Poacher Web Series Review: நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள போச்சர் வெப் சீரிஸின் விமர்சனம் பற்றி காணலாம்.
போச்சர்
அமேசான் பிரைமில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான இணையத் தொடர் போச்சர் (Poacher). நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யூ, திப்யேந்து பட்டாச்சார்யா, அன்கித் மாதவ் உள்ளிட்டவர்கள் இதில் நடித்துள்ளார்கள். டெல்லி கிரைம் சீரிஸை இயக்கி கவனம் ஈர்த்த ரிச்சி மேதா இந்த தொடரை இயக்கியுள்ளார். கேரள மாநிலத்தில் தந்தங்களுக்காக நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ளது இந்த தொடர். போச்சர் தொடரின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.
தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப் படுவது
பில்லியர்ட்ஸ் என்கிற விளையாட்டைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா. ஒரு மேசையில் நிறைய பந்துகள் இருக்க அதனை நீளமான ஒரு குச்சியை வைத்து துளைக்குள் அடித்துவிடும் ஒரு சொகுசு விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு தேவையான பந்துகள் ஒரு காலத்தில் யானை தந்தங்களால் செய்யப்பட்டன என்றால் அச்சரியப்படுவீர்களா? ஒரு யானை தந்தத்தை வைத்து சுமார் 16 பந்துகளை செய்ய முடியுமாம். இப்படி பல காரணங்களுக்காக காட்டின் உண்மையான அரசர்களான யானைகள் கொன்றொழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
1991 ஆம் ஆண்டும் இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தைக் அமலாக்கத்திற்கு கொண்டு வந்தது. மனிதர்களின் பேராசைகளுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு வந்தன. 2005 ஆம் ஆண்டு வரலாற்றில் அதுவரை இல்லாத அளவு யானைகள் கொல்லப்பட்ட உண்மைகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளை தங்களது உயிரை பணயம் வைத்து பிடிக்கும் வன பாதுகாவலர்கள் பிடிப்பதே போச்சர் தொடரின் கதை.
கதை
தந்தங்களுக்காக 18 யானைகளை வேட்டையாடியதாக வேட்டைக்காரன் ஒருவன் வந்து சரணடைவதில் இருந்து கதை தொடங்குகிறது. பறவைகள் சரணாலயத்தில் பாதுகாவலராக இருக்கும் மாலாவிடம் ( நிமிஷா சஜயன்) இந்த விசாரணை ஒப்படைக்கப்படுகிறது. பாம்புகள் நிபுணரான அலன் (ரோஷன் மேத்யு) மற்றும் வன அதிகாரியான விஜய் பாபு (அன்கித் மாதவ்) ஆகிய இருவர் இந்த விசாரணையில் அவருக்கு உதவுகிறார்கள். இந்த யானைகளை கொன்றவர்கள் யார்? அவர்களை இதை செய்யத் தூண்டியது யார்? இந்த தந்தங்கள் எதற்காக பயன்படுகின்றன? என்று தொடங்கும் விசாரணை பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிக்கொண்டு வருகின்றன.
18 யானைகள் என்று தொடங்கிய இந்த விசாரணையில் நுற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. பிழைப்பிற்காக வேட்டையாடுவது முதல் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை இதில் எப்படி சம்பந்தப் படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பது இந்த விசாரணையில் தெரிய வருகிறது. தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சவால்கள் , மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் ஆகிய எல்லாவற்றையும் சமாளித்து இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறதா இல்லையா? என்பதே மீதிக்கதை.
மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதலை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை ஒரு த்ரில்லர் படமாக எடுத்திருப்பது இந்த தொடரின் மிகப்பெரிய பாராட்டிற்குரிய அம்சம். மனிதர்கள் தான் இதில் எதிரிகள். வெறும் பலத்திறகாகவும் பிரம்மாண்டத்திற்காக மட்டும் யானைகள் காப்பாற்றப் பட வேண்டிய விலங்குகள் இல்லை. காடுகளை உயிருடன் வைத்திருக்கு யானைகளில் பங்கு அவசியமாகிறது. மனிதர்கள் தான் அவற்றுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த தொடர்.
இரு தரப்புகளைச் சேர்ந்த மனிதர்கள் இதில் காட்டப்படுகிறார்கள். ஒரு தரப்பினர் யானைகளின் தந்தங்களை தங்களது வீடுகளை அலங்கரிக்க சேர்க்கிறவர்கள். இவர்களுக்கு இது ஒரு கிளர்ச்சி , பெருமை தரும் ஒரு பழக்கமாக இருக்கிறது. மறு தரப்பில் இருப்பவர்கள் காடுகளை நன்றாக அறிந்த இயற்கையுடன் மிக நெருக்கமாக இருந்து அதை தெரிந்து வைத்திருக்கக் கூடிய வேட்டைக்காரர்கள். இயற்கையை வெல்லத் துடிக்கும் ஆண்களுக்குள் இருக்கும் ஆதார உணர்ச்சியின் வெளிப்பாடாக வேட்டையாடுவது சித்தரிக்கப் படுகிறது.
மாலா போன்ற பெண் கதாபாத்திரம் இந்த தொடரில் முக்கியத்துவம் பெறுவது இந்த காரணங்களால் தான். யானைகள் தாய்வழிச் சமூகத்தை பின்பற்றுபவை. அவற்றை வேட்டையாடுவது என்பது ஆண்கள் தங்களது திமிரை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு வெளிப்பாடாகவும் பார்ப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் மாலாவின் தந்தை ஒரு வேட்டைகாரனாக இருந்தவர். ஒருவகையில் தனது தந்தை செய்த பாவங்களுக்கு எல்லாம் பிராயசித்தம் தேடும் ஒரு முயற்சியாகவே இந்த விசாரணையை விடாப்பிடியாக தொடர்கிறார் அவர்.
மனிதர்கள் மட்டும் இதில் முக்கியத்துவம் பெறுவதில்லை .ஒவ்வொரு காட்சியிலும் மான், கரடி, பாம்பு, எலி , குருவி, பருந்து என ஒவ்வொரு ஃபிரேமிலும் விலங்குகள் இருக்கின்றன.ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு இருக்கும் பின்கதைகளும் ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒரு விசாரணையை மேற்கொள்ளும் போது அதில் ஏற்படும் எதார்த்த சிக்கல்களை நிதானமாக அலசுகிறது இந்த வெப் சீரிஸ். அதே நேரத்தில் கதையின் சுவாரஸ்யம் எந்த இடத்திலும் குறைவதில்லை.
நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யு மற்றும் மற்றும் உயரதிகாரியாக வரும் திப்யேந்து பட்டாச்சார்யா சிறப்பு கவனம் பெறுகிறார்கள். பல்வேறு நிலப்பரப்பில் நிகழும் கதையை பட்டவர்த்தனமாக இல்லாமல் குறைந்த ஒளியில் சித்தரித்துள்ளார் ஒளிப்பதிவாளர். கிராஃபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப் பட்டுள்ளன. த்ரில்லர் ஜானரில் எத்தனையோ வெப் சீரிஸ்கள் வந்திருந்தாலும் கூட சூழலியல் கருத்தியலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் போச்சர் சீரிஸ் தனித்துவமான ஒரு இடத்தை பெறுகிறது.