சேலம் மாநகர் அஸ்தம்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர் நடராஜன், திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் பங்கேற்று புற்றுநோய் கதிரியக்க இயந்திரத்தை துவக்கி வைத்தனர். 



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், "நம்ம ஊர்ல உணவுக்கு பஞ்சமே இல்லை. எல்லா நல்ல உணவுமே சுலபமா கிடைக்கும். என்னை பொறுத்த வரைக்கும் அம்மா சாப்பாடு தான் பெஸ்ட் உணவு. உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆறு நாள் உடற்பயிற்சியில் நான் ஈடுபடுவேன். மூன்று வருட சிகிச்சைக்கு பின்னரும் நான் உடற்பயிற்சி செய்து வருகிறேன். கத்தி உடம்பில் பட்ட பிறகு பழைய உடல்நிலை இல்லை. அதற்கு வாய்ப்பளிக்காமல் அனைவரும் தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எல்லாரும் லைப்ப பாத்துக்கிட்டு உடம்பை பார்க்க மாட்டேங்கிறாங்க. உடற்பயிற்சி அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்துவிட்டால் சுலபமாகிவிடும். நான் இதுவரை டயட் எடுத்தது இல்லை” என்றார்.



தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி அர்ஜுனன், "பள்ளி பருவத்தில் மைதானத்தில் வானம் பார்த்து விளையாடியது போல அதன் பிறகு ஷாப்பிங் போகும்போது மட்டுமே வானத்தை பார்க்கிறோம். ஆனால் வானம் பார்த்த பூமி போல எப்பவும், வானம் பார்த்து விளையாட வேண்டும். ஆரோக்கியமாக இருக்க உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் தேவை. தினசரி உடற்பயிற்சி செய்தால் மருத்துவமனைகளுக்கு வரத் தேவையில்லை. ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் அதனை பராமரிப்பது எவ்வளவு தேவையோ அதே போல் உடலுக்கு உணவும் உடற்பயிற்சியும் அவசியம். நாம் பணத்தை அதிகம் சம்பாதிக்க ஆரோக்கியத்தை குறைத்து வருகிறோம் என்ற அவர், ”தற்போது குடிக்கிற சமூகம் அதிகமாகி விட்டதால் குடிக்காதவர்களை காமெடியனாக பார்க்கிறார்கள். ரீல்ஸ் எடுக்க தெரிந்தவர்களை தான் இன்றைய பெண்கள் கணவனாக தேர்வு செய்கிறார்கள் ஷார்ட்ஸ், செல்ஃபி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஆண்கள் எந்த அளவிற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துதான் பெண்கள் அட்ராக்ட் ஆகிறார்கள். பள்ளி மாணவர்கள் அதிகமாக கூல் லிப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த ஜெனரேஷனில் ஸ்கூல் மாபியா உருவாகிவிடும். ஆகையால் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.