மின்மினி கதை
தனது ஒட்டுமொத்த பள்ளிக்கே செல்லப்பிள்ளையாக இருக்கிறான் பாரி முகிலன் (கெளரவ் கலை). கால்பந்தாட்டத்தில் சிறப்பாக விளையாடி தனது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதால் அவன் செய்யும் எந்த சேட்டையும் ஆசிரியர்களால் கண்டிக்கப் படுவதில்லை. இப்படியான நேரத்தில் தான் அந்த பள்ளிக்கு புதிதாக வந்து சேர்கிறார் சபரி (பிரவீன் கிஷோர்). பாரி ஃபுட்பால் நன்றாக விளையாடுவது போல் சபரி செஸ் நன்றாக விளையாடக் கூடியவன் அதே நேரத்தில் ஒரு ஓவியனாக வேண்டும் என்பது தான் அவனது ஆசை. சபரியின் வருகைக்குப் பின் ஆசிரியர்களின் கவனம் தன்மீது இருந்து விலகுவது பாரிக்கு பிடிப்பதில்லை. இதனால் அடிக்கடி சபரியை சீண்டியபடியே இருக்கிறான். மோதலில் தொடங்கும் இந்த இருவரின் சந்திப்பு மெல்ல மெல்ல நட்பாய் மாறுகிறது. ஆனால் அதற்குள்ளாக ஏற்படும் விபத்தில் சபரியின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும் பாரி இறந்து விடுகிறான். தன் உயிரைக் காப்பாற்ற ஒருவனின் உயிர் போன குற்றவுணர்ச்சியால் மனதளவில் பாதிக்கப் படுகிறான் சபரி. தன் குற்றவுணர்ச்சியைப் போக்கிக் கொள்ள தனக்கு பிடித்த ஓவியம், செஸ் விளையாட்டு என எல்லாவற்றையும் கைவிட்டு பாரியின் கனவுகளை சுமக்கத் தொடங்குகிறான். அதே பள்ளியில் வந்து சேர்கிறார் பிரவீனா. இறந்த பாரியின் இருதய தானத்தால் உயிர்பிழைத்தவர் பிரவீனா ( எஸ்தர் அனில்). சபரி தனது குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா , எஸ்தர் இந்த பயணத்தில் சபரிக்கு எப்படி உதவுகிறாள் என்பது தான் மின்மினி படத்தின் கதை.
மின்மினி விமர்சனம்
முதல் பாதி முழுவதும் பள்ளி பருவ நாட்களை சொல்ல இரண்டாம் பகுதி இமயமலைக்கு ஒரு குட்டி ரோட் ட்ரிப் சென்றுவந்த அனுபவத்தை தருகிறது. கதிஜா ரஹ்மானின் பின்னணி இசை படம் முழுவதும் தொடர மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு இமயமலைத் தொடர்களை பார்க்கும் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுகிறார்கள்.
இளம் வயதில் நம் பாலிய பருவத்தில் ஏற்படுத்தும் ஒரு குற்றவுணர்ச்சியில் இருந்து ஒரு மனிதனை விடுவிக்கும் கதையை ஒரு நல்ல அனுபவமாக மாற்ற இயக்குநர் ஹலிதா ஷமீர் முயற்சி செய்திருக்கிறார். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர், பிரவீன் , கெளரவ் ஆகிய மூவரும் வளரும் வரை அவர்களுக்காக 8 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். மின்மினி படத்திற்காக செலுத்தப் பட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானதும் பாராட்டிற்குரியதும். ஆனால் ஒரு திரையனுபவமாக மின்மினி முழுமை பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தனது முந்தைய படங்களில் உணர்வுகளை மிக மென்மையாக கையாண்ட ஹலிதா ஷமீம் இப்படத்தில் தனது பிஞ்சு கதாபாத்திரங்களின் மேல் பெரும் தத்துவ சுமையை ஏற்றிவிட்டிருக்கிறார். ஒரு பயணத்தின் வழி இரு நபர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடுவது தான் கதை என்றால் அதை இன்னும் கூட எதார்த்தத்திற்கு நெருக்கமானதாக எடுத்திருக்கலாம். படத்தில் வரும் சிறுவர்கள் யார்? அவர்களின் பெற்றோர்கள் போன்ற எந்த லாஜிக்கலான கேள்விகளைப் பற்றியும் இயக்குநர் கவலைப்படாதது போல் இருக்கிறது. அந்த லாஜிக் தேவையில்லை என்று எடுத்துக் கொண்டாலும் முழுக்க முழுக்க குழந்தைகளின் கண்களின் வழியாக பார்க்கக் கூடிய ஒரு அனுபவமாக படம் இருந்திருக்கலாம். ஆனால் படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் இயக்குநரின் குரல் தனித்து தெரிகிறது.
பேசப்படும் பெரும்பாலான விஷயங்கள் அனுபவமாக இல்லாமல் வெறும் வசனங்களாக மட்டுமே இருந்து விடுகின்றன . அதுதான் படத்தின் முகப்பெரிய குறையும் கூட.