Oddity Movie Review: கடந்த ஜூலை மாதம் டாமியன் மெக்கார்த்தி இயக்கத்தில்  வெளியாகிய ஐரிஷ் திரைப்படம் ஆடிட்டி. சமீபத்தில் குறிப்பிட்ட சில ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இப்படம் இந்த ஆண்டின் சிறந்த ஹாரர் திரைப்படமாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. வழக்கமான ஹாரர் திரைப்படங்களைக் காட்டிலும் அப்படி என்னதான் இப்படத்தில் புதிதாக இருக்கிறது. ஆடிட்டி படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


ஆடிட்டி பட விமர்சனம்


நகரப்புறத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் தங்கள் புதிய வீட்டில் டானி மற்றும் அவளது கணவன் டெட் குடியேறுகிறார்கள். கொடூர கொலைகளை செய்த குற்றவாளிகள் அடங்கிய ஒரு மனநல காப்பகத்தில் மருத்துவராக இருக்கிறார். புதிய வீட்டில் டானி தனியாக தனது இரவை கழிக்கிறாள். வெளியாட் யாரோ அவள் வீட்டிற்குள் இருப்பதாகவும் கதவைத் திறந்து வெளியே ஓடிவிடும் படியும் திடீரென ஒருவன் வந்து சொல்கிறான். டானி அந்த கதவைத் திறக்கிறாரா ?


கட் செய்தால் ஒரு வருடம் கழிகிறது. மனநல காப்பகத்தில் இருந்து வெளியேறிய நோயாளி ஒருவனால் டார்ஸி அந்த இரவு கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. அவளது கணவன் டெட் இன்னொரு பெண்ணுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இறந்துபோன டானியின் இரட்டை சகோதரியான டார்ஸி (பார்வை இல்லாதவர்) ஒரு  ஆவிகளுடன் தொடர்புடைய பொருட்களை சேகரிக்கும் ஒரு கடையை நடத்தி வருகிறார். பொருட்களை தொட்டுணர்ந்து அவளால் எதார்த்தத்திற்கு அப்பால் சென்று சில விஷயங்களை பார்க்க முடியும். அப்படிதான் அவள் தனது தங்கை டானி அந்த நோயாளியால் கொல்லப்படவில்லை என்கிற உண்மையை கண்டுபிடிக்கிறாள். தனது தங்கையை கொன்ற உண்மையான குற்றவாளிகளை டார்ஸி பழிவாங்குவதே படத்தின் மீதிக்கதை.


விமர்சனம்


ஆடிட்டி படத்தை வெறும் ஹாரர் படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கிரைம் த்ரில்லர் , ரிவெஞ்ச் த்ரில்லர் என படம் வெவ்வேறு ஜானர்களில் பயணிக்கக் கூடியதாக இப்படம் அமைந்துள்ளது. ஹாரர் படங்களுக்கே உரிய பொதுவான சில அம்சங்கள் உள்ளன. மர்மமான ஒரு புதிய வீடு , மர்மமான கதாபாத்திரங்கள். அப்படியான எல்லா அம்சங்கள் இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றிய பெரிய பில்டப் ஏதும் செய்யாமலே  இயக்குநர் ரொம்ப சாமர்த்தியமாக நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார். கேட்டைப் பார்த்தாலே பயமா இருக்கே என்பது மாதிரியான ஒரு வீடு. அந்த வீட்டை ஒளிப்பதிவாளர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த ஒளியில் காட்ட முயற்சி செய்திருக்கிறார். பக்கத்து வீட்டில் நடக்கும் கூச்சல் போல் அவ்வப்போது ஒரு பின்னணி இசை. சின்ன சின்ன பொருட்களின் அசை என நொடிக்கு நொடி டென்ஷனை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். 


யூகிக்கக் கூடிய கதையை முடிந்த அளவிற்கு நிதானமாக வெளிப்படுத்தி கதையை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். பேய் படம் என்றாலே திரும்பும் திசையில் திடீரென்று வரும் பேயை பார்வயாளார்கள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம் இல்லையா. கிட்டதட்ட வழக்கொழிந்து விட்ட ஜம்ப் ஸ்கேர் யுக்தியை இயக்குநர் மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார். எதுவுமே இல்லை என்றாலும் ஒவ்வொரு இடத்திற்கும் அவர் வைக்கும் ஷாட் நம்மை பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. சீக்கிரம் பேய் வந்தால் கூட நிம்மதியாகி விடலாம். ஆனால் பேய் இருக்கா இல்லையா என்கிற குழப்பத்தில் இருப்பது தான் பயங்கரமானது. அந்த குழப்பத்தில் நம்மை எப்போது வைத்துக் கொண்டே இருப்பது தான் ஆடிட்டி படத்தின் பலம்.


டெட் கதாபாத்திரம் அறிவியல் மற்றும் லாஜிக்கை மட்டுமே நம்பும் ஒருவன். ஆவிகளுடன் நேரடியாக பேசக்கூடியவள் டார்ஸி. படத்தின் நிறைய மர்மமான விஷயங்கள் நடந்தாலும் கதாபாத்திரங்கள் அதற்கு பெரிதாக பயப்படுபவர்களாக தங்களைக் காட்டிக்கொள்வதே இல்லை. இதனால் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரியாமல் பார்வையாளர்கள் நாம் யார் பக்கம் நிற்பது என தெரியாமள் பீதியாகிறோம். அதுவும் இயக்குநரின் சாமர்த்தியம் . 


படத்தில் நிறைய அமானுஷ்யமான நிறைய விஷயங்கள் நடந்தாலும் அவை பெரும்பாலும் நமக்கு விள்ளப்படுவதே இல்லை. இதுவரை நாம் பார்த்த பேய் படங்களை வைத்து அந்த விஷயங்களின் மேல் நாமே ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்கிறோம். லாஜிக் இருந்தாதான் நான் அடுத்த சீனுக்கே போவேன் என்றிருப்பவர்களுக்கு இது கொஞ்சம் கடுப்பாக்கலாம்.


இது எல்லாவற்றுக்கும் மேல் பேய் குறித்த மிக அடிப்படையான கேள்வி ஒன்றைக் கொண்டு படத்தின் க்ளைமேக்ஸை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது பேய் இருக்கிறதா ? இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா?  இருக்கு என்று நம்புபவர்களுக்கு இருக்கிறது. இல்லை என்று நம்புபவர்களுக்கு இல்லை. டானியைக் கொன்ற குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கும் இந்த கேள்விக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது. அதை ஆடிட்டி படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தற்போது இப்படம் ஆப்பிள் டிவியில் வெளியாகியுள்ளது. விரைவில் மற்ற ஓடிடி தளங்களில் வெளியாகும்.