ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவான தெலுங்கு பட குஷியின் தமிழ் வெர்ஷனும் இன்று வெளியானது இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதைகளம் : காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ்(விஜய தேவர்கொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலே காதலில் விழும் கதாநாயகன், தன் காதலுக்காக எதை எதையோ செய்கிறார். பின்னர், கதாநாயகியும் அவர் காதலை ஏற்கிறார். விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
அதை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண வாழ்க்கை ஆரம்ப காலகட்டத்தில் இனிதாக போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சண்டை இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது. இவர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது? சண்டைக்கு பின், இவர்கள் எப்படி சேர்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வானா, தனது நான்காவது படமான குஷியின் கதையை நன்றாகவே கடத்தி சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். நிறைய காதல், கதைக்கேற்ற இண்டிமேட் காட்சிகள், கொஞ்சம் காமெடி, ஆங்காங்கு சென்டிமென்ட், தேவைக்கேற்ற இடங்களில் ஆக்ஷன் என அனைத்தும் பார்க்க கோர்வையாக உள்ளது.
படக்குழுவினர் நடிப்பு எப்படி ?
சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் படமும் சரி, சமந்தாவின் படமும் சரி சற்று சுமாராகவே இருந்தது. ஆனால், குஷி அப்படி இல்லை. ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும், இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி திரையில் பார்க்க அழகாக உள்ளதையும் தாண்டி நாமே காதல் செய்தால் எப்படி இருக்கும் என்று கனெக்ட் செய்து கொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவும் ஹீரோயினும் எங்கேயோ போய்விட்டனர். அத்துடன் இப்படம் இவர்களுக்கு கம்-பேக்காக அமைந்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் அப்பாவாக நடித்த சச்சின் கெட்டேகர், மாற்றான் உள்ளிட்ட தமிழ் படங்களின் நடித்திருக்கிறார். நாத்திகவாதியாகவும் பிள்ளையை பெற்ற தந்தையாகவும் இவர் நடிப்பில் குறை ஏதும் இல்லை. கதாநாயகனின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் பற்றி சொல்லவே தேவையில்லை, அவரது நடிப்பு எப்போதும் டாப்புதான். கதாநாயகியின் அப்பாவான முரளி ஷர்மாவின் நடிப்பும் சூப்பர். அத்துடன் இப்படத்தில் லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் அவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
பாடல்கள் சுமாரா? சூப்பரா?
இப்படத்தில் இடம்பெற்றுள்ள என் ரோஜா நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் படம் வெளியாகும் முன்பே ஹிட்டானது. மற்ற பாடல்கள் ஓகே ரகம்தான். கடைசியில் வரும் பார்ட்டி சாங்கில் டப்பிங் ஒற்றுப்போகவில்லை என்பதால் அது பார்க்க கொஞ்சம் கிரிஞ்ஜாக உள்ளது.
படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?
படத்தின் முதல் பாதி, ஒரு எண்ட் கார்ட் இல்லாமல் நீண்டு கொண்டே போனதால் அங்கு சற்று தொய்வு ஏற்பட்டது. படத்தின் நீளம் ஒரு மைனஸ். காஷ்மீரில் தொடங்கி ஹைதராபாத், கேரளா, துருக்கி என பல இடங்களின் அழகை காட்டுகிறது குஷி. அர்ஜுன் ரெட்டி பிஜிஎம், ஊ சொல்றியா மாமா ரெஃபரன்ஸ் வந்த போது விசில் சத்தம் குவிந்தது. ஆக மொத்தம் சித்தாந்தத்திற்கும் சாஸ்திரத்திற்கும் வரும் சண்டையை விட, மனித உணர்வுகளே பெரியது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குஷி படத்தை, உங்கள் லவ்வருடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று கொஞ்சம் ஃபீல் செய்துவிட்டு வரலாம்.