Bommai Movie Review in Tamil: யதார்த்த இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பொம்மை’. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பொம்மை படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். 


கதையின் கரு


மன நல பிரச்சினைகளால் அவதிப்படும் நிலையில் பொம்மைகள் செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் ராஜூவுக்கு (எஸ். ஜே.சூர்யா) ஒரு குறிப்பிட்ட பொம்மை  மேல் காதல் உள்ளது. அதனை சிறு வயது காதலி நந்தினியாக (பிரியா பவானி ஷங்கர் ) நினைத்துக் கொள்கிறார். அதனை யாரிடமும் விற்று விட வேண்டாம் என தனது கம்பெனி சூப்பர்வைசரிடம் தெரிவிக்கிறார். இதனிடையே குடும்ப நிகழ்வுக்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் கோபத்தில்  சுப்ரவைசரை கொலை செய்கிறார்.


இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக விற்கப்பட்ட பொம்மையை ஒரு ஷோ ரூமில் அவர் கண்டுபிடிக்கிறார். பின் அங்கேயே வேலைக்கு சேர்கிறார். ஒருபக்கம் போலீசார் கொலை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தான் நினைத்த வாழ்க்கையை எஸ்.ஜே.சூர்யா பொம்மையோடு வாழ்கிறார். அவர் போலீசில் சிக்கினாரா?.. பொம்மையுடன் அவர் நினைத்த வாழ்க்கை வாழ முடிந்ததா என்பதே இப்படத்தின் கதையாகும்.


நடிப்பு எப்படி?


படத்தின் பிரதான கேரக்டர் பொம்மை தான். பிரியா பவானி ஷங்கர் பொம்மையாகவே மிளிர்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு படத்தை தாங்குகிறது. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிகளில் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள சாந்தினிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.


படம் எப்படி?


யோசித்து பார்த்தால் லாஜிக் இல்லாத ஒரு  கதை. எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ட்ரெய்லர் வெளியான போதே இருந்தது. ஆனால் மெதுவான மற்றும் பெரிய அளவில் அலட்டல் இல்லாத திரைக்கதை படம் பார்ப்பவர்களை சலிப்படையவே செய்கிறது. அதேசமயம் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் தொடர்பான கற்பனை காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நம்மை அறியாமலும் ஒரு புன்முறுவலை ஏற்படுத்துகிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது.  கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பம்.


யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசையில் கலந்து வரும் ‘தெய்வீக ராகம்’ பாடலின் ஹம்மிங் ரசிக்க வைக்கிறது. ஆக மொத்தத்தில் எந்த வயதிலும் விளையாட்டு பொருளான 'பொம்மை’யை பார்த்தால் ரசிப்பவர்கள்.. இந்த ‘பொம்மை’யையும் ரசிப்பார்கள்...!


மேலும் படிக்க: Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்..! ரசிகர்களுக்கு சந்தோஷமா..? சங்கடமா..? இதோ விமர்சனம்..!