திரெளபதி, ருத்ர தாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர், மோகன் ஜி. அவரது பட வரிசையில், தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம்தான் பகாசூரன். இப்படத்தில், பிரபல இயக்குனர் செல்வராகவன், ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வராகவன் மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பகாசூரன் படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படம் எப்படிதான் இருக்கு? முழு விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கதையின் கரு:
யூடியூபில் க்ரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் ரிட்டையர்டு ஆர்மி மேனாக வருகிறார் நட்ராஜன். இவரது சொந்த அண்ணன் மகள் ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்தியதால்தான் ரம்யா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை கேஸை முடிக்கின்றனர். ஆனால், ரம்யாவின் மொபைல் போன் நடராஜனின் கைக்கு கிடைக்கின்றது. அதில், ரம்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் இருந்து நீ தப்ப முடியாது என யாரோ இவரை மிரட்டுவதையும் தெரிந்து கொள்கிறார் நட்ராஜன்.
அந்த மிரட்டும் நபர் யார் என்று தேடுகையில், பல பெண்கள் பண கஷ்டத்தினால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், நட்ராஜன் அறிந்து கொள்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவோரையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் தேடித்தேடி கொள்கிறார், பீமராசு(செல்வராகவன்).இருவரது கதையும் வெவ்வேறு வகையில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகின்றன. பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை. இதற்கிடையில் செல்வராகவனின் கலங்க வைக்கும் ஃப்ளேஷ் பேக், அனைவரும் அறிந்த அதே சமூக கருத்து என படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் அளவிற்கான கதையை எடுத்துள்ளார் மோகன்.ஜி.
போர் அடிக்காத திரைக்கதை:
பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜியின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக கூறப்படுவது, அவரது போர் அடிக்காத திரைக்கதைதான். அதையே இந்த படத்திலும் ஃபாலோ செய்துள்ளார். என்னதான் சில இடங்களில் அவரது கருத்துகளை ஏற்க முடியவில்லை என்றாலும், அவர் கதையை நேர்த்தியாக கொண்டு போன விதமும் பலரை வியக்கத்தான் வைக்கிறது.
இருந்தாலும், முதல் பாதி படம் முடிவதற்கு முன்பாகவே பலர் ‘இன்னுமாடா இன்டர்வல் விடல’ என்று கேட்கும் சத்தம் காதில் விழத்தான் செய்கிறது.
அசத்தல் பர்ஃபாமன்ஸ் கொடுத்த செல்வராகவன்!
பீஸ்ட் படத்தில் குட்டி ரோல் ஒன்றில் நடித்த செல்வராகவன், அடுத்து கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் வெறிப்பிடித்து கொலை செய்யும் மனிதராக நடித்திருந்தார். செல்வாவிற்கு அதே ரோல்தான் இந்த படத்திலும்.
முதல் காட்சியிலேயே ஒருவரை சரமாறியாக போட்டுத்தள்ளும் செல்வராகவன், அடுத்த சீனில் நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் ருத்திராட்ச கொட்டயுமாக வருகிறார். ஆரம்பிக்கையில் அவரது நடிப்பு மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனம் முழுவதும் அவர்தான் இருக்கிறார். தனது மகளின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளும் நேரத்தில் கொடூரமான பீமராசுவிற்கும், ஃப்ளாஷ்பேக்கில் அன்பான அப்பாவாக சாந்தமான பீமராசுவையும் நன்கு வித்தியாசப்படுத்தி பார்க்க முடிகிறது.
மகளை இழந்து கலங்கும் காட்சியிலும், தன் மகளைப் போல யாரும் இறக்கக்கூடாது என அவர் பலரை துவம்சம் செய்யும் காட்சியிலும் ரசிகர்கள் அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறார், செல்வா.
பிண்ணனி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார், சாம் சி.எஸ். ஆனால், பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாக உள்ளதாக எதுவும் மனதில் ஒட்டாமல் நிற்கின்றன.
‘என்னங்க கதை இது’
இந்த டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல “எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது” என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளனர். பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, “தப்பு தப்பு தல மேல கொட்டு” என்பதைப் போல படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தனது காதலருக்கு முத்தம் கொடுத்ததை வீடியோ எடுத்த சிலர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக செல்வராகவனின் மகள் தனது தந்தையிடம் வந்து கூறுவார். அப்போது, “பெரிய தப்பு பன்னிட்டேன் பா..” என்று கூறி கதறுவார். அப்போது செல்வராகவன், “அழாதம்மா, கண்ணு ராஜாத்தி” என்று கூறிவாரே தவிர “நீ செய்ததில் ஒன்றும் தவறில்லை” என்று ஒரு வார்த்தைக் கூட கூறமாட்டார்.
மேற்கூறியதைப் போல, படத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அதையெல்லாம் பூசி மொழுகக் கூட இயக்குனர் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருதத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம்.
மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.