விஜய் டிவி சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால், விஜய் டிவி சீரியல் பார்ப்பதில் ஒரே ஒரு சிக்கல்தான் இருக்கும். இன்னிக்கு நீங்க பார்த்த முகத்தை நாளைக்கு மாத்திடுவாங்க. பொசுக்கு பொசுக்குன்னு காணாமப்போகுற ட்ரெண்ட் சீரியல்களில் இருக்கு. திடீரென்று இவருக்குப் பதிலாக இவர் என்று ஒரு ஸ்லைட் போட்டுவிட்டு அந்த கதாபாத்திரத்தின் மீது மக்கள் வைத்திருந்த பாசத்தை, நேசத்தை நொறுக்கிவிடுவார்கள் பயபுள்ளைகள். இப்படித்தான் பல விஜய் டிவி சீரியல்களின் பார்வையாளர்களும் திடீரென்று அப்பீட்டாகி அடுத்த சேனலுக்குப் போய்விடுவார்கள்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மறைவுக்குப் பின் முல்லை கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவர் மாற்றப்பட்டார். அந்தப் பெண்ணும் இப்போது மாற்றப்பட இருக்கிறார். நடந்து நடந்தே நம் மனதைத் தேய்த்து இடம் பிடித்த கண்ணம்மாவும் நடையைக் கட்டிவிட்டார். இப்படி கேரக்டர்களை மாற்றும் விஜய் டிவி லேட்டஸ்ட்டா கை வச்சது காற்றுக்கென்ன வேலி சீரியல்.


சீரியலின் முன்னோட்டம் இதுதாங்க..


படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாகக் கொண்டது இந்த சீரியல்.  தஞ்சை ஆர்.கே இயக்கத்தில் பிரியங்கா குமார், தர்ஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.


இதில், பிரியங்கா, வெண்ணிலா என்ற கதாபாத்திரத்திலும், தர்ஷன் சூர்யாவாகவும், மாளவிகா அவினாஷ், சாரதா என்ற ஆசிரியை கதாபாத்திரத்திலும், பானு பிரகாஷ் மகாதேவன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். வெண்ணிலா தனக்கு தனது தந்தை திருமணம் ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியை சாரதாவின் உதவியுடன் படிக்க நினைக்கிறார். எல்லாத் தடையையும் தாண்டி கல்லூரியில் சேரும் வெண்ணிலாவுக்கு கல்லூரி வாசல் காதல் வாசலையும் திறந்து வைக்கிறது. கல்லூரியின் உரிமையாளருடனேயே காதல் மலர்கிறது. மற்றதை நீங்கள் சீரியலில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இந்தக் காதல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த சீரியலில் சிலர் மாற்றப்பட்டனர். அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இப்போது தர்ஷன் வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், காற்றுக்கென்ன வேலி சீரியலைப் பார்க்கப்போவதில்லை என்று பாய்காட் செய்கின்றனர். இந்நிலையில், தர்ஷன் இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார்.


அதில் அவர், "நான் இன்னொரு ப்ராஜக்டிலும் கமிட் ஆகியுள்ளேன். அதற்கும் இதற்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை. மேலும் சீரியலுக்காக எனது ஹேர்ஸ்டைலும் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். அதனால் தான் நான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன்"  என்றார்.