபோது என்ன செய்தாரோ அதையே இப்படத்தின் நாயகனாகவும் செய்ய முயற்ச்சித்து தோற்றுப் போய் இருக்கிறார். வசனங்கள் சில இதழோரத்தில் சிரிப்பை ஏற்படுத்தினாலும், பல இடங்களில் “இதெல்லாம் ஒரு டையலாக்கா?” என கேட்க தூண்டுகிறது. அவ்வப்போது மட்டும் ரசிக்க வைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், படம் முழுக்க வருவதால் எரிச்சலை ஏற்படுத்துகிறது.


படம் ஆரம்பிக்கும்போது “எப்போது இடைவேளை வருமோ…” என இருக்கையில் காத்திருக்கும் ரசிகர்கள், இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே கொட்டாவி விட தொடங்குகின்றனர். முதலில் மெதுவாக நகர்ந்த திரைக்கதை, ஹீரோவை காண்பித்த பிறகு கொஞ்சம் வேகமெடுத்து, மீண்டும் ஆமை வேகத்தில் நகர்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளில், மாவீரன் படத்தையும் பாகுபலி படத்தையும் கலாய்த்து வைத்திருக்கின்றனர், அவ்வப்போது ராஜமெளியை வேறு ஊருகாய்ப் போல தொட்டுக்கொள்கின்றனர்.


லாஜிக் அற்ற காட்சிகள்:


ஒரே ஒரு காட்சியில் வரும் ஜி பி முத்து, அவரது ட்ரேட் மார்க் டைலாக்கான “செத்தப்பயலே நாரப்பயலே” போன்ற டையலாக்குகளுடன் தன் பங்கை முடித்துக் கொள்கிறார். பேய் ஓட்டுபவராக காட்டப்படும் விஜய் டிவி பாலா, எதற்கு வந்தார்..? எதற்கு போனார்..? என்றே தெரியவில்லை. ஆவியை திறக்க சாவியாக உபயோகப்படுத்தப்பட்ட தர்ஷா குப்தாவிற்கும், அந்த ஆவிக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. இப்படி, ஓ மை கோஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள லாஜிக் அற்ற காட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 




சன்னி லியோனின் பங்கு:


தமிழே தெரியாத சன்னி லியோனிற்கு, ஃப்ளேஷ் பேக் காட்சிகளில் ஆங்காங்கே தமிழ் பேச வைத்த காரணத்திற்காக அப்ளாஸ் கொடுத்தே ஆக வேண்டும். ஆண்களை கொடூரமாக கொல்லும் மாயசேனாவகா வரும் இவர், பல காட்சிகளில் அப்பாவி போன்று முகத்தை வைத்துக் கொள்கிறார். க்ளைமேக்சில், ஹீரோவே “பாவம் யா..அழுவுது யா..” என்று டைலாக் பேசுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை, பயமுறுத்துதற்காக பேயாக வேஷம் போட வைத்தனரா அல்லது கவர்ச்சிகாக மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டனரா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 


பயம் காட்டாத பேய்:


இருட்டினால் வீடுகளுக்களுள் ஒளிந்து கொள்ளும் ஊர் மக்கள், அந்த ஊர் ஓரத்தில் ஒரு பெரிய அரண்மனை, அரண்மனைக்குள் ஒரு அழகான பேய் என இந்தியாவில் எடுக்கப்படும் பேய் படங்களுக்கே உரிய அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. தர்ஷாவிற்கு வரும் கனவுக் காட்சிகளைத் தவிர, படத்தின் வேறு எந்த காட்சியிலும் ரசிகர்களுக்கு பயமே வரவில்லை.


சன்னி லியோன் பேயாக வந்த பிறகும் கூட, “பேய் என்ன ட்ரெஸ் போட்டுக்கொண்டிருக்கிறது..?” போன்ற கேள்விகள்தான் காதில் விழுகிறதே தவிற, அலறல் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. “சன்னி லியோனைவ வைத்து படம் எடுத்ததிற்காகவாவது உருப்படியான ஒரு க்ளைமேக்ஸை வைத்திருக்கலாம்” என குமுறுகின்றனர் ரசிகர்கள்.


பின்குறிப்பு:இத்திரைப்படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டாம்.