எதிர்பாராத சந்திப்பு ஒன்றில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு இருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையிலும் மாறுதலை ஏற்படுத்துவதை அழகாக காட்டியிருக்கிறது `ஓ மணப்பெண்ணே!’
வேலையில்லா பட்டதாரியான கார்த்திக் (ஹரிஷ் கல்யாண்), ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்ற கனவைக் கொண்டிருக்கும் ஷ்ருதி (ப்ரியா பவானி ஷங்கர்) ஆகிய இருவரும் பெண் பார்க்கும் படலத்தின் போது, அறைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். நேரத்தைக் கடத்த இருவரும் பேசிப் பழக, இருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற மற்றொருவர் தேவை என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். எனினும், பெண் பார்க்கும் படலமே சில சிக்கல்களால் மாறி நடக்க, வெவ்வேறு வரன்களின் முன் இருவரின் வாழ்க்கையும் முன் செல்கிறது. இதனைத் தாண்டி, தொழில்முறையாக இருவரும் ஒன்றாகப் பணியாற்றுகையில் இருவருக்கிடையிலும் நிகழும் காதல் வெற்றிபெற்றதா, தொழில் என்னவானது என்பதைப் பேசியிருக்கிறது `ஓ மணப்பெண்ணே!’
தெலுங்கு மொழியில் வெளியாகி, திருப்புமுனையை ஏற்படுத்திய `பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது `ஓ மணப்பெண்ணே!’. எனினும் தெலுங்கு மொழியில் வெளியான அதே படத்தைச் சிறந்த முறையில் டிக் டாக் செய்திருக்கிறார்கள். கதையிலோ, கதை சொல்லும் பாணியிலோ எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோரின் வெர்ஷனாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணுக்கு மீண்டும் இதிலும் டீக்கடையில் அமர்ந்து வேலையில்லாத குறையை யாரிடமாவது கொட்டித் தீர்க்கும் வேடம்; கதாநாயகியை மாற்றிவிட்டால் இது எந்தப் படம் என்று நிச்சயம் குழப்பம் தோன்றும் அளவில் இதே வேடங்களில் ஹரிஷ் கல்யாணைப் பார்த்து பழகிவிட்டது. ப்ரியா பவானி ஷங்கர் தோன்றும் முதல் காட்சியில் இருந்து படத்தைத் தன் கைவசம் வைத்துக் கொள்கிறார். அஷ்வின் குமாருடனான ரொமான்ஸ், பிற்பாதியில் அந்த பிரேக்கப், ஹரிஷ் கல்யாணின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் காட்சிகள், ஹரிஷ் கல்யாணின் அப்பா வேணு அரவிந்திடம் பேசும் காட்சி எனப் படம் முழுவதும் ப்ரியா பவானி ஷங்கரின் அழகும் நடிப்பும் பரவிக் கிடக்கிறது. `குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் வெறும் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மனதில் நின்றுவிடுகிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் `ஓ மணப்பெண்ணே!’, `போதை கணமே’ ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், கிருபாகரனின் படத்தொகுப்பும் கச்சிதமாக இணைந்து படத்தை மேலும் மெருகேற்றுகின்றன.
`பெல்லி சூப்புலு’ படத்தைப் பார்க்காதவர்களுக்கு `ஓ மணப்பெண்ணே!’ நல்ல பொழுதுபோக்காக அமையும்; பார்த்தவர்கள் மீண்டும் `பெல்லி சூப்புலு’ படத்தையே பார்ப்பது நல்லது.
`ஓ மணப்பெண்ணே!’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.