கொட்டுக்காளி
கூழாங்கல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் பி.எஸ்.வினோத்ராஜ். தற்போது சூரி நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். விடுதலை , கருடன் என அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களுக்கு பின் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி ? கொட்டுக்காளி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்
கொட்டுக்காளி கதை
மீனா ( அன்னா பென்) பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலிக்கிறார். இதனைத் தெரிந்துகொள்ளும் அவரது குடும்பத்தினர் அவரை ஒரு பூசாரியிடம் மந்திரிக்க கூட்டிச் செல்கிறார்கள். ஒரு நல்ல காரியத்திற்கு பிறகு செல்லும்போது எந்த வித தடங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற பதற்றம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதற்கு ஏற்றபடியே வரிசையாக அடுத்தடுத்த தடங்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து மீனாவை பூசாரியிடம் கூட்டிச் செல்கிறார்களா ? மீனா , மீனாவின் பெற்றோர்கள் , மீனா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பாண்டி (சூரி) அவரது இரு சகோதரிகள், அப்பா, நண்பர்கள், ஒரு சிறுவன் , பலிகொடுக்கப் போகும் சேவல் என அனைவரும் மேற்கொள்ளும் இந்த சிறிய பயணத்தை ஒன்றரை மணி நேர திரைப்படமாக எடுத்துள்ளார் பி.எஸ்.வினோத்ராஜ்.
கிராமப்புறங்களில் சடங்கு சம்பிரதாயங்களின் பெயரில் பெண்களின் மீது சுமத்தப்படும் ஒடுக்குமுறையை கொட்டுக்காளி படம் நிதானமான திரைமொழியுடன் சொல்கிறது.
விமர்சனம்
பி.எஸ் வினோத் ராஜின் முந்தைய படமான கூழாங்கல் படமும் ஒரு சிறிய பயணத்தை மையப்படுத்தி அமைந்த படம் தான். ஆனால் இந்த பயணத்தை முழுவதுமாக இல்லாமல் குறிப்பிட்ட சில தருணங்களை முதன்மைப்படுத்தி தான் சொல்ல வந்த கருத்தை ஒரு அனுபவமாக மாற்றியிருந்தார் இயக்குநர். கொட்டுக்காளி படமும் அதே போன்ற ஒரு படம் என்றாலும் இதில் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் குறிப்பிட்ட காட்சிகளின் வழியாக இல்லாமல் முழுக்க முழுக்க இந்த பயணமும் அதில் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகள் முழுப்படமாக இடம்பெற்றுள்ளன.
கதாபாத்திரங்கள் ஒன்றரை மணிநேரம் பயணிக்கிறார்கள் என்றால் படமும் அதே நீளம். கதைக்களத்தையும் கதாபாத்திரங்களின் பின்னணியையும் படம் தொடங்கியவுடன் இல்லாமல் போகப் போக நிதானமாக முடிச்சவிழ்க்கும் விதம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. கதை மெதுவாக நகர்ந்தாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சுவாரஸ்யத்தையும் நகைச்சுவையும் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கமர்ஷியல் படத்தில் வரும் ஐந்து நிமிடக்காட்சியை நுண் சரடுகளாக பிரித்தெடுத்து அந்த கனத்தில் பார்வையாளர்களின் மொத்த கவனத்தை சிதறவிடாமல் வைத்திருக்கிறார் இயக்குநர். கிராமப்புறங்களில் பல்வேறு சடங்குகளின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மனநிலை எவ்வாறு செயல்படுகிறது. இந்த மனநிலை உள்ளவர்கள் மத்தியில் ஒரு பெண் எந்த வித ஆர்பாட்டமும் செய்யாமல் தன்னால் முடிந்த அதிகபட்ச எதிர்ப்பைக் காட்டுவதை வெளிப்படையாக சொல்லாமல் மிக நுணுக்கமான சித்தரிப்புகளின் வழி காட்டியிருக்கிறார்கள்.
சடங்குகளில் இருக்கும் ஒருவிதமான திகில் கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இறுக்கம் எல்லாம் சேர்ந்து அடுத்து ஏதோ நடக்கப்போகிறது என நம்மை எதிர்பார்க்கவைக்கின்றன. ஒரு இடத்தில் மீனாவின் அம்மா அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று திரும்பி தனியாக கண்களில் கண்ணீருடன் வரும்போது நம் மனதில் எல்லா விபரீதங்களும் கற்பனைகளாக திரள்கின்றன.
இசை இல்லாது குறையா
வெகுஜன பரப்பில் வெளியாகும் இப்படியான படத்திற்கு பின்னணி இசை இல்லாதது ஒரு பெரிய பலவீனமாக அமையும் என்று படம் வெளியாவயற்கு முன்பு கூறப்பட்டது. ஆனால் அந்த குறையே தெரியாமல் அந்தந்த சூழலில் இருக்கும் ஒலிகள் படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
ஹைலைட்ஸ்
படத்தின் ஹைலைட்டான காட்சி என்றால் ஆட்டோவில் வரும்போது அன்னா பென் பாடலை முனுமுனுக்கும் காட்சியையும். சூரியின் கண்களில் விழுந்த பூச்சியை அவரது அக்கா நாக்கால் எடுக்கும் காட்சியையும் சொல்லலாம்.
நடிப்பு
முக்கிய கதாபாத்திரங்களான சூரி மற்றும் அன்னா பென் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசினாலும் அவர்களின் மனநிலைகள் துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டுள்ளன. யாருக்கும் கட்டுப்படாத உள்ளுக்குள் ஆண் என்கிற கர்வத்தை சுமந்துகொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் எந்த வித மிகையுமில்லாமல் சூரி இந்த கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். நாயகியாக வரும் அன்னா பென் படத்தில் மொத்தம் இரண்டே வரிகள் தான். ஆனால் தனது கோபம் , ஏக்கம் என தனது பார்வையால் எல்லாவற்றையும் கடத்திவிடுகிறார்.
மைனஸ்
படத்தின் பலவீனம் என்றால் கூழாங்கல் படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பொருளுடையவை. ஆனால் கொட்டுக்காளி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களின் காட்சிகள் படத்தின் முழுமைக்கு துணையாக அமைவதில்லை.
இந்த பயணத்தில் கடைசிவரை வரும் சிறுவன் இந்த நிகழ்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறான் என்று அவன் பார்வையில் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கலாம்
ஹாட்ரிக் வெற்றி கொடுத்தாரா சூரி
இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை ப்ரீ க்ளைமேக்ஸில் நாம் பார்த்துவிடுகிறோம். அதே முடிவை நோக்கி படத்தின் நாயகன் சூரி நகர்வாரா என்பது பார்வையாளர்களின் முடிவுக்கு ஓப்பனாக விடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஆணாதிக்க மனநிலையில் கொதிக்கும் ஒருவனாக சூரி வருகிறார். நம் மனசாட்சியை கேள்வி கேட்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் சூரியின் ஒற்றை பரிமாணத்திலான பாத்திர படைப்பு இந்த ஓபன் க்ளைமேக்ஸிற்கு பெரிதாக வலு சேர்ப்பதில்லை. மாறாக அந்த சிறுவனின் பார்வையில் இந்த கதை முடிந்திருக்கும் பட்சத்தில் க்ளைமேக்ஸிற்கு பொருத்தமாக இருந்திருக்கலாம்.
சூரி நடித்த முந்தைய இரு படங்களைக் காட்டிலும் கொட்டுக்காளி வேறுபட்டிருக்கலாம்.ஆனால் ஒரு நடிகராக அவரது கரியரில் ஒரு தனித்துவமான படமாக கொட்டுக்காளி இருக்கும்