நந்தன்
இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் நந்தன். ஸ்ருதி பெரியசாமி , பாலாஜி சக்திவேல் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நந்தன் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ.
நந்தன் கதை
வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலுக்கான நாமினேஷன் தொடங்குகிறது.
வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் ஆள்கிறது சொம்புலிங்கத்தின் குடும்பம் (பாலாஜி சக்திவேல்). தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும்போதே தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவிடுகிறார்கள். அப்படி எதிர்த்து போட்டியிட முயற்சிக்கும் நந்தன் என்கிறவர் அடுத்த காட்சியில் கொல்லப்படுகிறார்.
இதே வணங்கான்குடியில் சொம்புலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார் கூல் பானை என்கிற அம்பேத்குமார் (சசிகுமார்)
இந்த வருடமும் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் மகிழ்ச்சியில் சொம்புலிங்கம் இருக்கும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது. வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இனி தான் போடியிட முடியாது என தெரிந்துகொண்ட சொம்புலிங்கம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தன் சார்பாக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்கிறார். தன் சார்பாக கூல் பானையை நிற்க வைத்து அவனை வெற்றிபெற செய்கிறார்.
பதவி , அரசியல் தன் மக்களின் முன்னேற்றம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக தன் முதலாளி சொல்வதை மட்டும் செய்கிறார். ஊராட்சி மன்ற தலைவரான பின்னும் தன் மக்களின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை அம்பேத்குமாரிடம் பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன. ஆள்வதற்கு தான் அதிகாரம் தேவை என நினைக்கும் அம்பேத்குமார் வாழ்வதற்கே அதிகாரம் எவ்வளவு முக்கியம் என உணர்ந்து கொள்வதை தான் உணர்ச்சிவசமான ஒரு படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் இரா சரவணன்.
அரசியல் அதிகாரம் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்கிற அரசியல் கருத்தாக்கம் பற்றி நாம் பரவலாக பேசினாலும் இன்னும் சில கிராமங்களில் தலித் மக்களுக்கு தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றிய விளிப்புணர்வே இல்லாத நிலையும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியே தங்கள் உரிமைகளை தலித் மக்கள் பெற நினைத்தாலும் ஆதிக்க சாதியினர் அவர்களிடம் அதிகாரம் செல்லாமல் இருக்க எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை நந்தன் திரைப்படம் பேசுகிறது.
கதை ரீதியாக யோகிபாபு நடித்த மண்டேலா படத்திற்கு நந்தன் படத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கலாம். மண்டேலா காமெடி ஜானர் வழியாக ஒரு கதையை சொன்னது என்றால் முழுக்க முழுக்க எதார்த்த களத்தில் நின்று உணர்வுப்பூர்வமாக நந்தன் படம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த உணர்ச்சியை திரைக்கதை நேர்த்தியுடன் சொல்லத் தவறியிருக்கிறது நந்தன் திரைப்படம். இரண்டாம் பாதியில் ஒரே காட்சிகள் மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகின்றன. படத்தின் நீளம் 2 மணி நேரம் என்பதால் திரைக்கதையில் இருக்கும் தொய்வு பெரிதாக கதையை பாதிப்பதில்லை.
நிறைய இடங்களில் காட்சிகளின் நீளமும் ஜிப்ரானின் பின்னணி இசையும் கதையின் எதார்த்தத்தை மீறி துருத்திக்கொண்டு தெரிகின்றன.
அம்பேத்குமாராக நடித்திருக்கும் சசிகுமார் தொடக்கத்தில் நடிப்பில் சில புதுமையை காட்டினாலும் அவரது கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கலாம். வில்லனாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் தனது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி சிறப்பாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரமும் முழுமை பெறாமலேயே உள்ளது.
நந்தன் திரைப்படம் இன்னும் பல்வேறு கிராமங்களில் நிலவிவரும் சாதிய ஒடுக்குமுறையை வெகுஜன வெளிச்சத்திற்கு கொண்டு வரும் திரைப்படமாக அமையும்.