‛ஐ லவ்யூ 2... ஐ மேரி 2... ஐ மிஸ்யூ 2...’ இது தான் படத்தின் கதை. மூன்று வரிகளில் மொத்த கதையையும் சொல்லிவிடலாம். ஆனால், அதை திரைக்கதையாக்கியதில் தான் ஜெயித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம்; அதை காண வருவோரை அது திருப்திப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை நியாயத்தோடு எடுக்கப்பட்டுள்ள படம் தான், காத்து வாக்குல ரெண்டு காதல். 




விஜய் சேதுபதிக்கு திருமணம் நடந்தால், அவர் சார்ந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கும் என்கிற வித்தியாசமான சங்கல்பத்தோடு தொடங்கும் கதை. அத்தை, சித்தப்பாக்கள் என ஒரு பெரிய படை பட்டாளமே திருமணம் ஆகாமல் காத்துக்கொண்டிருக்க, காலையில் ஓலா டிரைவராகவும், இரவில் ஃபப் பவுன்சராகவும் பணியாற்றும் விஜய் சேதுபதி, பணியை போலவே, வேளைக்கு இரு காதல் செய்கிறார். காலையில் கண்மணி நயன்தாரா, இரவில் கதீஜா சமந்தா என இருதலைக்காதல் , இளமையோடு நடக்கிறது. 


ஒரு கட்டத்தில் காதல் தெரியவர, இருவரும் விஜய் சேதுபதி தனக்கு தான் வேண்டும் என உறுதியாக நிற்கிறார்கள். வித்தியாசமான ‛லிவிங் டுகெதர்’ ஒப்பந்தத்தோடு, அவர்கள் விஜய் சேதுபதிக்கு காய் நகர்த்துகிறார்கள். இருவரும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. இருவரின் ஆசை நிறைவேறியதா, இருவரை கரம் பிடித்தாரா, அல்லது கழட்டி விட்டாரா விஜய் சேதுபதி என்பதுதான், காத்து வாக்குல ரெண்டு காதல்.




‛ஒரு முட்டையில் இரண்டு ஆம்லைட் போட நினைக்கிறான்...’ என விஜய் சேதுபதி நண்பர் கூறும் டயலாக்தான், படத்தின் மொத்த கதையும். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூகத்தில், இருவருக்கு ஒருவன் என்கிற சிந்தனை கொஞ்சம் அபத்தம் தான்; என்றாலும், சினிமாவை சீரியஸாக நினைக்க வேண்டியதில்லை என்பதால், அதை கடந்துவிட வேண்டியது தான். சிரிக்க வைக்க அவர்கள் எடுத்த ஆயுதமாக அது இருக்கட்டும். ஆனால், ஆயுதம், நன்கு வேலை செய்திருக்கிறது. 


தொடங்கியதிலிருந்து முடியும் வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம் ; அதற்கு கியாரண்டி தருகிறார் விக்னேஷ் சிவன். பிரபு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கிங்ஸ்லி, கலா மாஸ்டர், ஹூசைனி என அனைத்து கதாபாத்திரங்களையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல், முழுக்க முழுக்க பயன்படுத்தியதிலேயே வெற்றி பெற்று விட்டார் விக்னேஷ். படத்தோடு படமாக உருண்டு வரும் பின்னணி இசையும், அவ்வப்போது வரும் பாடல்களும் படத்திற்கு தேவையானதாக உள்ளது. அந்த வகையில், அனிருத் வழக்கம் போல தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். 


வசனங்களில் ஒரு படி மேலே போய், கத்தி போல ஷார்ப்பாய் நிற்கிறார் விக்னேஷ். கத்தி மேல் நடக்கும் கதை; அதை புத்தியாய் கையாண்டு கலக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இது ‛கம் பேக்’ படம். அவர்கள் இருவரிடமும் அனைவரும் எதிர்பார்ப்பது இதை தான். இது தான் அவர்களின் ‛ஜானர்’. இரு கதாநாயகிகளுடன் நடித்து ஜாக்பாட் அடித்தது விஜய் சேதுபதி மட்டுமல்ல; ஒரு டிக்கெட் எடுத்து இரு கதாநாயகிகளை பார்க்கும் ரசிகர்களுக்கும் தான் ஜாக்பாட். 




நயன்தாரா-சமந்தா ஜோடி, படத்தை டாமினேட் செய்கிறது. ஹீரோ உடனான ஜோடியை விட, இந்த ஹீரோயின் ஜோடி தான் படத்தை தெறிக்கவிட்டிருக்கிறது. இருவரும் ரீல் பை ரீல் வந்து கொண்டே இருக்கிறார்கள். பளிச்சிடுகிறார்கள். பார்க்க... பார்க்க அவ்வளவு அழகு இருவரும். அளவு சாப்பாடு தேடி வருவோருக்கு அன்லிமிடெட் சாப்பாடு போட்டு அனுப்புகிறது, காத்துவாக்குல ரெண்டு காதல். 


‛ஒருத்தவரை இரண்டு பேர் கல்யாணம் பண்றதெல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல... அதுக்கு நாம கொஞ்சம் முன்னாடி இருந்திருக்கினும்... இல்ல... இன்னும் கொஞ்சம் முன்னாடி போகனும்...’ என நயன்தாரா பேசும் கிளைமாக்ஸ் டயலாக்தான், படத்தின் லாஜிக் தவறுக்கு இயக்குநர் வைத்த மன்னிப்பு வாசகம். உருகி உருகி காதலித்துவிட்டு, இறுதியில் இருவரும் விட்டுச்செல்வது, எந்த மாதிரியான மனநிலை என்கிற குழப்பம் இருந்தாலும், அதுவும் உங்களை சிரிக்க வைக்கத்தான் எனும்போது, அதையும் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டுதான் வரவேண்டும். 


‛உலகத்துலயே ராசி இல்லாத மனுஷன்னு சொல்லிட்டு... கத்ரினா கைஃப் வரை காதலிக்கிறீயே...’ என ஹூசைனி பேசும் கிளைமாக்ஸ் டயலாக்ஸோடு படம் முடிகிறது. பாடல்களை குறைத்திருக்கலாம்; இருந்தாலும் அவை சலிக்கவில்லை. ஓரிரு இடங்களை தவிர பெரிய அளவில் இரட்டை வசனங்கள் இல்லை என்பதால், ஃபேமிலியோடு பார்க்கும் உத்தரவாதமும் கிடைக்கிறது. தொட்ட அனைத்துமே கத்தி மேல் நடப்பது மாதிரியான கதைக்களம், ஆனால் , எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டே அத்தனையையும் கடந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். 


விஜய் கார்த்திக் கண்ணனின் கேமராவும், ஸ்ரீகர் பிரசாத்தின் கத்திரியும் ரெண்டு காதலுக்கு ரெண்டு கண்ணாக அமைந்துவிட்டன. ஒரே சீரியஸ் படங்களாக வரிசை போட்ட சமீபத்திய வரவுகளுக்கு ‛சடன் பிரேக்’ போட்டு, சத்தமாக சிரிக்க வைத்திருக்கிறது காத்து வாக்குல ரெண்டு காதல். ‛ஒரு முறையாவது கை தட்டல் பெறவேண்டும்’ என காத்திருந்த விக்னேஷ் சிவனுக்கு, படம் முழுக்க கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.