இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் அமர் சிங் சம்கீலா ( Amar Singh Chamkila) . 1970 முதல் 80 கள் வரை பஞ்சாப் மாநிலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த அமர் சிங் சம்கீலா என்கிற பாடகரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.




பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட பாடல்கள்  என்கிற சாதனை படைத்த சம்கீலா தன்   27 வயதில்  தனது மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொள்ளப்பட்டார். சம்கீலாவின் மரணத்தின் வழியாக ஒரு கலைஞனின் வாழ்க்கையையும், சமூக ஒழுக்கத்திற்கு கலை கட்டுப்பட்டிருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. சம்கீலா படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


அமர் சிங் சம்கீலா (Amar Singh Chamkila)




ஒரு திருமண நிகழ்வில் பாடுவதற்காக சம்கீலா மற்றும் அவரது மனைவி அமர்ஜோத் கெளர் காரில் வந்து இறங்குகிறார்கள். இறங்கிய அடுத்த கனம் அமர்ஜோத் மற்றும் சம்கீலா ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மதப்பற்றாளர்கள், இந்திரா காந்தியின் காவல்படை, சம்கீலாவுக்கு போட்டியாக இருந்த மற்ற இசைக்கலைஞர்கள் என இவர்களில் யாரோ ஒருவர் இந்த கொலையை செய்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி காவல் துறைக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இறந்தவர்கள்  மக்களிடையே ஆபாசமான பாடல்களை பாடி கலாச்சாரத்தை சீர்கெடுத்த இரண்டு நபர்கள்.


யார் இந்த சம்கீலா? ஒருபக்கம் இத்தனை பேர் அவன் மீது வெறுப்பு வைத்திருக்கும் அதே நேரத்தில் கோடிக்கணக்கான சாமானிய மக்கள் சம்கீலாவின் பாடல்களை கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சம்கீலாவின் நண்பர்கள், அவனுடன் சேர்ந்து பயணித்தவர்களின் வழியாக இந்த கதை முன்னும் பின்னும் சென்று நமக்கு சொல்லப்படுகிறது.




சின்ன வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவனாக வளர்கிறான் சம்கீலா. சம்கீலாவின் பாடல் வரிகளை தனித்துவமானதாக மாற்றுவது ஒளிவு மறைவில்லாமல் அதில் இருக்கும் காமத்தைப் பற்றிய வார்த்தைகள். தகாத உறவுகள், ஆண்மையை கேள்வி கேட்கும் பெண்களின் சீண்டல்கள், பெண்களின் இச்சைகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளே சம்கீலாவின் பாடல்களின் பேசுபொருளாக இருக்கின்றன. தனது சின்ன வயதில் தன்னை சுற்றி இருக்கும் பெண்கள் பேசும் வார்த்தைகள், கதைகள், தான் பார்த்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து சம்கீலா தனது பாடல்களின் பேசுபொருளாக இதை வைக்கிறான்.


கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் கவனமீர்த்த சம்கீலாவின் பாடல்கள்,  அமர்ஜோத் கெளர் என்கிற பெண்ணை சம்கீலா திருமணம் செய்துகொள்வது , தன் பாடல்களின் தனித்துவங்களின் வழியாக புகழின் உச்சத்திற்கு சம்கீலா செல்வது என வெவ்வேறு நபர்களின் பார்வையில் படம் தொடர்கிறது. சம்கீலா மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் , காணொளிகள் , சில நேரங்களில் ஓவியங்கள் , என இப்படத்தின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது போலவும்  சில நேரத்தில் இன்றைய பாப் பாடல் ஒன்றை பார்க்கும் நவீனமான அனுபவமும் ஏற்படுகிறது. மறுபக்கம் பஞ்சாபின் அரசியல் சூழ்நிலை , சம்கீலாவின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்கள் , இவை எல்லாம் சேர்ந்து சம்கீலா கொள்ளப்பட்டதற்கான காரணங்களை அலசியபடி செல்கிறது படம்.




ஒரு நபரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படமாக பார்க்கிறோம் என்றால் அதில் இயல்பாகவே நமக்கு ஒரு விலகல் இருக்கும். இது முன்பு எப்போதோ நடந்த ஒரு மனிதனின் கதை என்கிற மனப்பாண்மையே இந்த விலகலை ஏற்படுத்து காரணம் என்று சொல்லலாம். ஆனால் இம்தியாஸ் அலி இந்த கதையை எப்போதோ நடந்த ஒரு கதையைப் போல் சொல்லாமல் நமக்கு நன்றாக பழக்கப்பட்ட ஒருவன் திடீரென்று உயிரிழந்துவிட்டால் ஏற்படும் அதிர்ச்சியை நமக்கு சின்ன, சின்ன காட்சிகளை இடையில் வைத்து கடத்துகிறார். திடீரென்று நினைவுக்கு வந்துபோகும் அந்த நபரின் உருவத்தைப் போல்தான் சம்கீலாவை நம் மனதில் பதிய வைக்கிறார்.


