ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா அக்கினேனி, நாசர் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் கணம். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கதையின் கரு:
ஒரு விபத்தில் இளம் வயதில் தாயை இழந்து அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் ஹீரோ ஷர்வானந்த்(ஆதி). 20 வருடங்களாக அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலையில், காலச்சக்கரத்தின் மூலம் மீண்டும் சென்று தாயை மீட்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.தன் கடந்த காலத்திற்கு சென்று தன் தாயை மீட்டாரா ஷர்வானந்த் என்பதே திரைக்கதை.
ஹீரோவின் நண்பர்கள் சதீஷ்(கதிர்) மற்றும் ரமேஷ் (பாண்டி) தங்கள் எதிர்காலத்தையும் மாற்றி அமைக்க ஆதியுடன் கடந்த காலத்திற்கு செல்கின்றனர்.அவர்களது எதிர்கால வாழ்க்கை மாறிவிட்டதா?? நாசருக்கு இதில் என்ன தொடர்பு? காலச்சக்கரம் காலத்தை வென்றதா என்ற கேள்விகளுக்கான விடையே கணம் திரைப்படத்தின் கதை.
கணம் திரைப்படம் மறுக்கமுடியாத ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர்.தாயை இழந்த மகனாக, ஷர்வானந்த் தனது நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார். 20 வருடங்களுக்கு பிறகு தனது இறந்த தாயை மீண்டும் பார்க்கும் காட்சிகளில் உருகி உருகி நடித்துள்ளார் ஷர்வானந்த். எதிர்கால வாழ்க்கை மேல் அக்கறை உள்ள காதலியாக கதாநாயகி ரித்து வர்மா (வைஷ்ணவி) ஆதிக்கு பக்க பலமாய் இருக்கிறார். ரித்து வர்மாவின் கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.31 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள அமலா அக்கினேனிக்கு கணம் திரைப்படம் சிறந்த கம்பேக் காக இருக்கும்.
மகனின் இசை மேல் உள்ள ஆசைக்கு துணைபுரியும் தாயாக, மகனுக்காக கணவருடன் சண்டையிடும் தாயாக, மகனை தொலைத்து விட்டு தேடும் காட்சிகளில் ரியல் தாயாகவே மாறிவிட்டார். சதீஷ் மற்றும் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சிட் ஷ்ரிராம் குரலில் பேஜாய்யின் மெய்மறக்கச் செய்யும் இசையில் 'ஒருமுறை என்னை பாரம்மா ' பார்வையாளர்கள் கண்களைக் கலங்கச் செய்தது.ஹீரோவின் பாசம் நிறைநத் கண்டிப்பான தந்தையாக ரவிசந்தர் தனது கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
முதல் பாதி விருவிருப்பாக போக, இரண்டாம் பாகத்தில் சின்ன களைப்பை ஏற்படுத்திவிட்டது.இன்டர்வல் ப்ளாக் சஸ்பன்ஸ் படத்தின் புதிய திருப்பமாக அமைந்தது. சைன்டிஸ்டாக வரும் நாசருக்கு காலச்சக்கரத்தை கண்டுபிடித்து இயக்குவதை தவிர பெரிய முக்கியத்துவம் கொடுத்ததாய் தெரியவில்லை.
கோமாளி திரைப்படத்தின் சாயல் சில காட்சிகளில் தெரிகிறது. ஹீரோ மற்றும் நண்பர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சென்று, தங்களின் பள்ளிப்பருவ நினைவலைகளை திரும்ப பெறும் காட்சிகள் இனிமையாக இருந்தது. குறிப்பாக அவர்கள் சிறுவயதில் செய்த பிழைகளை, அருகிலிருந்து அவர்களே திருத்தும் காட்சிகள் சுவாரசியமாக இருந்தது.
தாய் பாசத்தையும் தாயை இழந்து வாடும் வலியையும் நொடிக்கு நொடி கண்முன் கொண்டு வந்து போகச் செய்தது. முன்னதாக சயின்டிபிக் எமோஷனல் படம் எனக் கூறப்பட்ட நிலையில் சயின்ஸின் உதவியுடன் நடந்த எமோஷனல் டிராமா எனலாம்.