கதையின் கரு : உருகி உருகி காதலிக்கும் நிகித்தாவிற்காக (இவனா) புது போன் ஒன்றை பரிசளிக்கிறார் உத்தமன் பிரதீப் (பிரதீப்
ரங்கநாதன்). இவர்கள் காதலிப்பது நிகித்தாவின் அப்பாவிற்கு (சத்யராஜ்) தெரியவர, அவர்களின் இருவரின் போனை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை எடுத்து வைக்கிறார். இதற்கு, பின் இருவரின் போன்களை
ஒருவொருக்கொருவர் நோண்டி பார்க்க, அவர்களை பற்றிய அனைத்து விஷயங்களும் வெளியே வருகிறது. உண்மையை தெரிந்த காதலர்கள் இருவரும், கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். இறுதியில் ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேர்வார்களா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
படத்தின் அஸ்திவாரமாக அமைந்த நடிகர்கள் :
பிரதீப் ரங்கநாதன் :
பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், பிரதீப் இடத்தில் ஒரு அசாதாரண நம்பிக்கை தெரிந்தது. படம் பார்த்த பின்புதான் புரிகிறது, அவர் ஏன் இவ்வளவு நம்பிக்கையாக இருந்தார் என்பது. கோமாளி படத்தில் குட்டி சீன் ஒன்றில் நடித்து இருந்தாலும், அவருக்கு முழு நீள படத்தில் நடிப்பது இதுவே முதன் முறை. ஆனால், இந்தப்படத்தில் தனக்குரிய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
எண்ட்ரி சீனில் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் கொஞ்சம் இருந்தாலும், போக போக அரங்கம் அலறும் அளவிற்கு சத்தம் தூளாக இருந்தது. நடிப்பில் அசத்தி இருந்த பிரதீப் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திலும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். படத்தில் எந்த ஒரு இடத்திலும் போரடிக்கவில்லை. முழு படத்தையும், பிசிறு ஏதும் இல்லாமல் நீட்டாக இயக்கியுள்ளார்.
இவானா :
நாச்சியார், ஹீரோ ஆகிய படங்களில் நடித்த இவனாவும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இவானாவை இன்னும் சற்று அழகாக காட்டி இருக்கலாம்.
ராதிகா சரத்குமார் :
பிரதீப்பிற்கு, அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்போதும் மகனிடம் சண்டை போடும் அம்மாவாக இருந்தாலும், படத்தின் இறுதி காட்சியில், “நம்பிக்கைதான் முக்கியம்” என்ற சூப்பர் மெசேஜினை சொல்லியுள்ளார்.
சத்யராஜ் :
இவானாவிற்கு, அப்பாவாக நடித்த சத்யராஜ், பூமர் அங்கிளாக நடிக்கவில்லை..அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
யாராலும் புரிந்து கொள்ள முடியாத இவரும், க்ளைமாக்ஸில் இன்றைய காலத்து காதல் பற்றி “நாங்கள் உங்களை பிரிக்க தேவையில்லை, அதற்குமுன் நீங்களே பிரிந்து விடுவீங்க”என்று டைமிங்காக பேசி அசத்தினார்.
யோகி பாபு
யோகி பாபு காமெடி செய்து பார்த்திருப்போம், ஆனால் இப்படத்தில் தனியாக காமெடியனாக பயணிக்காமல், அவர் படக்கதையுடன் பிண்ணி பிணைந்து நடித்துள்ளார். கடைசியில், எமொஷனலாக பேசி அனைவரையும் ஃபீல் செய்து விட்டார்.
மற்ற கதாபாத்திரங்கள் :
துணை கதாப்பாத்திரத்தில் நடித்த ரவீனா ரவி பார்க்க அழகாக உள்ளார். சூப்பர் சிங்கர் ஆஜித், குட்டி சீனில் வந்தாலும் எதர்த்தமாக நடித்துள்ளார். பின், பிரதீப் ரங்கநாதனின் நண்பர்களாக நடித்த ஆதித்யா கதிர் மற்றும் பல நபர்கள், டைமிங் சென்ஸ் காமெடியை டெலிவர் செய்து கைத்தட்டல்களை பெற்றனர்.
யுவனின் துள்ளல் இசை :
தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள யுவனின் மியூசிக் வேற லெவலில் இருந்தது. படத்திற்கு தேவையான நேரங்களில் பாடல்கள், உணர்ச்சியை தூண்டும் பிண்னணி இசை ஆகிய அனைத்தும், யுவன் எப்போதும் யுவன் தான் என்று நிரூபித்து விட்டது. எல்லோருக்கும், ‘பச்சை இலை’ மற்றும் ‘என்னை விட்டு’ ஆகிய பாடல்கள், ரசிகர்களை கொன்று தின்றது என்றே சொல்லலாம்.
லவ் டுடேவை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாமா ?
படத்தில் உள்ள நட்சத்திரங்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை நியாமாக நடித்து லவ் டுடே என்னும் படத்திற்கு அஸ்திவாரமாக ஆகிவிட்டனர். படத்தின் நீளம் ஒன்றே, லவ் டுடேவின் நெகட்டிவ் பாயிண்ட். மற்றபடி, படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமே விடை கிடைத்தது. இன்றைய காதலை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் முகம் சுழிக்கும் காட்சிகளை படம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை, சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது.
மீண்டும் பிரதீப் ஹீரோவாக எப்போது நடிப்பார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர். இயக்குநராக, “காதலுக்கு நம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று” என்று அவர் கூற வந்த கருத்து மக்களிடம் சேர்ந்தது. இப்படம், இளசுகள் பற்றி கதையென்றாலும் சிறியவர் முதல் பெரியவர் சென்று பார்க்கலாம். நண்பர்களுடன் சென்றால் படத்தை ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்து கொண்டாடலாம். ஒரு நல்ல படத்தை பார்த்து சிரித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றால் இப்படத்தை பாருங்கள்.