”எல்லாம் சரியாகிடும். அவரு கொஞ்ச நாள்ல திருந்திடுவார்” - அடி, உதைபட்டு, ‘சமூக மரியாதைக்காக, கெளரவத்துக்காக!’ வாழ்க்கையை நகர்த்தும் பல லட்சக்கணக்கான பெண்களின் மனதில் எப்போதும் வந்துபோகும் சமாதானம் இதுதான். அல்லது, இதுதான் அவர்கள் தங்கள் காயங்களுக்கு, ’Placebo'-வாக தாங்களாகவே பயன்படுத்திக்கொள்ளும் பொய் ஆறுதல்.


ஆலியா, (பத்ருன்னிசா) ஹம்சா (குடிகாரக் கணவன்)- திருந்துவான் என அப்படித்தான் அடிவாங்கிக்கொண்டு காத்திருக்கிறாள். மறுபடியும், மறுபடியும் மன்னிக்கும் பத்ருன்னிசா, ஹம்சாவின் வெறியும், ஆண் திமிரும் தனக்குள் வளரும் குழந்தையை (மகளாக அவள் நினைத்த குழந்தை) கொன்றுபோடும் அந்த நாளில் தெளிவு பெறுகிறாள். எப்படியாவது இழந்த தனது மரியாதையையும், மதிப்பையும் தனது கணவன் ஹம்சாவிடம் பெற்றுவிட நினைக்கும் பத்ருன்னிசா, அவளின் அத்தனை ஆழ்மன ஆத்திரத்தின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்கிறாள். அவனைக் கட்டிவைத்து அடித்தாலும், சமைத்து ஊட்டிவிட்டு அறிவுரை சொன்னாலும், அவன் மாறப்போவதே இல்லை என்பது அவளுக்கு அப்போது புரிகிறது. அம்மாவாக ஷெஃபாலி ஷா, சொன்ன தவளை-தேள் கதையின் சாராம்சம் புரிகிறது. தவளை-தேள் கதை நமக்கும்தான்..



அங்கங்கு தூவப்படும் காமெடிகள், கொஞ்சம் த்ரில்லிங் அனுபவத்தை கெடுக்கலாம். ஆனால், கடைசியில் நீங்களும் ”பத்ருன்னிசாவைப்போல மரியாதை யாராலும் கிடைக்காது. அது உங்களால் உங்களுக்கு தரப்படும் விஷயம்” என்பதை புரிந்து, கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். இந்த படத்தில், மரணங்கள் உங்களைக் கரைக்கவில்லையென்றால், Its ok. நீங்களும், நானும் தோழர்களே.


ஆலியாவும், ஷெஃபாலியும் உங்களுக்கு இரண்டு விஷயங்களைக் கொடுக்கப்போகிறார்கள்.. ஒன்று - உடம்புக்கு வெளியில் கேட்கும் இதயத்துடிப்புகள், இரண்டு - ஆழ்ந்த நிம்மதி பெருமூச்சு. ட்ரிப்பிள் கேரண்டி. கங்குபாயாக மனதில் நின்ற ஆலியா, பத்ருவாக கண்களால் உருக்குகிறார். முகத்தசை நடிக்குமா ஆலியா? எனக் கேட்கிறீர்களா? ஆம் என சொல்கிறார், அதை செய்தும் காட்டுகிறார். ரோஷன் மேத்யூ, பாலிவுட்டுக்கு கிடைத்திருக்கும் புது முத்து. பிடித்துக்கொண்டால் பாலிவுட்டுக்கு நல்லது.


இறுதியாக ஹம்சா என்னும் விஜய் வர்மா. நேச்சுரலாகவே கோபம் வரவைக்கும் உடல்மொழி, முகம், சைகை எல்லாம். அதுவும் ஆணாதிக்க சைகைகளை, அரை கிலோ போட்டால், ஒரு கிலோ உபரி கிடைக்குமளவுக்கு எக்ஸ்பிரஷன்.. யார் சாமி நீ?



ஜஸ்மீன் கே.ரீன் என்னும் அறிமுக இயக்குநர் இயக்கி, பர்வீஸ் ஷேக் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தில், ஹெஃபாலி ஷா பேசும் வார்த்தைகள் இவை... 


“டைவர்ஸா, அதை நான் எப்படி வாங்க சொல்றது? அது இன்னும் ஆபத்தாச்சே.” அதெல்லாம் இப்போ சாதாரணம்தானே என பதிலளிக்கும் போலீஸ் ஆபிஸருக்கு, “அது ட்விட்டர்ல இருக்கவங்களுக்குதான், எங்களுக்குல்லாம் இல்ல” என்று சொல்லும்போது உங்களின் தூக்கம் காணாமல் போகலாம். நியாயங்கள் யாருக்கானது என்னும் சமூகத்தின் கீழ்மை உங்களின் கன்னத்தில் பளாரென்று அறையலாம்.


Ok, bye the bye..


ஆண்களுக்கு.. சொல்றதுக்கு ஒன்னுமில்ல (சொன்னா மட்டுமே புரியாது) Violence on Woman is Injurious to Everything


பெண்களுக்கு... ’அன்பில்லன்னா அடிப்பேனா’ என்பது ஆகப்பெரும் பொய், புரட்டு.


உங்களுக்கான மரியாதையும், அன்பும் வலுக்கட்டாயமாக பெற்றுவிடுகிற விஷயம் அல்ல, உங்களிடம் இருப்பது.