இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'. இந்தப் படத்தில் ஆரவ், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, மகத்,அமித் பார்கவ் நடித்துள்ளனர். மணிகந்த் கத்ரி இசையமைத்துள்ள இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியே ஆகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.
கதையின் கரு
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அதிகார பலமும் பண பலமும் கொண்ட கும்பலால் மஹத் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது அமித் பார்கவ் மற்றும் சுப்பிரமணியம் சிவா என்பது வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு தெரிய வருகிறது. இதனால் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என திட்டம் போடுகிறார்கள்.
அதற்காக காவல்துறை அதிகாரியாக வரும் வரலட்சுமி மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு வாங்கி செல்கிறார். இவர்களின் திட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் சுப்பிரமணியம் சிவா கொல்லப்படுகிறார். அமித் பார்கவ் காயத்துடன் உயிருக்கு போராடுகிறார்.
ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தியது வரலட்சுமி குழு கிடையாது என்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் அமித் பார்கவ் மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஆரவ் என்பதை வரலட்சுமி கண்டுபிடிக்கிறார். ஆனால் ஆரவ், இந்த குற்ற சம்பவத்திலிருந்து வரலட்சுமி குழுவினரை காப்பாற்றவே அப்படி செய்ததாக தெரிவிக்கிறார். ஆரவ் ஏன் இவர்களை காப்பாற்ற வேண்டும்?... கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஆரவிற்கும் என்ன பகை என்பதை க்ரைம் திரில்லர் பாணியில் விவரிக்கிறது இந்த படம்.
படம் எப்படி?
பக்காவான க்ரைம் திரில்லர் பாணியிலான ஒரு கதையை அழுத்தமில்லாத திரைக்கதையால் சுவாரசியம் குறைவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். மஹத் தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து மற்ற இன்விஸ்டிகேஷன் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்கிறது. பாடல்கள் படத்திற்கு தடையாக இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக வரலட்சுமி கொலை செய்ய திட்டமிடும் காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது.
நடிப்பு எப்படி?
பொதுவாக க்ரைம் த்ரில்லர் பாணியிலான படங்களில் காட்டப்படும் நடிகர்களின் முகத்தின் உணர்வுகள் தான் படம் பார்ப்பவர்களையும் ஒருவித பதற்றத்திலேயே வைக்கும். ஆனால் இப்படத்தில் அது மிஸ்ஸிங். பின்னணி இசையால் காட்சியை எதிர்பார்த்தபடி வரவைத்திருந்தாலும் நடிப்பு என்பது குறையாகவே படுகிறது. எப்போதும் ஒரே மாதிரியாக உம்மென்று இருப்பது, விறுவிறுப்பு இல்லாத விசாரணை என குறைகள் இருந்தாலும் “மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்” படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.