அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஆண்டிப்பட்டியாக இருந்தாலும் சரி, பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவது என்று வந்துவிட்டால் எல்லா ஊரும், நாடும் ஒரே மாதிரிதான் என்பதை செக்ஸ் எஜூகேஷன் (Sex Education) தொடரைப் பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம்!
ஒரு சின்ன பிளாஷ்பேக்..
ஒரு வேளை இந்தத் தொடரை இன்னும் பார்க்கத் தொடங்காதவர்கள் இதை படிப்பார்களானால் அவர்களுக்கு சுருக்கமாக ஒன்றை சொல்ல வேண்டும். காமம் தொடர்பான வெளிப்படையான உரையாடல்கள் இல்லாத ஒரு சமூகத்தில் தலைமுறையினர் எந்த மாதிரியான பாலியல் ரீதியிலான குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அடிப்பாடையாக வைத்து அதன் மேல் பல விதமான குடும்பப் பின்னணியில் இருந்து வரும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்கள் அனைத்தையும் நகைச்சுவைக் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
இதில் முக்கியக் கதாபாத்திரமாங்களான ஓட்டிஸ் மற்றும் மேவ் தொடக்கத்தில் இருந்து ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டிருந்தாலும், சில நேரம் எதிர்பாராத சூழல்களினாலும், தங்களது முட்டாள்தனத்தினாலும் எப்படி விலகி போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பது மற்றொரு கதையாக சென்று கொண்டிருக்கிறது.
முந்தைய மூன்று சீசன்களுக்கும் நான்காவது சீசனுக்கும் இருக்கும் ஒரு வித்தியாசத்தை சொல்ல வேண்டும் என்றால், முந்தைய பாகங்கள் காமம் தொடர்பான புரிதல்களின் அவசியத்தையும், அப்படி இல்லாத போது ஏற்படும் விளைவுகளையும் பல கோணங்களில் விரிவாக அலசியது. நான்காவது பாகம் தங்களது கடந்த காலத்தின் பாதிப்புகளில் இருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் மீள்வதையும், அந்தப் பயணத்தில் தங்களுக்கான சரியான பாதையைத் தேர்வு செய்வதில் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு வரும்படியாக எடுக்கப்பட்டிருக்கிறது.
கதை
பள்ளிக் காலம் முடிந்து புதிதாக ஒரு கல்லூரிக்குச் செல்கிறான் ஓட்டிஸ். முந்தைய பாகத்தில் ஓட்டிஸின் அம்மா ஜீன் மில்பர்ன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கடந்த காலத்தில் தன்னையும் தனது மகனையும் தனது கணவன் விட்டுச் சென்றபோது தனியாக நின்று தன் மகனை வளர்த்து, தனக்கென ஒரு அடையாளத்தையும் சேர்த்துகொண்ட ஜீனை, இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தபின் அவரது கடந்த காலம் மீண்டும் துரத்துகிறது.
புதிய கல்லூரிக்குச் செல்லும் ஓட்டிஸ் மற்றும் அவரது நண்பன் எரிக், தங்களது முற்றிலும் சுதந்திரமான ஒரு சூழலை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். தங்களது பழைய பள்ளி மாதிரி பிற்போக்குத் தனமாக இல்லாமல், இந்தக் கல்லூரி அனைத்து விதமான பாலியல் அடையாளங்கள் உடைய மாணவர்களையும் சமமாக நடத்துவது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மாணவர்களுக்கு பாலியல் பிரச்னைகளுக்கான ஆலோசனை வழங்க கல்லூரியில் ஒரு சின்ன க்ளினிக் நடத்த முடிவு செய்கிறான் ஓட்டிஸ். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற மாணவ ஆலோசகர் ஒருவர் அந்தக் கல்லூரியில் இருப்பது தெரிந்து அதனால் பொறாமைக்கு உள்ளாகிறான். இயல்பாகவே பாலியல் குறித்தான தெளிவு தனக்கு இருக்கிறது என்று நம்பும் ஓட்டிஸ்ம் தனக்கு போட்டியாளராக இன்னொருவர் இருப்பதை ஏற்றுகொள்ள மறுக்கிறான்.
இதனால் கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு இதற்கு ஒரு முடிவு காண தீர்மானிக்கிறான். மறுபக்கம், தன்னைப் போன்ற ஒருபாலின ஈர்ப்புக் கொண்ட மாணவர்களையும், மாற்று பாலினத்தவர்களையும் சந்திக்கிறான் எரிக். கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தங்களது குடும்ப சர்ச்சில் ஞானஸ்னானம் பெறச் சொல்லி வற்புறுத்துகிறார் எரிக்கின் அம்மா.
ஆனால் தன்னையும் தனது பாலியல் அடையாளத்தை மறைத்துக் கொண்டால் மட்டுமே தன்னை தன் உறவினர்களும் கடவுளும் ஏற்றுகொள்வார்கள் என்றால், அது தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்கிறான் எரிக். அதே நேரத்தில் தன்னுடைய சமூகத்திற்காக தனது குடும்ப அடையாளத்துடன் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்கிறான்.
எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற கனவில் அமெரிக்கா சென்றுள்ள மேவ் மற்றும் ஓட்டிஸ் செல்ஃபோன் மூலமாக காதலித்து வருகிறார்கள். அதே நேரத்தில் தொலைதூர காதலர்களுக்கு இடையில் ஏற்படும் அனைத்து விதமான சிக்கல்களும் இவர்களுக்கு இடையில் வருகின்றன.
முந்தைய கதாபாத்திரங்களுடன் மேலும் சில புதிய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் எட்டு எபிசோட்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பாகம். தனது தந்தையினால் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்ட ஆடம் மட்டும், கல்லூரிக்குச் செல்லாமல் ஒரு குதிரை பண்ணையில் வேலைக்குச் சேர்கிறான்.
அதே நேரத்தில் தனது மகனை புரிந்துகொண்டு எப்படியாவது அவனது அன்பை பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார் அவனது தந்தை. இறுதியாக தனது மகனை பாசமாக கட்டிபிடிக்கக் கூட தெரியாமல் தந்தை தவிக்கும் ஒரு காட்சி, இந்த தொடரின் உச்சமான காட்சிகளில் ஒன்று!
இப்படி தனித்தனி சிக்கல்கள் வழியாக பயணிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கான உண்மையை சென்றடைவதை இந்த பாகத்தில் நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய கடந்த காலத்தின் பாதிப்புகளில் இருந்து மீண்டு சமூதாயத்தின் முன் தீர்மானங்கள் முன்பும் தங்களுக்காகவும் போராடுகிறார்கள்.
ஒரு சமூகத்தில் தனியாக இருந்து குழந்தைகளை வளர்த்து அதே நேரத்தில் வெளி உலகத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெற ஒரு பெண் எத்தனை மன உளைச்சல்களை கடந்து வரும் சூழல் இருக்கிறது என்பதை நாம் ஓட்டிஸின் அம்மாவின் கதையில் தெரிந்துகொள்கிறோம்.
அதே நேரம் தங்களது குழந்தைகள் எப்படியானவர்களாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் பிரச்னைகளை தங்களுடைய நம்பிக்கைகளை சமூக நிர்பந்தங்களைக் கடந்து அவர்களுடன் துணை நிற்கா விட்டால் அந்த குழந்தைகள் இப்பெரும் திரளில் தொலைந்துவிட்டவர்களாக தவிப்பதை பார்க்கிறோம்.
ஓட்டிஸ் மற்றும் எரிக் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒரு கருப்பினருக்கும் ஒரு வெள்ளையினருக்கும் இயல்பாகவே மாறுபடும் சமூக வேற்றுமைகளை சுட்டிகாட்டி இருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேல், மாற்று பாலினத்தவர்கள் தங்களையும் இந்த சமூதாயத்தில் ஒருவராக உணருவதற்கு எத்தனை பிரயத்தனங்கள் செய்தாலும் ஏற்படும் தனிமையுணர்ச்சியை மிக உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறது செக்ஸ் எஜூகேஷன்.
தங்களில் ஒருவரானவர்கள் இயற்கையின் ஒரு புதிய பரிணாமத்தின் விளைவாக இத்தனை சமூக அழுத்தங்களை கடந்து தன்னை முன் நிறுத்திக்கொள்ள முயற்சித்தாலும், தன்னை புரிந்துகொள்ளவோ ஆதரவளிக்கவோ யாரும் இல்லை என்கிற உணர்வுக்கு மிக எளிதாக வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அப்படியான நிலையில் ஒரு சமூகம் இணைந்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய காலத்தின் அவசியத்தை உணர்த்த முயற்சிக்கிறது இந்தத் தொடர்!
இந்த ஒட்டுமொத்த தொடரில் நீங்கள் ஒரு தற்கொலை காட்சியைக் கூட பார்க்க மாட்டீர்கள். எந்த ஒரு பிரச்னையும் வன்முறையால் தீர்க்கப்படுவதை இந்தத் தொடர் முன் நிறுத்தவில்லை. சொல்லப்போனால் ஒருவகையில் இந்த எட்டு எபிசோடுகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் தன் மீதான விமர்சனங்களை எல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டே வருகிறது.
எந்த ஒரு கதாபாத்திரமும் நல்லவர், கெட்டவர் என்கிற இருமைக்குள் இல்லாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடத்தைக்கும் ஒரு தெளிவான பின்னணி இருக்கிறது. அதே நேரத்தில் தங்களது கடந்த காலத்தை காரணமாக காட்டி, எந்த வித அறம் தவறிய செயல்களையும் நியாயப்படுத்துவதில்லை இந்த கதாபாத்திரங்கள். தங்களுடைய கடந்த கால அனுபவங்கள் எந்த மாதிரியான மாற்றங்களை தங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை உணர்ந்த பின் ஒரு மனமாற்றத்தை அடைகிறார்கள்.