Adipurush Review in Tamil: ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் முழு விமர்சனத்தை காணலாம்.


ஆதிபுருஷ்:


சிறு வயதிலிருந்தே மெகா தொடர்களில் ராமாயணக்கதையையும் அதன் கிளைக்கதைகளையும் பார்த்து வளர்ந்த மக்களுக்கு முழு கதை தெரிந்தாலும் அதை எத்தனை முறை சீரியலாகவோ படமாகவோ எடுத்தாலும் அதனை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் உள்ளது. அதுபோல் இம்முறை புராணக்கதையான ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமே ஆதிபுருஷ். ரகு குல ராமனின்(பிரபாஸ்) பிறந்த கதை வளர்ந்த கதை என ராமயணத்தை பால காண்டத்தில் இருந்து தொடங்காமல் அதனை பற்றிய குட்டி அனிமேஷனை மட்டும் காட்டி, நேரடியாக ஆரண்ய காண்டத்தில் இருந்து கதையை தொடங்குகிறார் இயக்குநர் ஓம் ரவுத். 




ராமாயணம்:


14 ஆண்டுகளை வனத்தில் கழிக்கும் வனவாச காலத்தில், தங்க மான் மூலம் மாயத்தை பயன்படுத்தி சீதையை(கிருத்தி சனோன்) இலங்கைக்கு கடத்தி செல்கிறான் ராவணன்(சைஃப் அலி கான்) ஜடாயு எனும் கழுகு சீதையை மீட்க முயற்சி எடுக்கிறது. இருப்பினும் அந்த செயல் இராவணனிடம் பலிக்காமல் போய் விடுகிறது.


பின்னர் தனது முத்து மாலையை அடையாளத்திற்காக விட்டுச்செல்கிறாள் சீதை. அந்த முத்து வானரர்களிடம் சென்று அடைகிறது. மறுபக்கம் திக்கு தெரியாமல் முழிக்கும் ராமனுக்கு சுக்கிரீவனிடம் செல்ல வேண்டும் என்று சாப முக்தி பெறும் பெண் ஒருவள் சொல்கிறாள். இதை வைத்து ராமன் ஹனுமனை சந்தித்து, சீதையை மீட்பதே கதை. இதன் கதை ஊருக்கே தெரிந்திருந்தாலும், ஓம் ராவத்தின் பார்வையில் சற்று வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கும் கதையே ஆதி புருஷ்.



படத்தின் கதாபாத்திரங்கள் :


பிரபாஸ் : சீதைக்கும் இவருக்கும் இடையேயான காதல் காட்சிகளில் ராமனாகவே பிரபாஸ் வாழ்த்திருந்தாலும் அங்கங்கே பாகுபலியின்  சாயல் காணப்படுகிறது. பிரபாஸின் முகமும் உடல் அமைப்பும்
வி.எஃப்.எக்ஸ் செய்யப்பட்டது போல் உள்ளது. 


சீதை : சீதையாக நடித்திருந்த கிருத்தி சனோன் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளார். ராமன் தன்னை மீட்க வருவான் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கிருத்தியின் நடிப்பு பாராட்டதக்கது.


சைஃப் அலி கான் : இலங்கை மன்னனான ராவணன் ஆஜானுபாகுவான தோற்றத்தை பெற்றுள்ளார். இருப்பினும் புராண காலத்து இராவணின் நடையும், உடையும், சிகை அலங்காரமும் சற்றும் பொருந்தவில்லை. நடிப்பும் அப்படித்தான்.




மற்ற கதாபாத்திரங்கள் : ராமனின் தமையன் லக்‌ஷ்மணன், ராம பக்தன் ஹனுமன், இராவணனின் மனைவி மண்டோதரி, இராவணனின் தமக்கை சூர்ப்பனகை, இராவணனின் தமையன் விபிஷணன், விபிஷணன் மனைவி, இராவணனின் மகன் இந்தரஜித், சாபத்தில் விடுப்படும் ஒரு பெண் ஆகிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நடிகர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சுக்ரீவன், வாலி, ஜாம்பவான் ஆகிய மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் காண்பிக்கும் வானர கூட்டத்தை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. ஃப்ளாணட் ஆஃப் தி ஏப்ஸ், கிங்காங் படங்களிலும் வரும் குரங்குகளை வானரர்களாக காண்பித்துள்ளனர். 


பாடல்கள் : கதைக்கு தேவையான பின்னணி இசை, சீதா ராமனுக்கு ஒரு காதல் பாட்டு, ஈசனுக்கு இராவணன் பாடும் பக்தி பாடல், ஜெய் ஸ்ரீ ராம பஜனை என அனைத்தும் கோயிலிற்குள் நுழைந்த உணர்வை கொடுத்தது.


படத்தொகுப்பு : நிச்சயமாக படத்தொகுப்பு குழுவினரை பாராட்ட வேண்டும். எது தேவை, எது தேவையற்றது என நன்கு உணர்ந்து வேலை பார்த்துள்ளனர்.


ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் : படத்தின் ஹீரோவான ராமனை இன்னும் சற்று அழகாக காண்பித்து இருக்கலாம். ராவணனின் அண்டர்-கட் ஹேர் ஸ்டைல், உடை போன்றவை படத்தின் உணர்வை சீரழிக்கிறது. மற்றபடி இதில் வரும் பெண்களுக்கு அழகான ஒப்பணையும் உடை வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.


முதல் பாதியும் இரண்டாம் பாதியும் எப்படி?


முதல் பாகத்தில் நம்மை பொறுமையாக கதைக்குள் மூழ்க வைக்கும் ஓம் ரவுத்தின் திரைக்கதை, இரண்டாம் பாகத்தில் சூடு பிடிக்கிறது. யுத்த காண்டத்தை சுருக்கி எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ்
ஒன்ற வைக்கிறது.




படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?


 ஹாலிவுட்டையும் நம்ம ஊர் புராண கதைகளையும் க்ராஸ் ஓவர் செய்த ஓம் ரவுத்தின் படம் ஒரு சில இடங்களில் பார்க்க க்ரிஞ்சாக உள்ளது. புராண கதைகளின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள், அப்படியே திரும்ப சென்று விடுங்கள்.


மெகா சீரியல் போல் இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை ஏனென்றால் இப்படத்தில் காதல், செண்டிமெண்ட், பாடல்கள், ஆக்‌ஷன் என கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனையும் உள்ளது. டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆதி புருஷ் குழந்தைகளின் மனதை கவரலாம். என்னதான் இருந்தாலும் ஞாயிற்றுகிழமை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் விண்டேஜ் ராமயணத்தை போல் வராது. 


மேலும் படிக்க : Bommai Review: லாஜிக்கே இல்லாத கதை.. ஆனால் மேஜிக் பண்ணியதா? - பொம்மை படத்தின் விமர்சனம் இதோ..!