அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர்  நடித்துள்ள அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் லுக் வெளியாகி இருக்கிறது.


அனிமல்


அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். ராஷ்மிக மந்தனா இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.


இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது,. முன்னதாக இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.


கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த நிலையில் ஒரு சில சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனாவில் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.


ராஷ்மிகா மந்தனா


கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து தமிழுக்கும் வருகை தந்துள்ளார். தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் களமிறங்கி இருக்கும் ராஷ்மிகா இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.






அனிமல் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் இதுவரை இல்லாத தனித்துவமான ஒரு அழகில் தோற்றமளித்துள்ளார் ராஷ்மிகா.


பெரிதாக மேக்க அப் எதுவும் இல்லாமல், பின்னங்கழுத்தின் கலைந்த முடிகளில் ஒளி படர, லேசாக கலைந்த பொட்டுடன் காட்சியளிக்கிறார் ராஷ்மிகா. கேங்ஸ்டராக ரன்பீர் கபூர் ரத்தம் சிந்த சிந்த ஒரு பக்கமும், மறுபக்கம் சாந்தசொரூபினியாக ராஷ்மிகாவும் என, மீண்டும் ஒரு அர்ஜூன் ரெட்டி சாயல் அடிக்கிறதே என்று பார்வையாளர்களுக்குத் தோன்றலாம்.


அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது


தனுஷூடன் கூட்டணி


தற்போது தனுஷ் நடிக்க இருக்கும் டி51ஆவது படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்குகிறார். தனுஷ் ராஷ்மிகாவைத் தவிர்த்து, நாகர்ஜூனா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.