பிஸ்வபதி சர்க்கார் எழுத்தில், சமீர் சக்சேனா இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜாதுகர். இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம். பஞ்சாயத் வெப்சீரியஸ் மூலம் அனைவராலும் அறியப்படும் ஜிதேந்திரகுமார் தான், படத்தின் ஹீரோ. இயல்பாகவே அவர் ஒரு காமெடி நடிகர் என்பதால், இந்த படமும் அதே ரகம் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.




கால்பந்தை கடவுளாக பாவிக்கும் ஒரு நகரில் வசிக்கும் ஜிதேந்திரகுமார், அதே கால்பந்தால் தாய், தந்தையை இழந்ததால், அவருக்கு கால் பந்து மீது மோகம் இல்லை; அதே நேரத்தில் வெறுப்பும் இல்லை. தெருக்களுக்கு இடையேயான கால்பந்து டிராபியில், அவரது நகர் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது தந்தையின் விருப்பம். அவர் மறைந்ததால் அந்த விருப்பத்தை நிறைவேற்ற அவரது சித்தப்பா முயற்சி எடுக்கிறார். 


ஆண், பெண் என அனைவரும் கலந்த அந்த அணி, தொடர்ந்து தோல்வியையே தழுவுகிறது. ஒருபுறம் அந்த அணியை வெற்றி பெற போராடும் சித்தப்பா, மறுபுறம், தன் காதலிக்காக தான் பற்றி இருக்கும் மெஜிஷியன் தொழிலில் சாதிக்க துடிக்கிறார் ஜிதேந்தர். ஒரு கட்டத்தில் காதலியா, கால்பந்தா, மேஜிக்கா என்கிற நிலை. எதில் வெற்றி பெற்று, ஜெயிக்கிறார் ஜிதேந்தர் என்பது தான் கதை.


 விளையாட்டை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும். ஆனால், இந்த படம், அதிலிருந்து மாறுபடுகிறது. பொதுவாகவே விளையாட்டு படம் என்றால், கடுமையான போராட்டம் இருக்கும், இறுதியில் சம்மந்தப்பட்டவர்கள் ஜெயிப்பார்கள். அப்படியெல்லாம் ஒரு வட்டத்தில் அடைபடாமல், இறுதியில் தோல்வியை கொடுத்து, வாழ்க்கையில் ஜெயிக்க வைக்கும் புதிய பார்முலா, பாராட்டப்பட வேண்டியது. 




அழகான காதல்; அதை, அதை விட அழகாக காட்சிப்படுத்திய விதம் என, மிக சிறப்பான காட்சிகள் படத்தில். ஒரு குல்ஃபி ஐஸ் மீதான காதல், எப்படி ஒருவனை மெஜிஷியன் ஆக்குகிறது; எப்படி ஒரு காதல், ஒருவனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை மிக மிக அருமையாக படம் பிடித்திருக்கிறார்கள். வீரர், சூரர் என்றெல்லாம் ஒரு அணியை காட்டாமல், அவர்களின் குறைகளை அதிகம் காட்டி, கலகலப்பாக்கியிருக்கிறார்கள். 


ஒரு புரெபஷனல் கால்பந்து அணிக்கும், ஒரு தெரு கால்பந்து அணிக்கும் என்ன என்ன வித்யாசம் இருக்கும் என்பதை, துல்லியமாக காட்டி, அதிலிருந்து கலகலப்பையும், கண்ணீரையும் காட்டியிருப்பது புதுமை. எல்லா கதாபாத்திரங்களும், மிக கச்சிதமாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். 


நிலோட்பல் போராவின் இசையும், சோமிக் முகர்ஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக இரவில் காதலை வெளிப்படுத்தும் மெஜிஷியனின் மெஜிக் முயற்சியை, சோமிக்கின் கேமரா, அள்ளி வந்து நம் கண்களில் சேர்த்திருக்கும். காதல் காட்சிகளில் ஆருஷி சர்மா, கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். 


சித்தப்பாவாக வரும் ஜாவித் ஜாப்ரி, சீரியஸ் ஆக வேண்டிய இடத்தில் சீரியஸாகவும், பல இடங்களில் சீரியஸ் காமெடியாகவும் கலக்கியிருக்கிறார். ஒரு அணியாக இணைந்து, படத்தை அனைவரும் தாங்கி பிடித்திருக்கிறார்கள், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. குறைகள் இல்லை என்று சொல்ல முடியாது; அதே நேரத்தில் அவை பெரிய குறைகளாகவும் கூற முடியாது.