Hi Nanna Movie Review: நானி , மிருணாள் தாக்கூர் நடித்துள்ள 'ஹாய் நன்னா' திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஷோர்யுவ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர, ஜெயராம், ஷ்ருதி ஹாசன், குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஹேஷம் அப்துல் வஹப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரா என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள ‘ஹாய் நன்னா’ படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


கதை


ஃபேஷன் போட்டோகிராஃபராக இருக்கும் விராஜ் (நானி)  தனது மகள் மஹிமாவுடன் வாழ்ந்து வருகிறார். 65 ரோஸஸ் என்கிற ஒரு நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகள் மஹிமாவிம் மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கும் ஒரு தந்தையாக இருக்கிறார் விராஜ்.




தன் அம்மாவைப் பற்றிய மகளின் கேள்விகளை ஒவ்வொரு முறையும் சமாளித்து வருகிறார். அடுத்த முறை நிச்சயம் அம்மாவைப் பற்றி சொல்வதாக சத்தியம் செய்துவிட்டு அதை நிறைவேற்றாததால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் செல்கிறார் மஹிமா. மஹிமாவை மீட்கும் கதாநாயகி யாஷ்னா (மிருணாள் தாக்கூர்) விராஜின் மனைவியைப் பற்றிக் கேட்டு வற்புறுத்துகிறார். விராஜின் மனைவி யார்? தன் மகளை அவர் பிரிந்திருக்கும் காரணம் என்ன? தற்போது வந்திருக்கும் யஷ்னாவிற்கும் இந்த தந்தை மகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதே ‘ஹாய் நன்னா’ படத்தின் கதை.


முதல் பாதி


விராஜின் வாழ்க்கை, தன் அம்மாவைத் தேடி ஏங்கும் மஹியின் ஏக்கம், தந்தை மகளுக்கு இடையிலான பாசமான உறவு , காதல் காட்சிகள்  என்று உணர்வுப்பூர்வமான ஒரு கதையாக செல்கிறது முதல் பாதி. இந்த பகுதிகள் பெரும்பாலும் ஒரு விதமான பரிச்சயமான காட்சிகளால் மட்டுமே நிறைந்திருக்கின்றன. ஒரு வேளை இப்படி இருக்குமோ ஒரு வேளை அப்படி இருக்குமோ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் படத்தில் வந்து நம்மை இரண்டாம் பாதிக்கு தயார் செய்துவிட்டு முடிகிறது.




இரண்டாம் பாதி


தந்தை - மகள் ஆகிய இருவரைச் சுற்றிக் கதைத் தொடங்கினாலும் இரண்டாம் பாதி பல்வேறு உறவுச் சிக்கல்களையும்  சேர்த்து பேசுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிட்டாலும் ஒரு சில காட்சிகளில் இருக்கும் உணர்ச்சிகளின் தாக்கம் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.


நிறை, குறை


படத்தில் மிக முக்கியமான ஒரு ட்விஸ்ட்டைத் தவிர எந்த விதமான புதுமையான அனுபவமும் இல்லாமல் காட்சிகள் யூகிக்கக் கூடியவையாக இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் அழகாக காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் லொக்கேஷன், பொருட்கள் என எல்லாம் ஏதோ பார்பீ உலகத்தில் இருப்பது போல் திகட்ட திகட்ட ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன.




சாப்பிட்டுத் தூக்கியெறியப்பட்ட ஒரு சிறு சாக்லேட் பேப்பரைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு ஃப்ரேமும் செயற்கையாக இருக்கின்றன. இசை ஒரு சில இடங்களில் மிகப் பிரமாதமாக இருந்தாலும் படத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்வையாளர்கள் ஒரு காட்சியில் முழுவதுமாக கதையில் ஒன்றுவதற்கு முன்பே முந்திக் கொள்கின்றன.  நானி ஒவ்வொரு காட்சியிலும் ஆடை விளம்பரத்திற்கு வருபவர் போல கூலான ஆடைகளில் மட்டுமே காணப்படுவதை கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.


நடிப்பு எப்படி?


சீதா ராமம் படத்தைப் போல் இந்தப் படத்திலும் மிருணாள் தாக்கூர் நடிப்பதற்கு அதிகம் ஸ்கோப் இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார். ஆனால் உணர்ச்சிகரமான ரொமாண்டிக் காட்சிகளில், அவர் தங்க நகை விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போல் இருக்கிறது. நானியின் நடிப்பு சிறப்பாக இருந்தபோதும் அவர் நடிப்பு முழுமையாக வெளிப்படும் வகையிலான அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது பெரும் குறையே! படப்பிடிப்புத் தளத்திற்கு சுற்றுலா வந்த ஷ்ருதி ஹாசனை பயன்படுத்தியது போல் அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேரக்டர். படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் ஜெயராம் மற்றும் நாசர்  போன்ற நடிகர்களுக்கு இன்னும் நியாயம் சேர்த்திருக்கலாம். 


மொத்தத்தில்...


ஒரு கட்டத்திற்கு மேல் என்ன மாதிரியான கதையைப் பார்க்க போகிறோம் என்று பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. தெரிந்த கதையில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்கிற பொறுமை அவர்களிடம் இருக்கிறது, ஆனால் அவர்களை திருப்திப்படுத்த தவறிவிடுகிறது ஹாய் நன்னா’ திரைப்படம்!