வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்ற அம்மா அம்மா பாடலை கேட்கும்போதெல்லாம் தனக்கு ஏற்படும் உணர்வுகளை நடிகை சரண்யா பொன்வண்ணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நடிகை சரண்யா:


மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. இன்றைய திரையுலகில் இவருக்கு அறிமுகமே தேவையில்லை. நடிகர் விஜய் தவிர்த்து, அஜித் முதல் சதீஷ் வரை அனைவருக்கு அம்மாவாக நடித்து விட்டார். தற்போது நடிகர் சதீஷ் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை (டிசம்பர் 8) தியேட்டரில் வெளியாகிறது. 


இதுதொடர்பான ப்ரோமோஷன்களில் சரண்யா பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு  நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், “ராம் படத்தில் இடம் பெற்ற ‘ஆராரிராரோ’ மற்றும் வேலை இல்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்ற ‘அம்மா அம்மா’ பாடல் இதில் எந்த பாடலை கேட்கும்போது நீங்கள் மனதுக்கு நெருக்கமாக உணர்வீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘எனக்கு வேலையில்லா பட்டதாரி படம் வர்றதுக்கு முன்னாடி ஆராரிராரோ பாடல் தான் ரொம்ப மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் அம்மா அம்மா பாடல் வந்த சமயத்தில் ஒரு விஷயம் நடந்தது. அதாவது என்னோட அம்மா இருந்த வரைக்கும் அவங்க ஆசைப்பட்ட மாதிரி நான் எப்படியெல்லாம் ஜெயிக்கணும்ன்னு நினைச்சாங்களோ, அதுல ஒரு விஷயம் கூட நடக்கல. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், ஃபிலிம்பேர் அவார்டு ஒன்றாவது வாங்க வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். ஆனால் அந்த விருது நிகழ்ச்சியோட அழைப்பிதழ் கூட வரவில்லை. அம்மா என்னிடம், என்னடி நீ பெரிய ஹீரோயின், ஒரு அழைப்பிதழ் கூட வரமாட்டுக்குது என சொல்வார்கள். அதெல்லாம் அப்போது பெரிய விஷயமாக தெரியவில்லை. 


அம்மா அம்மா பாடல்:


ஹீரோயினாக நடிச்ச வரைக்கும் நான் ஒரு விருதும் வாங்கியதில்லை. நான் அம்மாவாக நடிச்ச காலக்கட்டத்தில் என்னோட அம்மா உயிரோட இல்ல. அதன்பிறகு அந்த கேரக்டரில் நடிக்க ஆரம்பிச்சேன். இப்போது 5 ஃபிலிம்பேர் அவார்டு, தேசிய விருது எல்லாம் வாங்கிருக்கேன். வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா அம்மா பாடலில் கடற்கரையில் நடந்து செல்லும்போது காலடி தடத்தின் அருகில் இன்னொரு காலடி தடம் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எனக்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் எங்க அம்மா என்னோட இருப்பது போலவே தோன்றும். அதனாலேயே அம்மா அம்மா பாட்டு ரொம்ப நெருக்கமான ஒன்றாகும்.