‛தஹன்... ராகன் கா ரகசியா’ தஹன் என்பது புதைக்கப்பட்ட அல்லது அழுகிய உடலை குறிக்கும் பழங்கால இந்தி வார்த்தை என்கிறார்கள். இதில் ராகன் என்பது, ஒரு மாயாவியை குறிக்கும் பெயர் என்கிறார்கள். புதையுண்ட மாயாவியின் ரகசியத்தை கூறும் கதை தான், தஹன்-ராகன் கா ரகசியா. இந்தியில் இது போன்ற வெப் சீரியஸ்கள் அடிக்கடி வருகிறது. ஆனாலும் , அவை அனைத்துமே கவனம் பெறுகின்றன.
காரணம், அவர்கள் பெரும்பாலும், பழங்கால பழக்க வழக்கத்தை ஒட்டிய கதைகளையும், சடங்குகளையும் வைத்து அந்த சீரிஸை உருவாக்குகிறார்கள். இந்த கதையும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஷிலாஷ்பூரா என்கிற கிராமத்தில் நடக்கும் கதையாக, காட்டப்படுகிறது. பாலைவனம் போன்ற ராஜஸ்தானை அறிந்திருந்த நமக்கு, மலைக்கோயிலும், மர்மமான மக்களும் கொண்ட கதைக்களம் நிறைய புதுமையை தரும்.
அங்குள்ள மலையை குடைந்து திட்டம் ஒன்றை தீட்ட முயற்சிக்கிறது அரசு. அதற்கான முயற்சிக்கு வரும் கலெக்டர்கள் கொல்லப்படுகிறார்கள். குகைக்குள் இருக்கும மாயாவி , உடலில் புகுந்து செய்கிறான். ராகன் என்கிற மாயாவியை அழிப்பதற்காகவே ஒரு குடும்பம் அந்த கிராமத்தில் வாழ்கிறது. இதற்கிடையில் புதிய கலெக்டராக பெண் ஒருவர் மகனுடன் வருகிறார். கணவன் இல்லாத அவர், துடிப்பானவராக செயல்படுகிறார்.
மலையை தகர்க்க கூடாது என்று உள்ளூர் பூஜாரி ஒருவர் தலைமையில் ஒரு குழு எதிர்க்கிறது. அந்தப்பணியால் வேலை கிடைக்கும் என கலெக்டர் கூறியதை நம்பி ஊர் தலைவர் அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறார். இப்படி இரு குழுக்களாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிக் கொண்டிருக்க, திடீரென குகைப்பணியில் விபத்து ஏற்பட்டு, அதில் காயம் அடைந்த ஒருவர் மூலமாக மாயாவி வெளியே வருகிறான்.
அடுத்தடுத்து அவன் செய்யும் கொலைகளும், அதை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளும் தான் முழு நீள தொடரின் கதை. பழங்கால கதைகள் எல்லாம் சொல்லாமல், டைட்டில் போட்டதுமே நேரடியாக கதைக்குள் வந்த இயக்குனர், மொத்தமுள்ள 9 எபிசோடையும் பரபரப்பாகவே நகர்த்துகிறார். இடையிடையே கதாபாத்திரங்களை அறிந்து கொள்வதில் சில சிரமம் இருப்பதால், அது குழப்பமாக தெரிகிறது.
அதே போல், 6வது எபிசோடில் சீரியல் முடிந்ததாக நினைக்கும் போது, புதிய சஸ்பென்ஸ் கொடுத்து படத்தை நகர்த்துவது என கொஞ்சம் நீளம் தெரிகிறது. சதா மர்மங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டே இருப்பதும், அதை தேடி அழைவதும், கோயிலில் மந்திரங்கள் செய்வதும், மர்மமான கட்டுப்பாடுகளும் படம் பார்க்கும் போதே கொஞ்சம் பீதியாக்குகிறது.
என்ன தான் பெரிய எபிசோடாக இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு கொஞ்சமும் சலிக்காத அளவிற்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். மாயாவி யார்... ஏன் இவை நடக்கிறது, ரகசியம் தான் என்ன என்பதில் இருக்கிறது ட்விஸ்ட். உண்மையில், சுவாரஸ்யமான ஒரு நீண்ட தொடரை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த தொடர் கட்டாயம் விருந்தளிக்கும். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த தொடர், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பார்க்கலாம்.