கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவநட்சத்திரம் படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் டிவீட்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”கௌதம் மேனனின் துருவநட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசை தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டேன். டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துருவநட்சத்திரம் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
துருவநட்சத்திரம்:
காதல் சொட்டும் விண்ணைதாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களையும் தாண்டி காக்கா, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்ஷன் படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்த வரிசையில் மேலும் ஒரு ஆக்ஷன் படமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது தான் துருவ நட்சத்திரம்.
கவனம் ஈர்த்த விக்ரம் டீசர்
சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கியது. ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன், விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்த இப்படம், கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிளிம்ப்ஸ், 4 ஆண்டுகளுக்கு முன்பான டீசர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இரண்டு பாடல்கள் என அனைத்துமே பெரும் வரவேற்றபை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.
7 ஆண்டுகளாக தொடரும் இழுபறி:
இதனிடையே எதிர்பாராத விதமாக, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நிதிப்பற்றாக்குறையால் முடங்கியது. இதனால், விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இருவரும் தங்கள் வெவ்வேறு படங்களில் பிசியாகினர். இந்நிலையில், இருவரும் இணைந்து பேசி இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கியதாவும், டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
முடிவுக்கு வருகிறதா காத்திருப்பு?
தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் மேனன், படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியதாகவும், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் நிலைக்கு முன்னேறிவிட்டதாகவும், ரிலீஸ் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். VFX பணிகளை மேற்கொள்ள உள்ளதாவும், தானும் பட ரிலீசுக்கு ஆர்வமாகக் காத்திருப்பதாகவும் கௌதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், அவரது பிறந்த நாளையொட்டி, துருவநட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.