தமிழ் சினிமாவில் தற்போது அடித்து ஓய்ந்துள்ள புயல் என்றால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் லால் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் தான். பக்ரித் விடுமுறையை குறிவைத்து வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்துள்ளது. சமூகநீதி கருத்தை மையமாக வைத்து வெளியான அரசியல் படமான மாமன்னன் படம் குறித்து சினிமா பிரபலங்களைக் கடந்து அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 


சினிமா கெரியரில் தனது கடைசி படம் என அறிவித்த உதயநிதிக்கு இப்படம் மிகவும் முக்கியமான படம் என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நகைச்சுவை நடிகராக உயரத்தில் மிளிரும் நடிகர் வடிவேலு இப்படத்தின் டைட்டில் கேரக்டரில் நடித்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. மிகவும் தத்ரூபமான அவரது நடிப்பிற்கு தியேட்டரில் ஒருமுறையாவது கைத்தட்டாமல் வெளிவந்த ரசிகர்களே இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருப்பார். இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது விமர்சனத்தில், வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 


இப்படத்தின் மற்றொரு பலமாக பார்க்கப்படுவது, இசையும் பாடல் வரிகளும் தான். இசையில் ஏ.ஆர். ரகுமான் உச்சம் தொட்டிருந்தால், வரிகளில் யுகபாரதி வரலாற்று அரசியல் பாடம் எடுத்திருப்பார். கதைக்களத்துக்கு நன்கு ஒன்றிப்போன பாடல் வரிகள் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பையே பெற்றது. 


அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில், நடிகர் வடிவேலு, இந்த படத்தில் தான் தன்னை சிரிக்க வேண்டாம் என கட்டளையிட்டார்கள் என பேசினார். அதேபோல், மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களை படக்குழுவுடன் சந்தித்தார் வடிவேலு. அப்போது மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியிருந்தார். 


இந்நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பது குறித்த தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரத்துக்குள் அடிபடுகின்றன. ஆனால் அது எந்த படம் என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதாவது மாரி செல்வராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ’வாழை’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோரை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களில் எதாவது ஒரு படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளாரா அல்லது வேறு படமா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்போது தான் தெரியவரும். 


ஏற்கனவே தனது இயக்கத்தில், வெளியான கர்ணன் படத்தில் நடிகர் லால் நடித்த ஏமன் கதாபாத்திரம் வடிவேலுவை மனதில் வைத்து தான் உருவாக்கியதாக மாரி செல்வராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.