Nun 2 Movie Review in Tamil: மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் டைசா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெட், போனி ஆரோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் நன் 2. 2018 ஆம் ஆண்டு வெளியான நன் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.




கதைக்கரு


நன் படத்தின் முதல் பாகத்தில் திரைப்படத்தில் ரோமானியாவில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் இம்முறை பிரான்ஸில் நடக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்த பிஷப் மீண்டும் சிஸ்டர் ஐரினை பிரான்ஸிற்கு அனுப்புகிறார். அவருடன் சிஸ்டர் டெப்ராவும் செல்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பேயை அழித்தார்களா..? இடையில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன..?  என்பதே நன் 2.




கதை பிரான்ஸில் 1954ஆம் காலக்கட்டத்தில் தொடங்குகிறது. அங்கு பாதிரியார் ஒருவர் தேவாலயத்திலே எரித்து கொல்லப்படுகிறார். இவ்வாறு பிரான்ஸில் நடக்கும் தொடர்கொலைகளை பற்றி அறிந்த பிஷப், ரோமானியாவில் நடந்த கொலைகளுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி சிஸ்டர் ஐரினை மீண்டும் களத்திற்கு அனுப்புகிறார். விருப்பம் இல்லாமல் செல்லும் சிஸ்டர் ஐரினுடன் சிஸ்டர் டெப்ராவும் சேர்ந்து கொள்கிறார். அதன்பின் ரோமானியாவில் அழிக்கப்பட்டதாக நினைத்த பேய் உண்மையாக அழிக்கப்படவில்லை, அது சக்தி வாய்ந்த செயிண்ட் லூசியின் கண்களை அடைவதற்காக மோரீஸின் (ஜோனாஸ் ப்ளோகெட்) உடலில் புகுந்துள்ளது என்பதையும் மோரீஸ் தற்போது அந்த கண்கள் புதைக்கப்பட்ட பள்ளியில் பணிப்புரிகிறார் என்பதையும் அறிந்து கொண்ட சிஸ்டர் ஐரினின் அடுத்தடுத்த முயற்சிகள் என்ன என்பதே முழு திரைப்படம்.




நடிகர்களின் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தாலும் நன் 2 எதோ சிறு வெறுமை உடனே நிற்கிறது. பேய் படமாக இருந்தாலும் புதிதாக திகிலுட்டும் விதத்தில் எந்த ஒரு முயற்சியும் இயக்குநர் எடுக்கவில்லை. நன் உருவம் அவ்வப்போது வந்து செல்கிறது அவ்வளவே. மேலும் நன் 1 வெளியான போது சிஸ்டர் ஐரினிற்கும் காஞ்சுரிங்கில் வரும் லோரெய்ன் வாரனிற்கும் தொடர்பு இருக்கிறதா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. நன் 2’ல்  அந்த இருவருக்கும் தொடர்பு உள்ளதென சிறு ஹிண்டை கொடுத்துள்ளார் இயக்குநர்.


 நன் 1, காஞ்சுரிங் திரைப்படங்களை ஆங்காங்கே தொட்டுவிட்டு போகும் நன் 2, எதையும் முழுதாக விவரிக்கவில்லை. அனைத்தும் அரைகுறையாக சொல்வது போன்ற உணர்ச்சி எழுந்தது. அரைகுறை கதை..அரைகுறை த்ரில்..என அனைத்தும் அரைகுறையாகவே இருக்கிறது. நன் 2 தனிப்படமாக பார்க்க சிறந்த படமாக இல்லையென்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் நன் படங்களுக்கு நல்ல ஒரு பக்கபலமாக இருக்கும் என்றே கூறலாம். மொத்தத்தில் நன், காஞ்சுரிங் திரைப்பட பிரியர்கள் அந்த கதையின் தொடர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நன் 2 திரைப்படத்தை சென்று பார்த்து வரலாம்.