‘ஜெயில்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் அடுத்தப்படைப்பாக ‘அநீதி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் விமர்சனத்தை காணலாம். 


படத்தின் கதை 


வெயில், அங்காடித்தெரு என எளிய மனிதர்களின் கதைகளை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் ஒரு எளிய மனிதரின் கதையை கையில் எடுத்துள்ளார். முதலாளிகளால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு என்னதான் தீர்வு என்பதை தன் ஸ்டைலில் கதை சொல்லியிருக்கிறார். 


சாக்லேட்டை கண்டாலே கடுப்பாகும் அர்ஜூன் தாஸ் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உணவு டெலிவரி பாயாக வரும் அவருக்கு  துஷாரா விஜயனுடன் காதல் உண்டாகிறது. எதிர்பாராதவிதமாக இருவரும் ஒரு குற்ற வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர். அதன்பின் இருவரின் வாழ்க்கையையும் என்னாகிறது? எளிமையான மனிதர்களுக்கு சட்டம் சமமாக இருந்ததா? இல்லை அநீதி இழைக்கப்பட்டதா? என்பதை திரைக்கதை வழியாக சற்று பதைபதைப்பை ஏற்படுத்தும் வகையில் சொல்லியிருக்கிறார் வசந்தபாலன்.


நடிப்பு எப்படி? 


அர்ஜூன் தாஸ்எப்படி ஹீரோ கேரக்டருக்கு செட் ஆவார் என நினைத்தவர்களுக்கு,அந்த நடிப்பின் மூலமே பதில் சொல்லியிருக்கிறார். யாரும் இல்லாதவராக, மனநல பிரச்சினையால் அவதிப்படுபவராக, காதலி வந்த பின் மகிழ்ச்சி கொள்பவராக, அந்தக் காதலியின் நம்பிக்கையை இழக்கும்போது உடைந்து போவபவராக என சில இடங்களில் முகத்தில் நடிப்பு வராவிட்டாலும் உணர்வுகளால் நம்மைக் கவர்கிறார். 


துஷாரா விஜயன், பக்கத்து வீட்டு பெண்ணாக தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக கையாண்டுள்ளார். வீட்டின் தேவைக்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பது, முதலாளியிடம் அடிமையான வாழ்க்கை வாழ்வது, அவர்களை நினைத்து பயப்படுவது என மிளிர்கிறார்.  


இவர்களுக்கு அடுத்து சாந்தா தனஞ்செயன் முதலில் கோபம் வரவைக்கும் பணக்காரராக வலம் வந்தாலும், தனிமையின் கொடுமை, பிள்ளைகளின் பாசாங்கு மனநிலையை உணரும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். மற்றபடி வனிதா விஜயகுமார் தொடங்கி அனைத்து நபர்களும் கொடுத்த கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். 


படம் எப்படி?


எப்படியாவது ரசிகர்களைக் கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்த டீமும் கடும் உழைப்பை செலுத்தியுள்ளது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. 


அர்ஜூன் தாஸ் தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகளை இன்னும் அழுத்தமாக கொண்டு போயிருக்கலாம். அதேபோல் கதையின் சூழலை ரசிகர்களின் எண்ணத்தில் கொண்டு சென்றது ரசிக்கும் வகையில் உள்ளது. மேலும் க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் இடம்பெறும் வன்முறை காட்சிகளின் வீரியத்தை சற்றே குறைத்திருக்கலாம். மொத்தத்தில் எளிய மக்களுக்கான நீதியை கேட்கும் இந்த ‘அநீதி’ படத்தில், காட்சிகளின் வழியே அதன் அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் பாராட்டைப் பெற்றிருக்கும்.