ரகு தாத்தா
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எம்.எஸ் பாஸ்கர் , ரவிந்திர விஜய் , ஆனந்த் சாமி , கருண பிரசாத் , தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.
ரகு தாத்தா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ரகு தாத்தா கதை
1970 களில் தமிழ்நாட்டில் உள்ள கிராமம் வள்ளுவம்பேட்டை என்கிற ஒரு கிராமம். இந்த கிராமத்தின் மிகவும் துணிச்சலான பெண்ணாக அறியப்படுபவர் கயல்விழி பாண்டியன். கயல்விழியின் தாத்தா ( எம்.எஸ்.பாஸ்கர்) ஒரு பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதால் தனது பேத்தி கயல்விழியையும் முற்போக்கான சிந்தனையுடன் வளர்க்கிறார்.
வங்கியில் வேலை பார்க்கும் கயல்விழி இந்தி படித்தால்தான் ப்ரோமோஷன் கிடைக்கும் என்றால் அப்படியான ப்ரோமோஷனே வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். க.பாண்டி என்கிற பெயரில் சிறுகதைகள் எழுதி வருபவர். தனது கிராமத்தில் இருந்த இந்தி மொழி சபாவை போராட்டம் செய்து விரட்டுகிறார்.
கயல்விழி எழுதும் கதையை தொடர்ச்சியாக படித்து அவரை பாராட்டியும் பெண்ணியம் பற்றிய அவரது கருத்துக்களையும் ஆதரிப்பவராக இருக்கிறார் செல்வம். செல்வம் கயல்விழி மேல் காதல் கொண்டிருக்கிறார். கயல்விழியின் தாத்தாவிற்கு திடீரென்று புற்றுநோய் இருப்பது தெரியவர தனது கடைசி ஆசையாக தனது பேத்தியின் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கல்யாணமே வேண்டாம் என்று கொள்கையோடு இருக்கும் கயல்விழி தனது தாத்தாவிற்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார். அடையாளம் தெரியாதவர்களை கல்யாணம் செய்துகொள்வதை விட தனக்கு நன்றாக தெரிந்த செல்வத்தை திருமணம் செய்துகொள்வது மேல் என்று அவர் எடுத்த முடிவு விபரீதமாக முடிகிறது.
ஒரு பக்கம் விருப்பமில்லாத கல்யாணம், இன்னொரு பக்கம் கொள்கை என இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் கயல்விழி என்ன சொல்யூஷன் கண்டுபிடிக்கிறார் என்பதே ரகு தாத்தா படத்தின் கதை.
ரகு தாத்தா விமர்சனம்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாக வைத்துக் கொண்டு எளிமையான ஒரு காமெடி டிராமா படமா உருவாகியுள்ளது ரகு தாத்தா. எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டும் தந்தை , ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் அண்ணன், பார்க்க அப்பாவியாக இருந்துகொண்டு மாஃபியா ரேஞ்சுக்கு திட்டம்போடும் அண்ணன் மனைவி, தப்புத் தப்பாக இந்தி பேசு மேலாளர் என படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்ட்ரோ சாங் இல்லாமல், சண்டைக்காட்சிகள் இல்லாமல் எடுத்துக்கொண்ட குட்டியான ஐடியாவை முடிந்த அளவிற்கு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். கீர்த்தி சுரேஷ் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் அதற்கேற்ற வகையில் எதார்த்தமாக அமைந்துள்ளது. ஷான் ரோல்டனின் பாடல்கள் பெரிதாக கவர்வதில்லை என்றாலும் பின்னணி இசை படத்தின் ஓட்டத்துடன் பொருந்தி போகிறது.
என்னதான் காமெடி இருந்தாலும் யூகிக்கக் கூடிய கதையாக இருப்பது படத்தின் பாதகமான அம்சங்களில் ஒன்று. சந்தர்ப்ப சூழல் காரணமாக யாருக்கும் தெரியாமல் இந்தி மொழி கற்றுக்கொள்ளும் காட்சிகள் நம்மை பதற்றமடையச் செய்யாமல் எல்லாம் சுபமாக முடியும் என்று பார்வையாளர்களை ரிலாக்ஸ்டாக வைத்திருக்கின்றன. இதே போல் க்ளைமேக்ஸ் காட்சியிலும் விறுவிறுப்பு இல்லாமல் நிதானமாக கதை செல்கிறது.
தமிழ் சினிமாவில் நாம் பார்த்த அதே காமெடி சப்ஜெக்ட் என்றாலும் ரகு தாத்தா படத்தின் கதை மற்ற கதைகளைப்போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானது
ஒரு பெண் தனது கொள்கைக்காக வாழும்போது அதில் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இன்னும் எதார்த்தத்துடன் தொடர்புபடுத்தி காட்டியிருந்தால் நிச்சயம் இன்னும் கூட நல்ல படமாக உருவாகி இருக்கலாம்.