Thugs Movie Review: நடன இயக்குநர் பிருந்தாவின் இயக்கத்தில் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள படம் “தக்ஸ்”. இந்த படத்தில் ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த் , அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தக்ஸ் படம் மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்  படத்தின் ரீமேக் ஆகும். தமிழுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 


கதையின் கரு 


கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக ஹிருது ஹாரூன் கன்னியாகுமரி மாவட்ட சிறையில் அடைக்கப்படுகிறார். தனக்காக வெளியே காத்திருக்கும் அவரின் காதலியான அனஸ்வரா ராஜனுக்காக சிறையில் இருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்.  அப்படி இருக்கையில் அதே சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் சேர்த்துக் கொண்டு வெளியே தப்பிக்க திட்டம் போடுகிறார். ஹிருது ஹாரூன் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும். 


படம் எப்படி?


கதை முழுவதும் சிறை வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது. ஆனால் முதல் படமான ஹே சினாமிகா முழுக்க காதல், இரண்டாவது படமான தக்ஸ் முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் என இயக்குநர் பிருந்தா ஆச்சரிப்பட வைக்கிறார். தக்ஸின் மிகப்பெரிய பலமே மேக்கிங். கலை இயக்குநரின் நேர்த்தி, சிறைச்சாலை அறைகளுக்குள் தவழும் ஒளிப்பதிவு, இவற்றுக்கெல்லாம் மேலாக சாம் சிஎஸ் கொடுத்த பின்னணி இசை அனைத்து கச்சிதமாக தக்ஸ் படத்தை தாங்கி பிடிக்கிறது. 


கவனம் பெற்ற நடிகர்கள் 


ஹீரோ ஹிருது ஹாரூன் தனது சிறந்த நடிப்பை வழங்கி படம் பார்ப்பவர்களின் பாராட்டைப் பெறுகிறார். இதேபோல் 2வது ஹீரோவாக வரும் பாபி சிம்ஹாவும் படத்தின் நிறைவான நடிப்பையே வழங்கியுள்ளார். சிறை அதிகாரியாக வரும் ஆர்.கே.சுரேஷ், சக கைதியான முனிஷ்காந்த், பி.எல்.தேனப்பன் என அனைவரின் கேரக்டர் தேர்வில் பிருந்தாவின் மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது. ஹீரோயின் அனஸ்வரா ராஜனுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. 


கதை எப்படி இருந்தாலும் காட்சிகள் அமைப்பு கதையை ரசிக்கும்படி செய்து விடும். அந்த வகையில் சிறையில் இருந்து கைதிகள் தப்பிப்பது தான் ஒன்லைனர் என்றாலும், அதனை ஆக்‌ஷன் காட்சிகளால் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் ரசிகர்களிடத்தில் பிருந்தா பாராட்டைப் பெறுகிறார். ஹீரோவின் பின்னணி உள்ளிட்ட சில காட்சிகள் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் அதனை விறுவிறு திரைக்கதை சரி செய்கிறது. 



மொத்தத்தில் தக்ஸ் படம் ரசிகர்களிடத்தில் லைக்ஸ் பெறுகிறது...!