விஜய் தொலைக்காட்சி சேனலின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன்4-இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் பரத், நடிகை வாணி போஜன் பங்கேற்கும் புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


புதுமையான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதிலும் அதில் ரசிகர்களை ஈர்ப்பதிலும் முன்னணியில் உள்ளது விஜய் டிவி. அந்த வகையில் இதுவரையில் எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சிகளிலும் பார்த்திராத ஒரு புதுமையான குக்கிங் கம் காமெடி ஷோ குக் வித் கோமாளி.  உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி பலருக்கும் மிக பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று சீசன்களாக மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 


இதன் ஃபினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிப்பரப்பாகும் என விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த சீசனில் பத்து பிரபலங்களுடன் தொடங்கிய ஷோ, விதவிதமான சவால் நிறைந்த சமையல் போட்டிகளுடன் விறுவிறுப்பாக சென்றது. நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார்கள்.நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார்.  அவருடன் மணிமேகலையுன் இணைந்துள்ளார். புரோமோவில் மணிமேகலையும் இருக்கிறார். முதல் ஆறு போட்டியாளர்கள் தங்கள் கோமாளிகளுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். சிருஷ்டி, மைம் கோபி, சிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய போட்டியாளர்களும் புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா ஆகிய கோமாளிகளும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.


இறுதிப்போட்டியில் தொகுப்பாளினி பிரியங்கா குழுவினருடன் இணைகிறார். இதில் மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ஆகிய புத்தங்களை எழுதிய எழுத்தாளர்பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மேலும், மனதிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளியும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். 






இரண்டு புரோமோகள் வெளியிடப்பட்டுள்ளன். மூன்றாம் புரோமோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தியது குறித்து போட்டியாளர்கள் மனம் திறந்து பேசுகின்றனர். ஷிவாங்கி, என்னை ஆளாக்கிய இந்த செட்டிற்கு நன்றி எனவும், நிறைய பேருக்கு மோனிஷா தெரியுது என்று போட்டியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர். இப்படி பல சுவாரஸ்யங்களுடனும் மனம் நெகிழும் தருணங்களும் இறுதிப்போட்டியில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


என்னென்ன டாஸ்க்:


ஒவ்வொரு ரவுண்டிலும் சவாலான டாஸ்க்குகள் வழங்கப்படும். போலவே,இறுதிப்போட்டியிலும், நிலம்,நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய தீம்களில் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது. யாருக்கு எது மிகவும் கடினமாக இருக்குமோ அதையே போட்டியாளர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். போட்டி காமெடியாகவும் அதேசமயம் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் இந்த போட்டியில் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாததால் இந்த தகவல் உண்மையானதா இல்லை வெறும் வதந்தியா என்பது தெரியவில்லை. இறுதி சுற்று முடிவு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகே தெரியவரும். 


 



 


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக மிகவும் ஃபேவரட் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த நான்காவது சீசனில் குக்காக புரொமோஷன் பெற்று மிக சிறப்பாக சமைத்து பல முறை நடுவர்களின் பாராட்டுகளை குவித்தார். இந்த 4வது சீசனோடு இனிமேல் இந்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என ஏற்கனவே சிவாங்கி கூறியிருந்தார். சீசன் 4 இறுதி சுற்று செட்டில் கடைசி நாள் அன்று எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார் சிவாங்கி. "4 வருடங்களாக ஏகப்பட்ட மெமரிஸ், எக்கச்சக்கமான ட்ரீம் மொமெண்ட்ஸ். இவை அனைத்துக்கும் குட் பை சொல்வது கடினமாக இருந்தது" என போஸ்ட் செய்துள்ளார்.