சம்கீலாவின் பழைய புகைப்படங்கள், காணொளிகள், அனிமேஷன் , ஸ்ப்லிட் ஸ்கிரீன் என இந்த படத்தை பலவிதங்களில் சுவாரஸ்யமான ஒரு ஆவணமாக மாற்றுகிறார். ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு இதற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தான் பார்த்து வளர்ந்த சமூகத்தை தன் பாடல்களில் பிரபலித்தார் சம்கீலா , காமம் பற்றி ஒவ்வொரு மனிதர்களுக்கு உள்ளே இருக்கும்  ஆசைகள் , கற்பனைகள், சில நேரங்களில் ஆபாசமான சிந்தனைகளையே சம்கீலாவின் பாடல் வரிகள் பிரதிபலித்தன . மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட சம்கீலாவுக்கு பெண்கள்தான் மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள்.


பெண்கள் சம்கீலாவின் பாடல்களை எந்த அளவு கொண்டாடினார்கள் என்பதற்கு உதாரணமாக ரஹ்மான் இசையில் கொண்டாட்டமான ஒரு பாடலும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தனை விமர்சனங்கள் இருந்தும் கடைசியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டாலும் சம்கீலா மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு கலைஞன் எனதை தவிர்க்க முடியாத ஒரு உண்மையாக இப்படத்தில் முன்வைக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. 


நடிப்பு




அமர் சிங் சம்கீலாவாக இப்படத்தில் பாடகர் தில்ஜீத் தோஸஞ்ச் நடித்துள்ளார். சில நேரங்களில் காதை பொத்திக்கொள்ளச் செய்யும் பாடல்களை பாடிய சம்கீலா, உண்மையில் சத்தம்போட்டு பேசாத இனிமையான சுபாவங்களைக் கொண்டவனாக இருக்கிறார். எப்போதும் முகத்தில் சிரிப்பு மலரும் அந்த இயல்பை தில்ஜீத் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். சம்கீலாவின் மனைவியாக பரினீதி சோப்ரா நடித்துள்ளார். கூச்ச சுபாவமுள்ள குணிந்த தலை நிமிராத அமர்ஜோத் கார் தனது கனீரென்ற குரலில் பாடும்போது கூட தலை நிமிர்வதில்லை. படத்தில் இடம்பெற்ற சம்கீலாவின் பாடல்கள்  எல்லாவற்றையும் இரண்டு நடிகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளது பாராட்டிற்குரியது.


ஏ.ஆர் ரஹ்மானின் இசை


இம்தியாஸ் அலி படங்கள் என்றாலே ரஹ்மான் சூஃபி நிலைக்கு சென்றுவிடுவார் போலும். படத்திற்குள் சம்கீலாவின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்ற என்றால் சம்கீலாவின் வாழ்க்கையில் அவனது மனதில் நிகழும் மாற்றங்களை ஒலிப்பதாக இருக்கிறது ரஹ்மானின் இசை. ராக்ஸ்டார் படத்திற்கு பின் ரஹ்மான் இந்தியில் முழுமையான ஒரு ஆல்பம் ஹிட் கொடுத்திருக்கிறார். 


குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு நபர் பாடலாசிரியர் இர்ஷாத் கமில். பஞ்சாபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த படத்தில் பாடல்களை கேட்பது ஒரு வெற லெவல் அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு சூழ்நிலையையும் மனநிலையையும் கவித்துவத்தின் உதவியோடும் கச்சிதமான சொற்களால் கோர்த்திருக்கிறார். படத்தின் மொத்த உணர்ச்சியையும் தனது பாடல் வரிகளால் வேறு ஒரு தளத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறார் இர்ஷத் கமில்.


அமர் சிங் சம்கீலா படம் கலை என்பது சமூகம் கற்பிக்கும் ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமா அல்லது உண்மையை பிரதிபலிக்க வேண்டுமா என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்து இன்னும் எத்தனையோ முக்கியமான விவாதங்களை தொடங்கி வைக்கிறது.